Tuesday, January 18, 2011

ஆதியும் அந்தமும் குருவே..

வாழ்க வளமுடன்


குருவே சரணம்.


காணும் பலவித்தோற்றங்கள் எல்லாம் எண்ணத்தின் வடிவங்களாய் மட்டுமே கருமையத்திலே பதிவாகிறது.

கடந்த கால அனுபவமாய் நமக்குள் இருக்கும் எதுவும் கூட, எண்ணங்களாய்த் தான் மேலே வருகிறது. அதுவே செயல்களாய், ஒருவரின் அடையாளமாய் பெர்சனாலிடியாய் வடிவமாகிறது.

எத்தனையோ கோடி எண்ணங்களோ, அத்தனை பதிவுகளும் செயல்களாக மலர்ந்து விடுகிறது முன்பின்... இதனால் தான் பிறவித் தொடர் நீடிக்கிறது என்று சொல்வார்கள்.. அதாவது எண்ணங்களின் பதிவுகள் என்பது தான் மனிதனை ஆட்டிவைக்கிறது என்பார்கள்...

சீடன் என்பவன் தன் எண்ணத்தின் பின் செல்லும் போது, தன் பதிவுகளைப்பார்த்து பிரமிக்கிறான். எப்போது குருவைப்பற்றிக்கொண்டு செல்கிறானோ அப்போது, குருவின் தன்மை கருமையத்திலே பதிந்து, அதுவே எண்ணத்தின் ஓட்டத்தை சீர் செய்து எண்ணத்தின் அலைகள் புதிதாக அதிகம் எழாமல் பார்த்துக்கொள்ளுவதோடு, அந்த விழிப்பு நிலையிலேயே தொடர்ந்து இருக்க வைப்பதால், தியானம் நிகழ்வது எளிதாகிறது.

இருப்பது இந்த உடல் என்று எடுத்துக்கொள்ளும் போது, தியானம் மனம் என்ற அளவிலே ஆரம்பித்து மனம் சொல்லும் போது முடிகிறது. அங்கே தியானம் ஏற்படவே இல்லை.

இருப்பது குரு என்ற ஒன்றே, அதுவே இறை நிலை என்ற ஆழ்ந்த தொடர்பிலே சீடன் தவம் செய்யும் போது, அங்கே தனது உடல் என்ற நிலையை விட்டொழித்து விடுகிறான். அங்கே சீடன் தனித்து இல்லாமல், குருவே தவம் செய்து இறை நிலையோடு கலந்து பேரின்பம் எய்துகிறான்... அங்கே விழிப்பு நிலையிலே, சீடன் எப்போதும் இல்லாமல் இருப்பது, குரு எப்போதும் நீடித்து நிலைப்பதுமாக இருந்து விடுகிறது.. இங்கே ஏமாற்றமே இல்லை... அறிவாக குரு எப்போதும் இருக்கிறார் என்கிற அந்த உணர்வு எள்ளளவும் மாற்றமின்றி நீடித்து இறைனிலையோடு கலக்கிறது.

குருவே அமர்ந்தார்... குருவே தன் இருப்பை நினைத்தார்... குருவே உணர்ந்தார். குருவே கலந்தார்.. குருவே இறையோடு ஒன்றானார்.. இப்படி எல்லாம் குருவே என்றாக வேண்டும்....முனைப்பு என்றை நீக்கிவிட்டால், குருவே எல்லாம் என்றாகும்.

இங்கே விழிப்பிலே இருந்து மாறாது அனைத்தும் நிகழும்.

ஆதி அந்தம் ஆன எந்தன் இறைவனே குரு என்று சரணாகதி அடையும் போது, ஆனந்தத்திலே விம்மி விம்மி அழுது கரையும் போது தான் சீடன் அந்த சுகத்தினால், குருவை பொத்தி பொத்தி வைத்து, அந்த பேரின்ப உணர்வை நினைத்து நினைத்து ஏங்கி தவிக்கும் பாக்கியம் பெற்றவனாய் வாழும் நிலை கிட்ட குருவே சரணம்...

இனி எண்ணம் என்று ஒன்று வந்தால் அது குருவை, மௌனத்தை உணர்த்தும் ஒன்றாகவே இருக்கவேண்டும்.. சென்ற இடமெல்லாம் மௌன நிலை பரவ வேண்டும்.. குருவின் நிலையை வாய்மூடி மௌனத்திலே இருப்பாய் நின்று உணர்த்தவேண்டும்... அந்தப்பாக்கியம் பெற்றவனாய், குருவின் பிள்ளை என்ற அடையாளமாய் சீடன் வாழ்ந்து முடிக்க வேண்டும்..

ஆதியும் அந்தமும் குருவே..
குருவே சரணம்..

1 comment:

  1. thanks for your response but i could not understand what you are coming to say in this...

    ReplyDelete