வாழ்க வளமுடன்...
.
நாம் இப்போது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம் என்பது போல எண்ணுவதற்கு இடம் இருப்பினும், எல்லாம் வல்ல இறை நிலையானது, இதை உணர்பவரின் மூலத்தில் இருந்து கொண்டு ஒரு விழிப்பான அழைப்பு தருகிறது.... அந்த அழைப்பைப் பெற்று மூல நிலையோடு ஒன்றுவதற்கு நமக்கு இருக்கும் ஒரு உதவி குரு மட்டுமே...
செயல்கள் நாம் தான் செய்கிறோம்... என்கிற போது, முனைப்பு ஒளிந்து கொண்டு முழுமையாய் நிறைவு பெறாமல் வைத்துவிடுகிறது... கொஞ்ச நாள் தவம்... கொஞ்ச நாள் தவமின்றி என்ற இரு பக்கங்கள் பொதுவாக நமக்குத் தெரிகிறது...
வாழ்வில் எது நிகழ்ந்தாலும், அதை இன்ப துன்ப உணர்வாக அனுபவிக்கிறோம்... புலன் என்ற அளவில் அது பதிவாகிறது நமக்குள்.... இந்த இன்ப அளவில் நமக்குள் பதிவானவுடன், எதையோ சாதித்த உணர்வு நமக்கு எட்டியவுடன், தவமானது கலைந்து விடுகிறது... உலகாய விசயங்களில் (புற விசயங்களில்) மனது செல்ல ஆரம்பிக்கும் போது, சறுக்கி விட்டதாக அதே மனது பதிவு செய்கிறது...
இதனால் தான், புலன்களைத்தாண்டி நாம் தவத்தில் ஆழ்ந்து செல்ல வேண்டி வருகிறது... தவத்தில் இன்னும் உழைக்கவேண்டி இருக்கிறது என்ற யதார்த்த நிலையை குருவிடம் முழு மனதோடு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்... விழிப்பு நமக்குள் மலர்ந்து விட வேண்டும்.. இன்ப துன்ப அளவில் நாம் திருப்தியடைய முடியாது....
தவத்தில் குருவின் ஆற்றலை உணரும் வரை தவம் செய்ததாகக் கூட கருத வேண்டியதில்லை.... இதை தவத்தில் இவ்வளவு நாள் செய்தோம் என்ற பதிவைக் கொண்டு அணுகாது, நேர்மையாக குருவின் சாட்சியில் சீடன் உண்மையோடு நின்றால் தான் முன்னேற்றம் சாத்தியம்....
குரு ஒரு கவியில் சொல்வார்....
உயிரறிய அறிவறிய ஆர்வமுள்ளோர்
உருக்கமுடன் எனைச்சார்ந்தால் உரைப்பேன் உண்மை....
என்ற குரு கொடுத்திருக்கிற உறுதிமொழி சத்தியமானது தான் ஆனந்தமுடன் உணர்ந்து சொல்லும் வரை, சீடனுக்கு தவத்தில் முழுமை இல்லை....
இன்ப துன்பம் என்ற புலன் உணர்வுகளைக் கடந்தால் மட்டுமே தான் மனம் என்ற அலை ஒடுங்கி உயிராகும்... உயர்ந்தால் அதுவே தான் அறிவாகவும் இருக்கிறது என்று அறிவிக்கும் பேறு கிட்டும்... அது குரு சொன்ன வரிகளை ஏற்கிறேன் என்ற நிலையாக இருக்கும் குறைந்த பட்சம்...
தவத்தில் புலன்களைக்கடந்த நிலையைக்கூட சாட்சியாக கவனிக்கமுடியும், அப்போது இன்பமும், துன்பமும் இங்கில்லை என்ற யதார்த்தமானது சாசுவதமாக அறிவில் தெளிந்து விடும்....
நான் இதைச்செய்கிறேன், அதைச்செய்தேன் என்ற பதிவுகள் எல்லாம் புலனறிவே.... அலை வடிவில் நான்... என்ற நிலையில் இருந்து கொண்டால்,பேதம் இயல்பாக இருக்கும்... நல்லது அல்லது, கீழ் மேல், உயர்வு தாழ்வு, ஆண் பெண், இப்படி பேத நிலைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.... புலன்களானது ஒடுங்கும் போது, இந்த பேதமும் ஒடுங்கி விடுகிறது... அப்போது ஓர்மை நிலை கிட்டிவிடுகிறது... ஓர்மையில், மனமானது ஒடுங்கி அதுவே உயிராகிறது....
உயிர் அறிய என்ற கேள்விக்கு குரு தரும் அனுபவமாக, தவத்தில் உணரும் நிலையே தவத்தில் மேன்மை... புலன்களைக் கடக்கும் நிலையில், குருவின் இருப்பானது, சீடன் என்ற சிட்டுக்குருவியின் கால்களில் ஒரு நூலைக்கட்டி இழுப்பதைப்போல.... அறிவின் இருப்பிடத்தில் ஆற்றல்வலிமையுடன் இருந்து கொண்டு அறிவை முழுமையை நோக்கி அழைத்துச்செல்கிறார்... செல்வார்... இந்த நியதி, எப்போதும் இப்போதும் கூட மாற்றமின்றி இருக்கிறது...
மாற்றமில்லா நிலையான அறிவோடு இணைந்து ஒன்றாய் நிற்கும் கணத்தில், அறிவென்ற குருவுக்குள் சீடன், சீடனுக்குள் குரு என்ற அறிவு முழுமையாய நிறையும்...
குருவானவர் தனது கவியில்,
தனையடக்கித் தலைவனையே
முன்வைத்து ஒழுகும் நெறி
சரணாகதியென்னும்
சாந்த நெறி. இந்நெறியில்
தனைத்தலைவனாய்க் காணும்
தன்மை இயல்பாய் வளரும்.
தருக்கொழியும். ஆசிரியன்
தவக்காப்பில் உயிர் உய்யும்...
தனைத்தலைவனாய்க் காணும் தன்மை இயல்பாய் வளரும்... என்ற பேதமில்லா நிலை எய்தும்போது முனைப்பு முழுமையாய் ஒடுங்கி அறிவாய் இருப்பாய் தெளிவாகும்....
சீடனுக்கு முனைப்பு ஒடுங்கிவிட்டது எனில், குரு சொன்ன விதத்தில் இருந்ததாகவே இருக்கும்... இது எந்த மார்க்கம் எனினும் கூட.
குருவிடம் மானிடன் பரிபூரண நம்பிக்கை வைக்க வேண்டும்... பக்தனின் பலம் குருவிடமிருந்தே கிடைக்கிறது... குருவிடம் வைத்திருக்கிற பக்தி, பரமனிடம் வைக்கிற பக்தியிலும் மேலானது... என்று தன்னிடம் வந்தவர்களிடம் சொல்வாராம் ஷீர்டி சாயிபாபா....
வாழ்க வளமுடன்....