வாழ்க வளமுடன்..
அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக.... குருவடி சரணம்....
சிறு வயதில் அதிகம் பேசாதவனாகப் பார்க்கப்பட்டவன்... உள்ளே பேசிக்கொண்டே தான் இருந்தேன் அப்போதும்... குடும்பத்தினர் மற்றும் சுற்றி இருந்த மக்களின் செய்கைகளில், கடவுள் பக்தி என்பது போதவில்லை என்பதும், நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின் மூலம் நாம் சுயமுன்னேற்றம் அடைய முடியாது என்பது தெரிந்த ஒன்றாக இருந்தது... ஆனால், வாழ்க்கைத்தத்துவ கருத்துக்களில் ஈர்ப்பு இருந்ததினால்,சினிமா பாடல்களில் தத்துவ வரிகள், புத்தகங்களில் வெளிவரும் தத்துவ வரிகளில் எல்லாம் கவனம் சென்றது...
9வயது இருக்கும்போது, ஒருமுறை பச்சோந்தி ஒன்று வீட்டின் சுவர் இடுக்கில் நின்று கொண்டு இருந்தது... கூரான ஒரு கல்லை அதன் மீது வீசினேன்... அதன் வால் அறுந்து, வால் மட்டும் தனியாக துள்ளித் துடித்ததைக் கண்ட போது எனக்கு வலி உணர்வு புரிந்தது... நேராக பூஜை அறைக்குள் சென்று, இனி இந்தத் தவறைச்செய்யப்போவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.... அதன் பிறகு உயிரை வதம் செய்து செய்யும் அசைவ உணவில் பிடித்தம் குறைந்துபோனது... இருப்பினும் என்னால் வீட்டில் சரியான விளக்கம் தந்து உணவைமறுக்க முடியாமல் போனது...
நான் முன்னேற வேண்டுமாயின் அதற்கு நடைமுறையில் உள்ள வழக்கமான நிலைகளில் முடியாது என்பது தெரிந்த ஒன்றாக இருந்தது... இருப்பினும், தத்துவ வரிகளை எழுதியவர்களின் தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த தோல்விகள் மற்றும் உலக விசயங்களில் கண்ட ஏமாற்றமும் தான் இந்த தத்துவ வரிகள் என்று கண்டபோது, சினிமா வரிகளின் ஆழம் புளித்துவிட்டது... இருப்பினும் நமக்குத் திருப்தி தருபவர் யாராக இருக்க முடியும் என்று விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் வரிகளைத் தேடினேன்... கருத்துக்கள் பிடித்திருந்தது... ஆனால் அதை நடைமுறைப் படுத்தலில் உதவி செய்ய எப்போதும் அருகில் இருக்கும் நிலையில் எவரும் கிடைக்கவில்லை...
மனிதர்கள் எவரையும் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை என்பதும், சுற்றி இருந்த வெவ்வேறு குணம் கொண்டவர்களைப் பார்த்தபோது, ஒவ்வொருவர் ஒருவிதத்தில் பிடித்தவர்களாக இருந்தார்கள்... ஒவ்வொருவரிடம் உள்ள நல்ல விசயங்களை கற்கலாம் என்ற நிலை வந்தது... எனக்கு வயது 16....
பட்டயத்தேர்வுக்கு தாமதமாகச் சென்றதால் எழுதமுடியாது போனது... சுற்றி இருந்தவர்களின் என் அம்மாவைத்தவிர அனைவரும் கடுமையாகக் குறை கூறினர்... ஆறுதலுக்கு ஆள் தேடினேன்... கிடைக்கவில்லை.... நேராக அருகில் உள்ள காளி கோவிலுக்குச் சென்றேன்... கண்களில் நீர் கொட்டியது... பேசினேன்... என்னுடைய தவறு இதில் இல்லாதபோது என்னை விமர்சிக்கிற நிலை பொறுக்கமுடியவில்லை... என்னைச்சுற்றி எவரும் இல்லை நீங்கள் தான் எனக்குவேண்டும் என்று காளியின் உருவத்தை மனத்தில் நிறுத்தினேன்.... காளி உருவம் மறைந்தது.. ஆனால் ஒரு வெறுமை சூன்யமாக இருள் தான் நீடித்தது... ஆறுதலாக இருந்ததாலும் காளி மறைந்ததை ஏற்க முடியவில்லை...
கண்ணால் தெரியும் ஒரு உருவக்கடவுள் எப்படி நீடிக்கமுடியாது போகும் என்று அங்கேயே மீண்டும் காளியின் உருவம் உதித்தது... சில நொடிகளுக்கு மேல் மீண்டும் காளி மறைந்தார்.... அப்படி எனில் காணப்படும் கடவுள் எப்போதும் துணையாக வராது என்றாலும் எது துணையாக வரும்? கேள்வி எழுந்தது...
மனவளக்கலை அன்பர்கள் சிலர் எங்கள் தெருவில் இருந்தனர்... ஒருவர், தேங்காய் உட்பட இயற்கை உணவைச் சாப்பிடுவார்.... ஒருவர் நல்ல நாட்களில், சாமி படங்களை போட்டு கடவுள் இப்படி இல்லை என்று வீட்டுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்... இன்னொருவர் குடும்பத்தினர் கம்யூனிஸ்ட் கட்சியினர்... இயல்பாகவே இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று பலர் பலவிதம்...
ஆனால் எவரிடத்தும் ஒரு திறமை உண்டு என்பது எனக்குள் இருந்ததால், மகரிஷி பயிற்சி முறைகளை மேற்கண்ட நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்து எடைபோடவேண்டியதில்லை என்பது முடிவானது... தியானப் பயிற்சியை முயலாமல் எவரையும் வைத்து குறைகூற வேண்டாம் என்று இருந்தேன்....
தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடரில், கிருஷ்ணர் தன் சிறுவயதில், தியானம் செய்வதும் அதில் உடலில் சக்கரங்கள் மூலமாக பிரபஞ்ச சக்தியோடு லயித்து வலிமை பெறுவதாகக் காட்டினார்கள்.... அன்று வீட்டில் அனைவரும் இருந்தார்கள்... நானும் கிருஷ்ணரைப்போல தியானம் கற்கப்போகிறேன் என்று அடுத்த நாள் மனவளக்கலை மன்றத்திற்கு சென்று ஆக்கினை பயிற்சி எடுத்துக்கொண்டேன்...
தத்துவத்தேடலில் குருவின் கருத்துக்களில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஒத்துப்போவதாக இருந்தது.... ஒரு பழஜீஸ் போல உள்ளே சென்றது....
தொடரும்...
No comments:
Post a Comment