வாழ்க வளமுடன்...
குருவின் பாதங்களில் மனம் நிலைத்து எழுதுகின்றேன்...
வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப்பொருள் வலிது பிரபஞ்சத்தில்?
தொட்ட தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?
பட்டப்பகலில் வானில் மீன்கள் தோன்றா,
பார்வை இல்லார்க்கு அவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்...
ஞானக்களஞ்சியம் கவி எண் 1417
இந்தக்கவியைப் பட்டிக்கும்போது, வெட்டவெளி சக்தி என்பதில்லையானால் வேறு எந்தப்பொருள் வலிமையானது பிரபஞ்சத்தில்?
தொட்ட , தொடப்பட்ட என்ற இரு பொருள்களுக்குள் தன்னால், என்னால் என்று எண்ணும் அரூபம் யாது? என்று சிந்தனையை விரிக்கும்போது, தான் என்ற முனைப்பும், அகங்காரமுமாக இருக்கக்கூடிய அந்த நான் என்ற அரூபம் யாது????
என்ற வரிகள் வரை புரிந்தது.... அடுத்த நான்கு வரிகள்...
பட்டப்பகலில் வானில் மீன்கள் தோன்றா,
பார்வை இல்லார்க்கு அவை எந்த நாளும் காணா
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்...
குருவின் கால்களையே நினைந்து நினைந்து தொழுதேன்... கவிகளை உச்சரித்துக்கொண்டே வந்தேன் பலமுறை... மெதுவாக ஒரு விளக்கக்கீற்று வந்தது... அது........
பட்டப்பகலில் வானில் மீன்கள் தோன்றா.... -- அதாவது கண்,காது முதற்கொண்ட ஐந்து புலன்களைக்கொண்டு இயங்கும்போது, அரூபமான அந்த நான் யார் என்று விளங்க இயலாது...
பார்வை இல்லார்க்கு அவை எந்த நாளும் காணா .... புலன்களைக் கடந்து செல்லாதோர்க்கு அவை எந்த நாளும் காணாது!
எட்டவில்லை அறிவிற்கு என்றால்... நாம் முயன்று உறுதிபட உணராது போகும் நிலை இருந்தாலும்....
உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்துகொள்ளும்...--- சாச்வதமாய் உள்ள இந்த இயற்கைத்தத்துவம் நிலையாய் அதன் இயல்பாய் நீடித்து நிற்கும்....
குருவின் இந்த கடைசி இரண்டு வரியை... அப்படியே வாசிக்கலாம்.. வாசித்தால் தான் அழகாகவே இருக்கிறது...
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்.. ?
மனிதனின் சிறப்பு என்ற கவியில், குரு சொல்வாஅர்கள்...
ஞானமும் வாழ்வும் புத்தகத்தில்... மூன்று பக்கத்திற்கு முழுமையாய், பூரணப்பொருளே புதுமை அடைந்து என்று தொடங்கும் அந்த கவி மிக அழகாக, பிரமாண்டமாய் ஒரு மனிதனின் பிறப்பு எவ்வளவு உயர்ந்தது என்பதை இதை விட அழகாக எப்படி சொல்ல முடியும் என்று அடிக்கடி அழுகை வரும்... ஒவ்வோர் புரிதலுக்கும், இந்த கருத்தாய் இருப்பவராக குருவே கூட வந்துகொண்டே இருப்பார்....
நான்கு வரிகளான கவியே புரிந்துகொள்ள முடியவில்லை, மூன்று பக்கமா இருக்கே என்று சோம்பல் பட்டு இந்தக் கவியை, ஞானமும் வாழ்வும் புத்தகம் வாங்கி 3- 4 வருடங்களுக்கு மேல் படிக்காமல் அலட்சியப்படுத்தி இருந்திருக்கிறேன்.... 2004ம் ஆண்டு மொரீசியஸில் இருந்தபோது, நண்பர் சுந்தரமூர்த்திக்கு, தவ அனுபவங்களை குருவின் கவிகளை மேற்கொள்காட்டி கடிதம் எழுதினேன்... அப்போது அவர், ஏக்கத்துடன் சில வரிகள் எழுதினார்.... இந்தக்கவிதையின் சிலவரிகளை எடுத்துக்காட்டி.... அதன்பிறகு அந்த கவியை படிக்கும்போதெல்லாம், குருவை எண்ணி எண்ணி ஏங்கி ஏங்கி, விக்கி விக்கி அழுதிருக்கிறேன்... சமீபத்தில், அட்சயா அவர்கள், கந்தர் சஷ்டி கவச, மெட்டில் இந்த கவியை அழகாய் பாடிக்கேட்டேன்... இன்னும் நன்றாகப் பதிந்தது...
சுந்தரமூர்த்தி சொல்லி இருந்தார்....
சுந்தர்... நாம இதுவரை, குருவின் மேன்மை பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்... குரு தந்த வரிகளாய், அதன் அனுபவமாய்...
விருப்பும் வெறுப்பும் எவரெனக்கண்டு
அறிவே இவையாய் தோன்றி இயங்கி
அவைதாம் மாறிடும் தன்மை கண்டு
அத்தகை அறிவின் தத்துவம் அறிய
அறிவை ஒன்றி அறிவில் நிறுத்தி
அறிவையே அறிய ஆழ்ந்து ஆழ்ந்து
பொறிபுலன் அடக்கிப்பொறுமை அடைந்து
ஒன்றி ஒன்றி ஒருவனாய் நின்று
உட்புறம் நோக்கி உணர்ந்து முடிவில்.........
அந்த முடிவில் என்ன என்பதைப் பற்றி மாத்திரம் பேசவேண்டும்.... குருவை என் இதயத்தில் வைத்து, சிக்கலுள்ள வாழ்க்கையிலு, சிவன் சீவன் நிலை மறவாது இருந்த காலம்... கூடவே இருந்தார்... தவத்தில் என் இன்ப துன்பங்களைத்தாண்டியும்.... சுந்தரமூர்த்தி அண்ணன் மட்டும் அல்ல.. என்னை விட வயதில் மட்டுமல்ல தவத்தில், குருவை அணுகுவதில் முன்னோடி, குருவின் கவிகளை வைத்து மட்டும் இன்று வரை பேசும்,வாழ்து காடும் குருவின் பிள்ளை.... நாமெல்லாம் பிள்ளைகள் தான் என்றாலும், என் பார்வையில், குருவின் பிள்ளை என்றால், இவர் தான்.... சென்ற மாதத்தில், ஒரு நாள் சொன்னார்...
சுந்தர்... நீங்க என் அனுபவத்தை பார்த்து சிலாகித்துக்கொண்டாலும், என் உள் அன்பு உங்களை, குருவோடு சென்று சேர்வதை தோளில் கை போட்டுக்கொண்டு, கைகளை கோர்த்துக்கொண்டு செல்வேன்...
குருவின் வரிகளான.... அறிவை ஒன்றி அறிவில் நிறுத்தி அறிவையே அறிய ஆழ்ந்து ஆழ்ந்து, பொறிபுலன் அடக்கிப்பொறுமை அடைந்து ஒன்றி ஒன்றி ஒருவனாய்...... என்று சொல்கிறார் அல்லவா...
இது தான் " உள்ள இயற்கைத்தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளூம்"? என்ற குருவின் தீட்சையோடு இறையை உணரவழி....
"பட்டப்பகலில் வானில் மீன்கள் தோன்றா முதற்கொண்ட " நாங்கு வரிகளுக்கு குருவின் இரு வரிகளில் ஒரு கவி கிடைத்தது நேற்று....
மாசற்ற ஒளி ஊடே,மறைந்திருக்கும் இருள் போல
ஈசன் அறிவில் இருக்கும் நிலை!!!
இருளும் ஈசனும் என்ற கவி.... ஞானக்க்களஞ்சியம் கவி எண் 1128 -- 01.01.1956ல் எழுதியது.... என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை...
எப்படி வெளிச்சத்தில் ஒளி மறைந்திருக்கிறதோ.... பட்டப்பகலில் வானில் மீன்கள் தோன்றா.... புலனறிவினை வெளிச்சம் என்று கொண்டால், அந்த மீன்களை அணுவென்றோ, இறைவன் என்றோ...கொள்ளலாம்... (பொருந்தி வருகிறதா????)
புலன்களைக் கடக்காதோர்க்கு நான் - ஈசன் நிலை போன்ற இயற்கைத்தத்துவம் உணரும் வாய்ப்பு..?...
எட்டவில்லை... புலனறிவிற்க்கு என்பதால், சத்தியமா ஒளிந்துகொள்ளும்....? சிந்தித்து சிந்தித்து, அனுபவித்து அனுபவித்து ஆராய்ந்து ஆராய்ந்து உயர்த்திக்கொள்வோம்...
குரு சொன்னார்... ஒரு கவியில்....
உயிரறிய அறிவறிய ஆர்வ முள்ளோர்
உருக்கமுடன் எனைச் சார்ந்தால், உரைப்பேன் உண்மை..... ஞானக்களஞ்சியம்... கவி எண் 1154..
சொன்னவர், செய்துகாட்டுவார் எப்போதும்... உருக்கமுடன் குருவை சார்ந்து, இணைந்து பிறப்பைப் பயனாக்குவோம்...
குருவே சரணம்...
No comments:
Post a Comment