வாழ்க வளமுடன்...
எல்லாம் வல்ல குருவின் அருளால் அனைவரும் வாழ்க வளமுடன்.
சென்ற மாதம் நான் எங்கள் சொந்த ஊருக்குச்சென்றபோது முதலில் ஆழியாருக்குச்சென்று குருவின் முன் 4 நாட்கள் அவரோடு பேசி, கவிதை சொல்லி, தியானம் செய்து, ஆனந்தமாக இருந்தது...
குருவிடம் என் வாழ்வின் நோக்கம் என்ன? எதனை நோக்கி என் வாழ்வு நகர்கிறது? இப்படி நிறைய கேள்விகளைக்கேட்டிருந்தேன்...
4 நாட்கள் சென்றதே தெரியவில்லை... 4வது நாள் அறிவுத்திருக்கோயிலை விட்டு வெளியே வந்தோம்... எங்கள் பையன் ரமணன், அருட்பெருஞ்சோதி நகரைவிட்டு வரமாட்டேன் என்று அழுது அடம் பிடித்தான்... சமாளித்து வெளியே வந்தேன்... மெதுவாக எண்ணம் வந்தது... அட, நமக்கு ஏன் இந்த மாதிரி அடம் பிடிக்கமுடியவில்லை? என்று எண்ணியபடி நிற்க, பேருந்து வந்து நின்றது பொள்ளாச்சிக்குச் செல்ல...
பேருந்தில், பாடல் போட்டார்கள்...முதல் பாடல்... ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்... அவ்வளவே.. என்னால் அழுகையை நிறுத்த இயலவில்லை...அப்பா... என்னால் முடியவில்லை... மறைவாக கண்ணைத் துடைத்துவிட்டு, பயணம் தொடர்ந்தோம்...
ஊருக்கு வந்து சேர்ந்தோம்... பொங்கல் பண்டிகை தித்திப்பாக வந்து சென்றது... குடும்பத்துடன் சிலவருடங்களுக்குப்பிறகு ஒன்றாக இருக்கும் வாய்ப்பு... அனுபவித்தோம்...
என்னுடைய வலது கை நடுவிரலில் ஏற்பட்ட சதைவளர்ச்சியை அறுவைசிகிச்சை செய்ய 17ம்தேதி நாள் குறித்தானது... சிறிய சிகிச்சைதான்... ஆனாலும் மருத்துவமனையில் அனுமதித்து செய்யவேண்டியதானது... அனுமதிக்கப்பட்டேன்...17ம்தேதி.
ஆழியாரில் இருந்து கொண்டு வந்த மகரிஷியின் பாடல்களை கேட்டபடியும் அவ்வப்போது முணுமுணுத்தபடியும் இருந்தேன்... இருந்தாலும் அறுவைசிகிச்சை செல்லும் நேரம் வந்தது...அவர்கள் தரும் ஒரு துணி மட்டும் உடுத்திக்கொள்ளவேண்டும், மேலும் தள்ளும் வண்டியில் தான் செல்லவேண்டும் என்பதெல்லாம் எதிர்பார்க்கவில்லை... அந்த துணியை உடுத்திக்கோண்டு,அந்த வண்டியில் உட்காரவைத்து என்னை அழைத்துச்சென்றார்கள்... ஒரு வித பீதியை கொடுத்தது... என்னடா இது நல்லா தானே இருக்கோம், நடக்கவைத்துச்செல்லலாமே, எதுக்கு இதெல்லாம் என்று தோன்றியது...
இருந்தாலும் குருவின் இறைவனை கண்டுகொண்டேன் என்ற பாடலை மட்டும் விடாமல் முணுமுணுத்துக்கொண்டே சென்றேன்...
அங்கே என்னை படுக்க வைத்தார்கள்... கை மறுத்துப்போவதற்கு ஊசி போட்டனர்...15 நிமிடம் மற்ற தயாரிப்புகள் நடந்தது... கை மறுத்துப்போவதற்குள் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது... அவ்வோர் நொடியும், கை வலி அதிகமானது... ஒவ்வோர் கீரலுக்கும் குருவிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.. அப்பா வலிக்கிறது... வலிக்கிறது என்று... ஒரு கட்டத்தில், தாங முடியாமல் வாய்விட்டு சொன்னேன், அப்பா வலிக்கிறது... டாக்டர் உடனே, மயக்கம் வருவதற்கான ஆக்ஸிஜன் குழாய் என் மூக்கின் அருகில் பொருத்தச்சொன்னார்...
கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை மயக்கம் வர ஆரம்பித்தபோது மரணம் நெருங்குவது போலவும் அதை நினைவு என்ற அலையால் தடுப்பது போலவும் தோன்றியது... மயக்க மருந்து வேலை செய்ய ஆரம்பித்தது... மரணம் நெருங்குவதைப்போல உணர்த்தியது... வரிசையாக, பாபாஜி,லாஹிரி, யுக்தேஸ்வர், யோகானந்தர்,விராலிமலை குரு, ரமணர், வள்ளலார்,அன்னை, அரவிந்தர் எல்லோரையும் நினைத்து வணங்கினேன். மயக்கம் மேலும் அழுத்தியது... மரணம் நெருங்கிவிட்டது... இனி தடுக்க இயலவில்லை...முடியவும் இல்லை.. ரமணன் (குழந்தையின் நினைவு வந்து) வாழ்த்தினேன், வாழ்க வளமுடன். மேலும் மயக்கம் அழுத்தியது... கடைசியாக என்னவேண்டும்?.......... உலக அமைதி....என்றது... அதற்க்குப்பிறகு... மயக்கம் என்னை அரவணைத்தது.... பலவித காட்சிகள் விதம் விதமாய் தோன்றியது... இதுவா? இதுவா? என்பதைப்போல தேடிக்கொண்டே போனதே ஆனந்தமாக இருந்தது... கிட்டதட்ட 2 மணி நேரம் அறுவைசிகிச்சை நடந்தது.. என்னவோ அப்படியே நின்றது திடீரென்று... அப்போது முழித்துக்கொண்டேன்... ஓ முடிந்து எழுந்துவிட்டேனா? என்று சொல்லிக்கொண்டேன்...
கடைசி ஆசை என்றதும், உலக அமைதியோடு மரணத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருப்பதை குருவே உணர்த்தி விட்டார்... என்று கண்களில் நீர் தள்ளியது, மயக்கம் தெளியவில்லை... படுக்கவைத்தபடியே என்னை தங்கும் அறைக்குள் கொண்டு சென்றார்கள்... பிதற்றலாக பேசினேன்... அப்படியே போய்விடும் போல இருந்தது என்று எனது தாயிடமும், மனைவியிடமும் நடந்த அனுபவத்தை அப்படியே மறைத்துவிட்டேன்... ஆனால் குருவானவர் எமக்கு உணர்த்தியதை உங்களிடம் சொல்லவேண்டும் என்பதால் பகிர்ந்து கொண்டேன்...
குருவே சரணம்..
No comments:
Post a Comment