Wednesday, July 8, 2020

மௌன மொழி

வாழ்க வளமுடன்...


 எல்லையில்லா குருவருள்தாள்பணிந்து வணங்குகிறேன்.


மனிதனாகப்பிறந்து மாபெரும் ஞான நிலையை எட்டிய புத்தர் வாழ்ந்த போது, தன்னைப்போலவே ஒவ்வொரு சீடனும் தன் முன் மௌனத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை தன்முனைப்பை வென்ற புத்தர் கண்டுகொண்டே இருந்தார். அவருடன், தன் உறவினரான ஆனந்தர் கிட்டதட்ட 50வருட ஞானவாழ்வில் கூடவே இருந்தார். புத்தரின் ஒவ்வோர் அசைவிலும் புத்தர் கூடவே இருந்தார். புத்தரின் பேச்சை பதிவு செய்வதும், அவரின் வார்த்தைகளை சக மனிதர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்வதற்க்கு அனைத்து ஏற்றவர் ஆனந்தர்...

புத்தர் வாழ்ந்த போதே, ஆயிரக்கணக்கான சீடர்கள் ஞானம் பெற்றனர்... மௌன வேள்வியில் தோய்ந்திருந்த புத்தர் பல இடங்களுக்கும் நடந்தே சென்றார் சீடர்களுடன்... அடர்ந்த காட்டில் நடந்து நகரங்களை அடைவார் புத்தர்... அவர் நடந்து சென்ற காட்டில், சிங்கம், புலி போன்ற ஜீவன்களும், புத்தரின் முன் அமைதியானது... ஆதலால் புத்தருக்கு எந்த விலங்கினாலும் கூட துன்பம் நேரவில்லை...

புத்தருடன் கூடவே பல ஆண்டுகள் இருந்த ஆனந்தருக்கு, தாம் ஞானம் பெறவில்லை என்ற கேள்வி எழுந்தது... அப்போது புத்தர் சொன்னாராம்.. நீ என்னை உன்னுடைய சகோதரனாகப் பார்க்கிறாய்... ஆகையினால் எனக்கும் உனக்கும் இடையிலே குரு சீடன் என்கிற பந்தம் ஏற்படவே இல்லை... நான் என்ன சொல்கிறேனோ அதை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு எடுத்துச் சொல்ல ஒரு அமைப்பை ஏற்படுத்துவதோடு நின்று விடுகிறாய்...  என் சொற்கள் உனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட நீ பொறுமையாய் உள்ளுக்குள்ளே அமைதியை ஏற்படுத்தவே இல்லை.. ஆனால் என் மௌனத்தை உனக்குள் ஏற்படவே இல்லை என்பதை புத்தர் புரிய வைத்தார்...

அன்று இரவு, ஆனந்தர், புத்தரின் அருகில் தனியாக அமர்ந்து மெல்ல அமைதியாக ஆழ்ந்தார் தனக்குள்ளே... புத்தரின் மௌனம் அவருக்குப் புரிந்தது...

 கண்களில் நீர் கொட்டிய அந்தக்கணத்திலே, அயர்ந்து இருந்த புத்தர் கண் விழித்து, ஆனந்தரைப் பார்த்து புன்னகைத்தார்... அன்று ஆனந்தரும் ஞானம் பெற்றதாய் வரலாறு எழுதிக்கொண்டது.

 நமது குரு நமக்கு இதுவரை வார்த்தைகளாச் சொன்னதை புலன்களைக் கொண்டு கேட்டுவந்தோம்.... மௌனத்தின் மொழியை அவரோடு இணைந்து உணர, நாம் அவரைப்போலவே இறைனிலையோடு நின்று உரைக்க ஆசிரியர் பயிற்சிபெற்ற நாம் ஒன்று கூடுவோம்... ஒவ்வோர் ஆசிரியருக்கும் குருவுக்கும் இடையில் இருக்கும் மௌனத்தை நாம் அடுத்து வந்து சேர இருக்கும் குருவின் பிள்ளைகளுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது...  இன்று நாம் ஆனந்தரைப் போல மௌனத்தில் ஒன்று சேரவேண்டும் குருவுடன்...

 குருவின் மௌனத்தை நாம் பேசவேண்டும்... மௌன மொழியில் உலகை நோக்கி வாழ்ந்து குருவின் தகவலைச் சொல்லவேண்டும்...

 வாழ்க வளமுடன்.



Saturday, December 2, 2017

சரணாகதியென்னும் சாந்த நெறி

வாழ்க வளமுடன்...
.

 நாம் இப்போது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம் என்பது போல எண்ணுவதற்கு இடம் இருப்பினும், எல்லாம் வல்ல இறை நிலையானது, இதை உணர்பவரின் மூலத்தில் இருந்து கொண்டு ஒரு விழிப்பான அழைப்பு தருகிறது.... அந்த அழைப்பைப் பெற்று மூல நிலையோடு ஒன்றுவதற்கு நமக்கு இருக்கும் ஒரு உதவி குரு மட்டுமே...

 செயல்கள் நாம் தான் செய்கிறோம்... என்கிற போது, முனைப்பு ஒளிந்து கொண்டு முழுமையாய் நிறைவு பெறாமல் வைத்துவிடுகிறது...  கொஞ்ச நாள் தவம்... கொஞ்ச நாள் தவமின்றி என்ற இரு பக்கங்கள் பொதுவாக நமக்குத் தெரிகிறது...

 வாழ்வில் எது நிகழ்ந்தாலும், அதை இன்ப துன்ப உணர்வாக அனுபவிக்கிறோம்... புலன் என்ற அளவில் அது பதிவாகிறது நமக்குள்.... இந்த இன்ப அளவில் நமக்குள் பதிவானவுடன், எதையோ சாதித்த உணர்வு நமக்கு எட்டியவுடன், தவமானது கலைந்து விடுகிறது... உலகாய விசயங்களில் (புற விசயங்களில்) மனது செல்ல ஆரம்பிக்கும் போது, சறுக்கி விட்டதாக அதே மனது பதிவு செய்கிறது...

 இதனால் தான், புலன்களைத்தாண்டி நாம் தவத்தில் ஆழ்ந்து செல்ல வேண்டி வருகிறது...  தவத்தில் இன்னும் உழைக்கவேண்டி இருக்கிறது என்ற யதார்த்த நிலையை குருவிடம் முழு மனதோடு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்... விழிப்பு நமக்குள் மலர்ந்து விட வேண்டும்..  இன்ப துன்ப அளவில் நாம் திருப்தியடைய முடியாது.... 

 தவத்தில் குருவின் ஆற்றலை உணரும் வரை தவம் செய்ததாகக் கூட கருத வேண்டியதில்லை.... இதை தவத்தில் இவ்வளவு  நாள் செய்தோம் என்ற பதிவைக் கொண்டு அணுகாது, நேர்மையாக குருவின் சாட்சியில் சீடன் உண்மையோடு நின்றால் தான் முன்னேற்றம் சாத்தியம்....

 குரு ஒரு கவியில் சொல்வார்....

  உயிரறிய அறிவறிய ஆர்வமுள்ளோர்
  உருக்கமுடன் எனைச்சார்ந்தால் உரைப்பேன் உண்மை....                                                                           

என்ற குரு கொடுத்திருக்கிற உறுதிமொழி சத்தியமானது தான் ஆனந்தமுடன் உணர்ந்து சொல்லும் வரை, சீடனுக்கு தவத்தில் முழுமை இல்லை....

 இன்ப துன்பம் என்ற புலன் உணர்வுகளைக் கடந்தால் மட்டுமே தான் மனம் என்ற அலை ஒடுங்கி உயிராகும்... உயர்ந்தால் அதுவே தான் அறிவாகவும் இருக்கிறது என்று அறிவிக்கும் பேறு கிட்டும்... அது குரு சொன்ன வரிகளை ஏற்கிறேன் என்ற நிலையாக இருக்கும் குறைந்த பட்சம்...

 தவத்தில் புலன்களைக்கடந்த நிலையைக்கூட சாட்சியாக கவனிக்கமுடியும், அப்போது இன்பமும், துன்பமும் இங்கில்லை என்ற யதார்த்தமானது சாசுவதமாக அறிவில் தெளிந்து விடும்.... 

 நான் இதைச்செய்கிறேன், அதைச்செய்தேன் என்ற பதிவுகள் எல்லாம் புலனறிவே.... அலை வடிவில் நான்... என்ற நிலையில் இருந்து கொண்டால்,பேதம் இயல்பாக இருக்கும்... நல்லது அல்லது, கீழ் மேல், உயர்வு தாழ்வு, ஆண் பெண், இப்படி பேத நிலைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.... புலன்களானது ஒடுங்கும் போது, இந்த பேதமும் ஒடுங்கி விடுகிறது... அப்போது ஓர்மை நிலை கிட்டிவிடுகிறது... ஓர்மையில், மனமானது ஒடுங்கி அதுவே உயிராகிறது....

 உயிர் அறிய என்ற கேள்விக்கு குரு தரும் அனுபவமாக, தவத்தில் உணரும் நிலையே தவத்தில் மேன்மை... புலன்களைக் கடக்கும் நிலையில், குருவின் இருப்பானது, சீடன் என்ற சிட்டுக்குருவியின் கால்களில் ஒரு நூலைக்கட்டி இழுப்பதைப்போல.... அறிவின் இருப்பிடத்தில் ஆற்றல்வலிமையுடன் இருந்து கொண்டு அறிவை முழுமையை நோக்கி அழைத்துச்செல்கிறார்... செல்வார்... இந்த நியதி, எப்போதும் இப்போதும் கூட மாற்றமின்றி இருக்கிறது... 

 மாற்றமில்லா நிலையான அறிவோடு இணைந்து ஒன்றாய் நிற்கும் கணத்தில், அறிவென்ற குருவுக்குள் சீடன், சீடனுக்குள் குரு என்ற அறிவு முழுமையாய நிறையும்...

 குருவானவர் தனது கவியில்,

 தனையடக்கித் தலைவனையே
  முன்வைத்து ஒழுகும் நெறி
 சரணாகதியென்னும்
  சாந்த நெறி. இந்நெறியில்
 தனைத்தலைவனாய்க் காணும்
  தன்மை இயல்பாய் வளரும்.
 தருக்கொழியும். ஆசிரியன்
  தவக்காப்பில் உயிர் உய்யும்...


 தனைத்தலைவனாய்க் காணும் தன்மை இயல்பாய் வளரும்... என்ற பேதமில்லா நிலை எய்தும்போது முனைப்பு முழுமையாய் ஒடுங்கி அறிவாய் இருப்பாய் தெளிவாகும்....

 சீடனுக்கு முனைப்பு ஒடுங்கிவிட்டது எனில், குரு சொன்ன விதத்தில் இருந்ததாகவே இருக்கும்...  இது எந்த மார்க்கம் எனினும் கூட.

 குருவிடம் மானிடன் பரிபூரண நம்பிக்கை வைக்க வேண்டும்... பக்தனின் பலம் குருவிடமிருந்தே கிடைக்கிறது... குருவிடம் வைத்திருக்கிற பக்தி, பரமனிடம் வைக்கிற பக்தியிலும் மேலானது... என்று தன்னிடம் வந்தவர்களிடம் சொல்வாராம் ஷீர்டி சாயிபாபா....

 வாழ்க வளமுடன்....

Death(?) -- An experience...

வாழ்க வளமுடன்...
 
எல்லாம் வல்ல குருவின் அருளால் அனைவரும் வாழ்க வளமுடன்.

சென்ற மாதம் நான் எங்கள் சொந்த ஊருக்குச்சென்றபோது முதலில் ஆழியாருக்குச்சென்று குருவின் முன் 4 நாட்கள் அவரோடு பேசி, கவிதை சொல்லி, தியானம் செய்து, ஆனந்தமாக இருந்தது...
 குருவிடம் என் வாழ்வின் நோக்கம் என்ன? எதனை நோக்கி என் வாழ்வு நகர்கிறது? இப்படி நிறைய கேள்விகளைக்கேட்டிருந்தேன்...
4 நாட்கள் சென்றதே தெரியவில்லை... 4வது நாள் அறிவுத்திருக்கோயிலை விட்டு வெளியே வந்தோம்... எங்கள் பையன் ரமணன், அருட்பெருஞ்சோதி நகரைவிட்டு வரமாட்டேன் என்று அழுது அடம் பிடித்தான்... சமாளித்து வெளியே வந்தேன்... மெதுவாக எண்ணம் வந்தது... அட, நமக்கு ஏன் இந்த மாதிரி அடம் பிடிக்கமுடியவில்லை? என்று எண்ணியபடி நிற்க, பேருந்து வந்து நின்றது பொள்ளாச்சிக்குச் செல்ல...
 பேருந்தில், பாடல் போட்டார்கள்...முதல் பாடல்... ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்... அவ்வளவே.. என்னால் அழுகையை நிறுத்த இயலவில்லை...அப்பா... என்னால் முடியவில்லை... மறைவாக கண்ணைத் துடைத்துவிட்டு, பயணம் தொடர்ந்தோம்...

  ஊருக்கு வந்து சேர்ந்தோம்... பொங்கல் பண்டிகை தித்திப்பாக வந்து சென்றது... குடும்பத்துடன் சிலவருடங்களுக்குப்பிறகு ஒன்றாக இருக்கும் வாய்ப்பு... அனுபவித்தோம்...

 என்னுடைய வலது கை நடுவிரலில் ஏற்பட்ட சதைவளர்ச்சியை அறுவைசிகிச்சை செய்ய 17ம்தேதி நாள் குறித்தானது... சிறிய சிகிச்சைதான்... ஆனாலும் மருத்துவமனையில் அனுமதித்து செய்யவேண்டியதானது... அனுமதிக்கப்பட்டேன்...17ம்தேதி...
 ஆழியாரில் இருந்து கொண்டு வந்த மகரிஷியின் பாடல்களை கேட்டபடியும் அவ்வப்போது முணுமுணுத்தபடியும் இருந்தேன்... இருந்தாலும் அறுவைசிகிச்சை செல்லும் நேரம் வந்தது...அவர்கள் தரும் ஒரு துணி மட்டும் உடுத்திக்கொள்ளவேண்டும், மேலும் தள்ளும் வண்டியில் தான் செல்லவேண்டும் என்பதெல்லாம் எதிர்பார்க்கவில்லை...  அந்த துணியை உடுத்திக்கோண்டு,அந்த வண்டியில் உட்காரவைத்து என்னை அழைத்துச்சென்றார்கள்... ஒரு வித பீதியை கொடுத்தது... என்னடா இது நல்லா தானே இருக்கோம், நடக்கவைத்துச்செல்லலாமே, எதுக்கு இதெல்லாம் என்று தோன்றியது...
இருந்தாலும் குருவின் இறைவனை கண்டுகொண்டேன் என்ற பாடலை மட்டும் விடாமல் முணுமுணுத்துக்கொண்டே சென்றேன்... 
 அங்கே என்னை படுக்க வைத்தார்கள்... கை மறுத்துப்போவதற்கு ஊசி போட்டனர்...15 நிமிடம் மற்ற தயாரிப்புகள் நடந்தது... கை மறுத்துப்போவதற்குள் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது... அவ்வோர் நொடியும், கை வலி அதிகமானது... ஒவ்வோர் கீரலுக்கும் குருவிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.. அப்பா வலிக்கிறது... வலிக்கிறது என்று... ஒரு கட்டத்தில், தாங முடியாமல் வாய்விட்டு சொன்னேன், அப்பா வலிக்கிறது... டாக்டர் உடனே, மயக்கம் வருவதற்கான ஆக்ஸிஜன் குழாய் என் மூக்கின் அருகில் பொருத்தச்சொன்னார்...

 கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை மயக்கம் வர ஆரம்பித்தபோது மரணம் நெருங்குவது போலவும் அதை நினைவு என்ற அலையால் தடுப்பது போலவும் தோன்றியது... மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது... மரணம் நெருங்குவதைப்போல உணர்த்தியது... வரிசையாக, பாபாஜி,லாஹிரி, யுக்தேஸ்வர், யோகானந்தர்,விராலிமலை குரு, ரமணர், வள்ளலார்,அன்னை, அரவிந்தர் எல்லோரையும் நினைத்து வணங்கினேன். மயக்கம் மேலும் அழுத்தியது... மரணம் நெருங்கிவிட்டது... இனி தடுக்க இயலவில்லை...முடியவும் இல்லை.. ரமணன் (குழந்தையின் நினைவு வந்து) வாழ்த்தினேன், வாழ்க வளமுடன். மேலும் மயக்கம் அழுத்தியது... கடைசியாக என்னவேண்டும்?.......... உலக அமைதி....என்றது... அதற்க்குப்பிறகு... மயக்கம் என்னை அரவணைத்தது.... பலவித காட்சிகள் விதம் விதமாய் தோன்றியது... இதுவா? இதுவா? என்பதைப்போல தேடிக்கொண்டே போனதே ஆனந்தமாக இருந்தது... கிட்டதட்ட 2 மணி நேரம் அறுவைசிகிச்சை நடந்தது.. என்னவோ அப்படியே நின்றது திடீரென்று... அப்போது முழித்துக்கொண்டேன்... ஓ முடிந்து எழுந்துவிட்டேனா? என்று சொல்லிக்கொண்டேன்...

 கடைசி ஆசை என்றதும், உலக  அமைதியோடு மரணத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருப்பதை குருவே உணர்த்தி விட்டார்... என்று கண்களில் நீர் தள்ளியது, மயக்கம் தெளியவில்லை... படுக்கவைத்தபடியே என்னை தங்கும் அறைக்குள் கொண்டு சென்றார்கள்...  பிதற்றலாக பேசினேன்... அப்படியே போய்விடும் போல இருந்தது என்று எனது தாயிடமும், மனைவியிடமும் நடந்த அனுபவத்தை அப்படியே மறைத்துவிட்டேன்... ஆனால் குருவானவர் எமக்கு உணர்த்தியதை உங்களிடம் சொல்லவேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன்...
 
 
 குருவே சரணம்..

Attachment

வாழ்க வளமுடன்....



 
 நிரந்தரமான செயல் எதுவெனில், மௌன நிலையாக, இயக்கமின்றி இயங்கும் இருப்பு நிலையோடு சார்ந்ததாக இருக்கிறது... எவர் ஒருவர் இந்த தன்மையை விரும்புகிறாரோ, ஏற்கிறாரோ அந்தக்கணம் முதல் அவரின் வாழ்வில், முழுக்க முழுக்க ஆன்ம நிலையே மேலோங்கி வழி நடத்திச்செல்கிறது... இந்த நிலையில், சீடனின் முழுமையை நோக்கிய தவம் கூடும் போது, அது அளவிட முடியாத ஆற்றல் நிலையை நோக்கி எடுத்துச்செல்வதற்கு என்ன மாதிரியான சூழ்னிலையும், செயல்களும் தேவையோ அதை இயற்கையாகவே நீங்குவதற்கு அனைத்து நிகழ்வுகளும் நடந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது...


 சீடனுக்கு பற்று என்ற ஒரு பதிவு எதுவாக இருந்தாலும், அதை அந்த சர்வ வல்லமை பொருந்திய குருவின் ஆற்றல்களமானது, தன் பக்கம் ஈர்ப்பதற்கு சீடனை தயார்படுத்திவிடுவதன் தொடக்கமே தான் எதிர்பாராத துன்பம்.... அந்த சீடனுக்கு முழுமையை நோக்கிய ஒரு நிகழ்வு என்பதற்கு ஒரு உதாரணம், அவர் தன்னை முழுமையாக இறை அருளின் பக்கமே சாய்ந்து விடுவார்... தன்னை மற்ற உலகாய விசயங்களில் இருந்து விடுவித்துக்கொண்டு, குருவோடு மட்டுமே உள்ளத்தொடர்பு கொண்டு முன்னேறுவார்... அப்பேர்ப்பட்ட துன்பமாக பதிவுகொடுத்து, இறை அருளானது சீடனை முழுமையாக குருவின் பக்கம் திசை திருப்பு விடும்.. 


 சாதாரண நிலையில் இருந்து பார்க்கப்பட்டால் அவை மிக எளிதான ஒன்றாக இருப்பினும், இறையோடு கலக்க தீவிர பற்றுக்களில் இருந்து ஒருவர் எளிதாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது... அவை எந்த வித பற்றுக்களாகவும் இருக்கலாம்.... இது தவிர, இதற்க்குப்பிறகு செய்யும் செயல்கள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் இறையை மறவாத நிரந்தரத்தன்மையை விட்டு விலகாத விழிப்பு சீடனுக்கு கட்டாயமாக்கப்படுகிறது.... ஏனெனில், எவை பற்றுக்களோ அவை நிரந்தரமானது என்ற பதிவைக்கொண்டுதான் சீடன் வாழ்ந்துகொண்டிருந்தான்....பற்றுக்களை அறுக்கும் நிலை ஏற்படும் போது முதலில், ஏமாறுவது சீடன் தான் ஆனால் அந்த பெருத்த ஏமாற்றம் வரும்போது தான் நிரந்தரம் எது என்ற விழிப்பு நிலை சீடனுக்கு ஜோதியென்று ஒளிரப்படுகிறது... 


 இதன் பிறகு தவம் ஆரம்பிக்கும்.... அதில் தீர்க்கம் இருக்கும்... அந்த தீர்க்கத்தில் இறை நிலையானதன் ஆதிக்கம் மேலோங்கியே இருக்கும்... 


 எந்தப்பற்றுக்களை இறை அறம் நீக்குகிறதோ, அது எந்த விதத்திலும் திரும்ப ஒட்டாது போகும்... மிக சாதாரண ஒன்றாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு விசயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டது போல இருக்கும். காரணம் இறையின் பக்கம் திரும்புவதற்கு ஏற்பட்ட பதிவு.... திரும்பி இது வாழ்வில் ஒட்டாது பறந்து விடும்...


 தவ நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில், எது தவத்தை நோக்கி செலுத்த வல்லதோ அதனை மட்டுமே செய்யும் ... ஒரு சினிமா பாடல் என்றாலும் கூட அதில் இறைவனை நோக்கிய ஒன்றை மட்டுமே தனது தேர்வாக செய்யும் காலமாகும்.... 


 எந்த செயல் செய்தாலும் கூட இறை இறை தான்.... குரு சார்ந்த கவிகள்... அனுபவங்கள் எல்லாம் சீடனின் ஆழத்திற்க்கு ஏற்றால் போல பதியும்.... வாழ்வு முழுமையாகும்... 

 உடலினில் உள்ள ஒளி ஒலியைக்காண உனக்கு இன்பமிகுமெனினும்
 அதற்கு மேலாய் தொடர்பு கொண்டு பல பொருளில் கண்டுவிட்டோம்
 சுகமென்ற தத்தனையும் சலிப்பும் கண்டோம். கடவுள் நீ
 இவை அனைத்தும் அறிந்து தாண்டி கருத்தொடுங்கிக் 
 காண்பவன் தனிக்குமட்டும்... திடமடைந்து அறிவு 
 லயமாகி நிற்கத் தெளிவடைவாய் கற்பனை போம் தேவை முற்றும்....

 ஞானமும் வாழ்வும் கவியில்... குரு சொன்னது...

 எப்பேர்ப்பட்ட ஒரு குரு கிடைத்து இருக்கிறார்.. அனுபவங்களை அள்ளித்தர.... 

 பிறந்து விட்டது பிறவிப்பயனை அடைவதற்கே... என்ற தீவிரம் ஜோதியென ஒளிரட்டும்...

 வாழ்க வளமுடன்...

துரியாதீத தவம் -- Intro by guru

வாழ்க வளமுடன்


 அன்று குறித்த நேரத்தில், திருவான்மியூர் தலைமை மன்றத்திற்க்குச் சென்று விட்டேன்... இருபது பேருக்கு மேல் அன்பர்கள் என்னைப்போல வந்திருந்தார்கள்... 

 எல்லோரும் வரிசையாக அமர்ந்து 20 நிமிட தியானம் செய்தோம்... கண் விழித்து வாழ்த்து எல்லாம் போட்டுவிட்டு கண்ணைத் திறந்து பார்த்த போது, குரு வந்து அந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார்... எனக்கு மிகவும் சிலிர்ப்பைத் தந்தது...


 குரு பேசினார்... வாழ்த்தினார்... பிறகு, 4 பேராசிரியர்கள் முன்னிலையில், மகரிஷி சொல்லச் சொல்ல துரியாதீத தவம் எடுத்தார்கள்... தொடு உணர்வு தீட்சையை அருகில் வந்து பேராசிரியர்கள் தந்தார்கள்... குருவானவர் துரியத்திற்க்குப்பிறகு துவாதசாங்கம் முதல் தன்னை உயர்த்துவது எப்படி என்பதை சொல்லிக்கொண்டே வந்தார்கள்....

 சந்திரன் சூரியன், சக்தி களம் இப்படி எல்லா நிலைகளையும் குரு சொல்லச்சொல்ல செய்தேன்... எனக்குள் வந்த கேள்வி எல்லாம், எண்ணங்கள் தொடர்ந்து வருகிறதே அது இந்த களத்தில் வைத்து தவம் செய்யும்போது என்ன செய்வது?  என்றபடி குருவின் வார்த்தைகளைத்தொடர்ந்து சென்றேன்...

 சிவகளம்... சுத்தவெளி... இந்த நிலையில், தூய நிலை ஒன்றே தான் எல்லையற்று, முடிவுறாததுமாக பரந்து விரிந்து மனதை சுத்தவெளியோடு இருக்கிறோம்... வெறும் சுத்தவெளி ஒன்றை மட்டும் தான் இங்கு நினைக்கவேண்டும்... இங்கே மனதைச்செலுத்தி அதனை ஏற்கும் நிலை வரம் வரை,தொடர்ந்து அதனோடு பழக்கவேண்டும்... மன விரிவில்,எண்ணங்கள் குறைந்து வர வர இறை வெளியானது மட்டுமே தான் நீடிக்கும்... அதுவரை முயற்சி தொடர்ந்து செய்து வர வேண்டும் என்றார்கள்...  எனக்குள் எண்ணம் வந்தது... அப்படி எனில், குரு எங்கே இருக்கிறார்? எனக்குள் துரியம் வரை எடுத்த தவத்தில் உணர்வுகளை குரு கேட்டபோதெல்லாம் தந்தார்.... இப்போது எண்ணமற்ற நிலையைத் தான் நினைக்கவேண்டுமா? அப்படி எனில் குருவை நினைக்கக்கூடாதா? அப்படி ஒரு தவம் எனக்குப்பிடிக்கவில்லை... மனதால் சொன்னேன்... குருவே இந்த தவம் எனக்கு திருப்தியாக இல்லை...

 
 என்னைப்பொறுத்த வரை இன்னும் சரியாக கற்கவில்லை என்று நினைத்தேன்...  எந்த ஒன்றால் குரு எனக்கு துரிய உணர்வை கேட்டபோதெல்லாம் தந்தாரோ, அந்த ஒன்று என்ன? அந்த ஒன்று குருவின் அருகாமை பற்றி எல்லாம் எதுவும் தேவை இல்லாமல் நினைத்தாலே உதவியதே... அந்த ஒன்று குருவின் சூட்சும இயக்கம்... அதை குரு நம் முன் வாய் திறந்து சொல்லவில்லை... எங்கேயோ இருந்து கொண்டு நமக்குள் அவர் எப்படி கேட்ட நேரத்தில், கேட்ட மையத்தை உணர்வாகத் தந்தாரோ, அப்படியே தான் இந்த தவத்திற்க்கும் கூட செய்யவேண்டும்... வேறு வழி இல்லை... முடிவெடுத்தேன்... குருவே எனக்கு உங்களை விட்டால் எந்த வழியும் இல்லை... எனக்குள் பட்ட வழியைத் தான் தவம் செய்யப்போகிறேன்... 

 குருவிடம் தீட்சை பெற்றதை நண்பர்கள் பூரித்தார்கள்... சுந்தர மூர்த்தி அவர்களிடம் சொன்னேன்.. ஞானமும் வாழ்வும் படியுங்கள் என்றார்... புத்தகத்தை அங்கேயே வாங்கினேன்... அன்று முதல், குருவின் கவிகளைப் படிக்க ஆரம்பித்தேன்... குருவோடு வாழ ஆரம்பித்தேன் கவிகள் வடிவில்... கவிதைகளை புரிந்துகொண்டு அவற்றை சும்மா இருக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தேன்... ஒவ்வொரு எண்ணத்திற்க்கு நடுவில், எண்ணம் முடிவில் குருவின் கவிகளாக எனக்குள் குருவின் சிந்தனைகள் வந்துகொண்டே இருந்தது...  கனவே இல்லாத தூக்கம் இருக்கும்... இரவில் எழுந்து சிறுநீர் கழிக்க எழுந்தாலும், கவிதை வரும்... சொல்லிக்கொண்டே இருப்பேன்... 


 குருவின் தன்மை அந்த கவிகளாக எனக்கும் ஏற்புடையதாக எந்த எதிர்ப்பும் இன்றி அதுவே எனக்கும் உகந்ததாக, குருவின் உயர்வான நிலை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துப் போனது... அப்பேர்ப்பட்ட ஒரு குரு நமக்கு இருக்கிறார்...அவரின் இயக்கம் தவத்தில் உணரும் வரை தவம் முழுமையாகாது... ஆகவே குருவை உள்ளே மட்டும் உணரவேண்டும்... குரு நிரந்தரமானவர் என்று உணரும் போது தவம் கற்றுக்கொண்டதாக சொல்லிக்கொள்வோம்... 


 Continuing

குருவின் துணை...

வாழ்க வளமுடன்

 
 கல்லாதது உலகளவு... என்ற எண்ணத்தோடு வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.. உண்மையில் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் கற்றதாக எதும் சொல்லமுடியவில்லை... ஏனெனில், எதிலும் கடல் அளவுக்கு நிறைய இருந்தது...

 
 கல்வி கற்றோம் ஆனால் தொழில் என்று ஒன்று வரும்போது அதில் கல்வியை விட தனி மனித அணுகுமுறையும், நுணுக்கமான ஆராய்ச்சியும் தான் தேவை என்று புரிந்தது... அதுவே கல்வி கற்றதை விட, வேலை செய்து எனக்கு சம்பாதிக்கவேண்டும் என்ற நிலை எனக்குள் இருந்தது... காரணம் ஒரு தேர்வில் கலந்துகொள்ளாமல் இரண்டாம் தரம் தான் பட்டயபடிப்பில் கிட்டி இருந்தது... இதை வைத்துக்கொண்டு கூட என்னால் உழைத்து மேலே வரமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது...

 வேலைக்குச்சேர்ந்த புதிதில், ட்ரெயினிங் தந்தார்கள்... கொடுத்தவர்களுடைய மனதின் ஆட்டம் தான் தெரிந்ததே தவிர ஒன்றும் கற்கமுடியவில்லை... 10 நாள் ஆனது... எனக்கு போதும் என்று சொன்னேன்... அதற்குள் எப்படி வேலை செய்ய முடியும் என்றார்கள்... என்னை தனியாக விடுங்கள்... நான் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தனியாகவே என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்...

 தவம் பெரிதும் பயனாக இருந்தது... கவனித்து சரி செய்தல் என்று வரும்போது, ஆக்கினையும் துரியமும் வந்து கொண்டே இருக்கும்...  அந்த வேலை முடிந்ததும், அடுத்த வேலை தருவார்கள்... என்ன பிரச்சினை என்று தீர்ப்பது என் வேலை என்றாலும், அதை எப்படி கஸ்டமருக்கு திருப்தி தரும் வகையில் செய்கிறோம் என்பது தான் வெற்றிக்கு வழி...

 சும்மா இருக்கும் சில நொடிகளில் குருவின்கவி வரும்... சொல்லிக்கொண்டே இருப்பேன்... அதை வைத்துக்கொண்டே தான் எதிலும் சாதிப்பேன் என்ற நிலை எனக்கு இருந்தது... அது மட்டும் தான் பிடித்து இருந்தது... கற்றுத் தருபவர் நம் குருவைப்போல ஒருவர் தான் எனக்குத்தேவை... அதனால் என் தொழிலில் என்ன சந்தேகம் என்றாலும் சுத்தவெளியில் மனதை ஒட்டிவைத்து வேலை செய்து பழகினேன்...

 
 சில நேரங்களில் தாமதம் ஆனாலும், எடுத்த வேலை வெற்றியைத்தந்தது... என் முயற்சிகளும், தீர்க்கும் விதமும் என்னை கவனித்துப்பார்த்தார்கள்...
 சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு... என்னை அனுப்பினார்கள்... மிகப்பெரிய மெஷின்... சரி செய்யவேண்டும்... புதிதாக அப்போது தான் அதைப்பார்க்கிறேன்... எதையும் யாரிடமும் வெளியில் இருந்து கற்காததால், சலனம் வந்தது...


 சுற்றி நிற்கிறார்கள்... நான் அந்த மெஷினை சுற்றி வந்தேன்.. உள்ளுக்குள் பயத்துடன்... பெரிய பிரச்சினை இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது... ஆனால் என்னால் சரிசெய்யமுடியாது என்று கஸ்டமர் கருதினால் உடனே புகார் போய்விடும்... இப்போது நுணுக்கமாக வேலை செய்தே ஆக வேண்டும்... என்ன செய்வது...  

 ஒரு கணம் குருவை நினைத்து அழுதேன்... அப்பா... எனக்கு யாருமில்லை காப்பாற்ற... அறிவில் தெளிவைத்தந்து என்னை உயர்த்துங்கள்... யாரும் இல்லாத இடத்தில் இருந்துகொண்டு...  அடுத்து உடனே எனது வேலையை ஆரம்பித்தேன்... எந்தப்பக்கம் பார்த்தேனோ, அந்தப்பக்கத்தில் இருந்த ஒரு பகுதியானது மிகவும் சூடாகவும், மெல்லியதாய் கருகியும் இருந்ததை கண்டுபிடித்தேன்... பிரச்சினை தெரிந்தது... 

 அதற்க்குள் எனக்கு ஆபீசில் இருந்து அழைப்பு... என்ன பிரச்சினை... என்ன பார்ட்ஸ் வேண்டும் என்று கேட்டார்கள்... தேவையானதாக சொன்னதை அனுப்புகிறேன்... ஆனால் உன்னால் உன்னை நம்பி அனுப்பிகிறேன் வேறேதும் பிரச்சினை இருந்தால் நம்மால் சமாளிக்கமுடியாது என்றார்கள்... துணிந்து அவ்வளவு தான் என்றேன்.. மனதில் குருவைப்பிடித்துக்கொண்டு உறுதியுடன்...

 ஒரு சீனியர் எஞ்சினியர் வந்தார்... உடனே சரி செய்தோம்.... வேலை நன்றாக முடிந்தது... 


 அடுத்த நாள் காலை ஆபீசில், மேனேஜர் கேட்டார்... எப்படி கண்டுபிடித்தாய் இவ்வளவு சரியாக? .... எனக்கு சொல்வதற்க்கு ஒன்றுமில்லை.... எதுவும் சாதிக்கவில்லை... சொல்லித்தந்தது குரு... செய்த கருவி மட்டுமே நான்... மழுப்பலாக ஒரு காரணத்தைச் சொன்னேன்... எல்லாரும் பாராட்டினார்கள் ஆனால் எனக்குள் ஏறவில்லை... எனக்கும் குருவிற்க்கும் மட்டும் தெரியும்...எனக்கு எதுவும் தெரியாது என்று...  இது தான் இனிமேல் என் ஆயுதம்... குரு..

 
 ஒரு மெஷின் பழுது ஆனாலே.... போகும் வழியிலேயே அதனைப்பற்றி குருவிடம் பேசி, என்னவெல்லாம் பிரச்சினை இருக்கும் என்று முடிவாகும்... அது அப்படியே அந்த மெஷினில் செய்தால் அந்த மெஷின் இயங்க ஆரம்பிக்கும்... அப்படியே அந்த மெஷினிடம், இனிமேல் சரியாக வேலை செய்யவேண்டும் சரியா? என்று பேசிவிட்டு வெளியில் வருவேன்...  இப்படி வந்த விசயங்களை குருவின் மைய்யத்தைவைத்து சரி செய்து வந்தேன்... எனக்கு மாற்றல் வந்தது... புவனேஸ்வருக்கு...  வேலைக்குச்சேர்ந்த 2 மாதத்தில் 400 மெஷின்கள் இருந்த அந்த ரீஜினல் ஆபீசுக்கு மாற்றல்.... துணிந்து ஓடினேன்...


 எதையும் சவாலாக ஏற்று, அறிவை சுத்தவெளியில் வைத்து மெஷின்களை சரி செய்தேன்... உழைப்பும், ஊதியமும் ஓரளவுக்கு திருப்தியாகவே இருந்தது... குருகூடவே இருப்பதாக நினைத்துக்கொள்வேன்... ஏனெனில், அங்கே மனவளக்கலை மன்றம் இல்லை... ஆனால் குரு என்கூடவே இருந்ததால் என்னை நோக்கி வந்த வேலைகளை கடமையாக செய்தேன்... குருவின் துணையுடன்... 

அந்த நாள் ஞாபகம்..குருவின் சேர்க்கை.

வாழ்க வளமுடன்....

எந்த அவமானமும், தோல்வியும், கடுமையானவற்றை எதிர்கொள்ளுதலின் போது நேரும் பிரச்சினைகளையும், என்னுடைய மனதிற்க்கு நிறைவு / திருப்தி தரும் வகையில் இல்லை என்பதும், அவற்றை நாமே நமக்குள்ளே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தே ஆக வேண்டும் என்றும் தோன்றியது...  96- 97ல்  மன்றத்தில் சேர்ந்த நேரத்தில், இந்த மன நிலை இருந்தது....  எதையும் ஏற்றுக்கொண்டு பொறுமையாகத்தான் இலக்கை அடையமுடியும்....

 தோல்வியும் அவமானங்கள் மட்டுமே நம் சொத்து அல்ல... என் முயற்சியால் அதை துடைத்துவிட்டு எழுந்திருக்க வேண்டும் என்ற வைராக்கியம்..... அதை அடைய வழி முறையை ஆழ்ந்த யோசனையின் போது தான் கிடைத்தது...  ஆனால் அனைத்து அனுபவம் உள்ளே இருந்தாலும் கூட, மற்றொரு முயற்சியால் நிச்சயம் வெற்றியை அடையலாம்... என்ற எண்ணம் இருந்தது....  மன்றத்தில் சேர்ந்து குருவின் பதில் உடனுக்குடன் எனக்குள் அவற்றை செயலாற்றும் வலிமையைத் தந்தபோது, நாம் கடந்து வந்த பாதையில் இருந்த பதிவுகள் அனைத்தும் துடைத்து விட்டதாக சிலிர்த்தது...


 மனவளக்கலை புத்தகம் ஒன்று, இரண்டு, மூன்று... புத்தகங்களை படித்துக்கொண்டே இருப்பேன்... 


 நாம் தெளிவாகிவிட முடிவெடுத்து வாழ்ந்து வந்தால், குரு நம்மைத்தேடி வருவார் என்ற வரிகள் பார்த்தபோது... அப்படி என்றால், நமது முயற்சியால் தான் தியானம் கற்க இங்கே வந்து இப்போது சாதிக்கிறோம் என்ற முனைப்பு விட்டுப்போனது.... அனைத்தும் குருவே தான் முடிவெடுக்கிறார்... தேவை நாம் நம் முனைப்பு நல்லவற்றில் சுழலவிடல் மாத்திரமே என்று உறுதியாகத் தோன்றியது...


 குருவோடு மன அலைத்தொடர்பு என்பது மிகவும் பிடித்துபோயிருந்தது.... அப்பா... அப்பா... என்று அவரை நச்சரித்துக்கொண்டே இருப்பேன்... சும்மா இருக்கும் போதும் கூட... எங்கள் ஊரில் இருந்து குரு வாழும் ஆழியாருக்குச்செல்லவேண்டும் என்றால் வெளிநாடுக்கு போவது போல என்பது எனக்கு இருந்த நிலை...  குருவைப் பார்க்க வேண்டும் எனில் யாரிடமாவது வீட்டிலோ வெளியிலோ கடன் வாங்க பிடிக்கவில்லை... என்னால் வேலைக்குச்சென்று உழைத்து சம்பாதிக்கும் போது குருவின் இடத்தைப் பார்க்கப் போகலாம்... அதுவரை குருவை மனதால் மட்டுமே பார்க்கப் பழகுவோம்...

 
 என்னுடைய நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது... கடவுள் மறுப்பு, புலால் மறுத்தல், இயற்கை உணவு உண்ணுதல், எங்கு பார்த்தாலும் வாழ்க வளமுடன் சொல்லுதல் என்பது போன்ற மன்ற அன்பர்களின் நடவடிக்கைகள் எனக்குள் இருக்கிறதா என்று வீட்டில் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்....

 கோயிலுச்சென்று கடவுளின் முன் கண்மூடினால், ஆக்கினையும், துரியமும் வேலை செய்யும்... கவனித்து விட்டு, கொடுக்கிற விபூதி குங்குமத்தை இட்டுக்கொண்டு வருவேன்.... புலால் மறுத்தேன்... இயற்கை உணவை உண்ணுதலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தராதது... வாழ்க வளமுடன் என்ற வார்த்தை மன்றத்தில் தவிர எங்கும் சொல்லுவதில்லை என்று ஒரு கோடு போட்டுக்கொண்டு, தவத்தை பாதுகாத்தேன்...
 

 ஜூன் 1997-ல் மன்றத்தில் சேர்ந்து, 3 மாதத்திற்க்குள் துரியம் காயகல்பம் எடுத்த நிலையில், அக்டோபரில் சென்னையில் ஒரு வேலை கிடைத்தது... குருவே, சென்னை பெரிய ஊர்... எங்கு யாரிடம் கேட்டு மன்றத்தைத் தேடுவேன் என்று எண்ணிக்கொண்டே பஸ் ஏறி, வேலைக்குச்சேரும் ஆபிசில் சென்று அடைந்தேன்... அங்கேயே தங்கி வேலை செய்யும் படி ஒரு அமைப்பு.... இரவு 10மணிக்கு சென்று சேர்ந்து அந்த புது இடத்தில் தங்கினேன்.... விடியும்போது, விரக்தியாக இருந்தது... குருவே, மன்றம் எங்கே இருக்கிறதோ தெரியலயே....  சரி, டீ சாப்பிடலாம் என்று விடியற்காலையில் வெளியில் வந்தேன்... 

 தேனீர் சுவைத்த முதல் சுவைப்பின் போது, தேன் உள்ளே இறங்கியது.... நான் தங்கியிருந்த இடத்தின் நேரெதிரில் குருவின் மிகப்பெரிய படமும்,Saidapet ஜோன்ஸ் ரோடு மனவளக்கலை மன்றம் என்று பெரிதாக எழுதி இருந்தார்கள்... கண்களில் நீர் தழும்பியது.... அப்பா.... என்ன சொல்லுவேன்? இது போதும்.... பெரிய பலம் கிடைத்தது...

 திருவான்மியூரில் தலைமை அலுவலகத்தை எப்படி போய் சேருவது என்று கேட்டுக்கொண்டு ஒரு ஞாயிறு போனேன்... மாலை தவத்தில் கலந்துகொண்டேன்.. சந்தோசமாக இருந்தது.... மையங்கள் நன்றாக இயங்கியது.... அகத்தாய்வு ஒன்று இரண்டு, இப்படி நான்காம் நிலை எடுத்தால் தான் துரியாதீதம் கிடைக்கும்...  சரி நாம் கத்துக்கலாம் ஒரு நாள்... எண்ணிக்கொண்டே குருவின் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தேன்...

 
 அடுத்த வாரம் திருவான்மியூர் சென்றபோது, பலகையில், குரு அடுத்த வாரம் சென்னை தலைமை மன்றத்திற்க்கு வருவதாக எழுதி இருந்தார்கள்.... அப்பா... என்னால் அடக்க முடியவில்லை... நான் உங்களைத் தேடி வரமுடியவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையில், நீங்கள் இங்கேயா???  நடக்கும் விசயங்கள் எல்லாமே ஆன்மீகமாகப் பட்டது...  நிகழ்வு, குருவினால் தான் நடத்தப்படுகிறது... குருவே தேடி வருகிறார் என்று எடுத்துக்கொள்ளும் மன அலை ஏற்படவில்லை... குரு என்ன நடத்துகிறாரோ நடத்தட்டும்...  காத்திருந்தேன்...



 அடுத்த வாரம் ஞாயிறு, குருவைக்கண்டேன்... அடடா... வெண்தாடி... கம்பீரமான இறைனிலை, நிமிர்ந்து நடக்கும் பாங்கு... எனக்குள் செய்த உதவிக்கு மனதால் நன்றிகளை பத்தடி தூரத்தில் அமர்ந்து சொன்னேன்... என் மன அலை உங்களுக்குத் தெரியும் என்றேன்... எப்போதும் உருவத்தின் மேல் படர்ந்திருக்கும் அலையைப் பார்க்கும் குரு, திடீரென அந்த பூதக்கண்ணாடியால் உற்று நோக்கினார்... ஒரு நொடி கூட தாங்க முடியவில்லை..... வேண்டாம், குருவை எப்போதும் போல உள்ளேயே பிடிப்போம் என்று முடிவெடுத்தேன்...

 
 ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை குருவோடு சத்சங்கம் என்று பார்த்தேன்... அன்று முதல் தினமும் வேலைகளை முடித்துவைத்துவிட்டு, தினமும் திருவான்மியூருக்கு சென்றேன்... சுகமாக இருந்தது... அந்த நாட்கள்... குரு எப்படி பேசுகிறார், நடந்துகொள்கிறார் என்றெல்லாம் பார்த்து பார்த்து ரசித்தேன்...  அப்படி ஒரு நாள் ஒரு அறிவிப்பு செய்தார்கள்... துரியம் வரை பயின்று 3 மாதம் ஆன அன்பர்களுக்கு சிறப்பு துரியாதீத தீட்சையை அடுத்து வாரம் குரு அளிப்பார்... 

 அப்பா.... இந்த தவத்திற்குத் தகுதியானவனா நான் என்று கண்கலங்கியது... துரியாதீதம் கற்க பல நாள் ஆகும் என்று இருந்த எனக்கு, குரு நினைத்தால் சில தினங்களில் கூடகிடைத்துவிடும் என்று புரிந்தது...