Saturday, December 2, 2017

அந்த நாள் ஞாபகம்....2

வாழ்க வளமுடன்...



எதிலும் எனக்குள்ள நிறை குறைகளை அலசி புரிந்துகொள்ள முயற்சிக்கும் எனக்கு, தோல்வி என்று வரும்போது ஏற்படும் ஏமாற்றம் என்றால் அதை மனத்தின் ஓர்மையால் கிடைத்து விடுகிறது என்று அனுபவித்திருக்கிறேன்... தேர்வில் கலந்துகொள்ள முடியாதது எனது தோல்வி ஆகாது என்ற நேர்மையான வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என் வீட்டில் உள்ளோருடன்... எனக்கும் வாழ்க்கையில் ஜெயிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியுடன் சொல்வேன்...  என்னால் ஒரு விசயம் சாதிக்க முடியாது போனால், அழுதாவது சாதிப்பேன் அந்த வயதில்...  

 
 இது தவம் எடுத்த போதும் நேர்ந்தது.... தவத்தில் மூலாதார உணர்வோ அல்லது துரியத்தில் உணர்வு கிட்டாத போது, குருவே என்று கண்ணில் நீர் நிரம்பி வரும்... அப்பா... என்று மன்றாடுவேன்... குருவின் கவிகளை அழுத்தமாக சத்தமாக கண்ணை மூடி தியானத்தில் இருக்கும் போது பாடுவேன் எங்கள் வீட்டின் அறையில் அமர்ந்து.... எனக்கு உணர்வு வேண்டும் அவ்வலவு தான்... அதே போல மன்றத்தில் மனதுக்குள் வேண்டி அழுவேன்.... மூக்கில் இருந்தும் கொட்டும்... அதை இழுக்கும் சத்தம் எனக்கு மட்டும் தான் இருக்கும்.... நண்பர்கள் கேட்பார்கள் என்னடா வரும்போது நன்றாகத் தானே இருந்தாய்? இப்போது எப்படி மூக்கை அடைத்து இருக்கு?

 துடைத்த இடத்தில் ஈரம் சேர்ந்திருக்கும்... ஆனால் அழுது முடித்த நேரம் எனக்கு தேவையான உணர்வு அந்த தவத்தில் இருக்கும்.... குருவைப்பார்த்து மெலிதாக நன்றிகலந்த உணர்வைச்சொல்வேன்...

 மன்றத்தில் சேர்ந்த பத்தாவது நாள் எனது அனுபவத்தைச் சொன்னேன் மன்றத்தில்... தவத்திற்க்கு முன், குருவின் கவியைச்சொல்லிக்கொண்டே தான் இருப்பேன்... அதற்க்குப்பிறகு எப்போது ஓர்மை கிடைக்கிறதோ, அப்போது தவம் தொடங்குவேன்... ஆளுக்கொரு விளக்கம் தந்தார்கள் பொறுப்பில் இருந்தவர்கள்... ஒருவர் பாரட்டினார் அது நண்பர் சுந்தரமூர்த்தி.... இன்றும் தொடர்கிறது நட்பு... 

 உருவாகி, மறைந்து போன காளியை விட, உள்ளுக்குள்ளேயே தவத்தில் உதவும் குரு கிடைத்தபிறகு எவர் சொல்லாவது உள்ளே ஏறுமா? எனக்கு எதைச் சொல்லவேண்டுமோ அது குரு சொல்லட்டும்.... ஜுலை 1997-ல் மன்றத்தில் இருந்த போது முடிவெடுத்தேன்.. எனக்குள்ளே இருந்து குரு சொல்கிறார்... குருவை இனி வெளியில் தேட வேண்டியதில்லை என்று முடிவானது... மனதால் குருவை நினைத்தால் குருவின் பதில் உள்ளுக்குள் கிடைக்கிறது... எல்லாம் இனி உள்ளுக்குள்ளே தான் என்று மேற்பதிவு ஏற்பட்டது...



 கவியாக, எண்ணமாக குருவை நினைக்க நினைக்க தவத்தில் திருப்தி ஏற்பட்டது.... காயகல்பம் எடுத்துக்கொண்டேன்..  எங்கள் வீட்டில் ஒரு நாள் மாலை தவத்தில் இருந்தேன் தனி அறையில்..... குருவின் கவிகளைச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.... எல்லாம் வல்ல தெய்வமது தொடங்கி ஒரு பத்து கவிகள்... சோர்வு வரும் வரை சொல்லிக்கொண்டே இருந்தேன்.... அன்று துரிய தவம்.... துரியம் நன்றாக அழுத்தமாக இருந்தது....  அப்படியே தொடர்ந்த போது திடீரென, உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு ஆனந்த உணர்வு, துரியத்தில் இருந்த உணர்வு சுத்தவெளியாக ஆனது.... என்னால் தாங்கமுடியாமல் தவம் நின்றுபோனது... ஆனால் குரு நமக்கு ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறார் என்ற பதில் 2 நாளில் தான் புரிந்தது.... அது சுந்தர மூர்த்தி சொன்னது....


 வீட்டில் மாமிச உணவு செய்யும்போது எனக்கு வயிறு வலிக்கிறது, வாந்தி வருகிற மாதிரி என்றெல்லாம் சமாளித்துக்கொண்டு இருந்த எனக்கு, இந்த நிர்பந்தத்தை வேதாத்திரி மகரிஷி இல்லாமல் ஒரு காரணம் சொல்லவேண்டுமே என்று யோசித்தபோது, திருவள்ளுவர் புலால் மறுத்தல் குறள் மூலம் உதவினார்...

 தன்னூன் பெருக்கற் தான் பிறிது ஊனுண்பான்
 எஞ்ஞனம் ஆளும் அருள்...

 தன் சதையை பெருத்துக் கொள்வதற்காக பிற உயிர்கள் கொன்று உணவாக உண்பவன் எஞ்ஞனம் அருள் உள்ளவனாக இருக்கமுடியும்???

 இந்த குறளை எங்கள் அண்ணன் திருமணம் நடந்தபோது, சைவ உணவு சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் எல்லாரும் கேட்கும் படி சொன்னேன்.... எல்லாரும் கேட்டாவது இவர்கள் என்னை நிர்பந்திக்கமாட்டார்கள் என்பது என் திட்டம்... வீட்டில் இளையவன் என்பதால் துணைக்கு யாருமில்லை...இருப்பினும் திட்டம் பயன் தந்தது....   இப்படி மாமிசம் அறவே விட்டது 1999-ல்....  நம்மால் விடமுடியும் என்றாலும், சுற்றி உள்ளவர்களின் மன அலையை அடக்கும் வலிமை குருவிடம் இருந்து தான் வந்தது... அதன் பிறகு என்னை வற்புறுத்தினாலும், எனக்கு விருப்பமில்லை... நீங்கள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டாலும் எனக்கு சிக்கலில்லை என்று அவர்களின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டே இன்முகத்தோடு (??) சொல்ல ஆரம்பித்து சைவ உணவு சாப்பிட்டேன்... நிறைய நாட்கள் ரசம் சாதம் தான் கிடைத்தது... ஆனாலும் யாரும் கவலைப்படவில்லை... எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லாமல் போனது...

No comments:

Post a Comment