Sunday, December 12, 2010

108 Siddhar's regarding...

அன்புள்ள நண்பர்களே

வாழ்க வளமுடன்.


தியானத்திலே உறைந்து அருள் வெளியோடு இணைந்து நிற்கின்ற குருவின் காலடியிலே சிரம் வைத்து வணங்குகிறேன்.

தியானத்திலே குருவை நினைந்து சரணடைந்த சீடனுக்கு நிகழும் எதுவும் கூட குருவின் நிழலிலே தான் நிகழ்கிறது.


தவத்திலே சரணடைந்து குருவோடு கைகோர்த்து உயர்கிற போது, குருவை சீடன் பிடிக்க, சீடனும் குருவை பிடித்துக் கொள்கிறார். இந்த நிலையிலே குருவை விட்டு தப்பிக்க முடியாத/ ஒரு குழந்தையை தாயானவளால் அரவணைக்கப்பட்ட நிலையினை சீடன் எப்போதும் பெறுகிறான்.

பௌதீக உடலைக்கொண்டு எங்கு தான் போனாலும், ஆழ்ந்த நிலையிலே குருவே தான் சீடனை வழி நடத்திக்கொண்டிருகிறார். இதிலே குரு பௌதிக உடலோடு நம் அருகிலே இருக்க வேண்டிய தேவை இல்லை! எண்ணற்ற ஆண்டுகளுக்குப்பிறகும் கூட ஒரு சீடன் தோன்றி குருவை அணுகினால் கூட, குருவின் உதவி உடனடியாக கிடைக்கும்! இது உண்மை. நியதி! விதி!

தவத்திலே நீ இதை செய்யவேண்டும், இப்படி செய்யவேண்டும், உன் நிலை உன் தளம் என்று துல்லியமாக அனைத்தையும் குருவே சீடனுக்கு ஏதோ ஒரு வழியிலே தொடர்ந்து நடத்திக்கொண்டே தான் இருப்பார்!

நாம் தொழில் செய்கிறோம் அல்லது வியாபாரம் செய்கிறோம் அல்லது வீட்டிலே கடமையினை செய்கிறோம் என்று எந்த நிலையாக இருந்தாலும் கூட, நமது ஆழ்ந்த அறிவிலே குருவே தானே இருப்பார்?!

நீ எங்கே போனால் என்ன? உன் பிறவிக்கு என்ன தரவேண்டுமோ அதை நான் செய்யாமல் விடமாட்டேன் என்று குருவே தான் தொடர்ந்து நமது அறிவிலே தோய்ந்து இருப்பார்... என்றாவது தியானம் ஆழ்ந்து நிகழ்ந்தால் அப்போது பிறவிப்பயனைத் தரும் வரையிலே நாம் குருவையும், குரு சீடனையும் விடாத நிலை தான் உண்மையான சரணடைதலிலே நிகழும்!

உள்ளத்தின் உள்ளே பல தீர்த்தங்கள் என்று திருமூலர் பாடி விட்டார்! அதை நமக்கு உணர்த்துவது குரு மட்டும் தானே?!

நமது குருவானவர் ஆசிரியப்பயிற்ச்சி தரும் போதெல்லாம் சொல்வாராம்... நீங்கள் சூக்கமப்பயிற்ச்சி செய்யும் போது உங்கள் வீட்டிற்க்கு சூக்குமமாக செல்வதற்க்கு முன் நேராக சித்தர் தலங்களுக்கு சூக்கும நிலையிலே சென்று தரிசித்து பிறகே உங்கள் வீட்டிற்க்குச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்!

குருவே தன் வாயால் சித்தரின் தலங்களுக்கு செல்லலாம் என்று சொல்லி இருக்கிறார் என்கிற போது திரு சேர்மா சொல்வது போல தடமாற்றம் என்ற நடுக்கங்கள் எல்லாம் நமக்கு நிகழுமா?

சரணைந்து விட்டால் இந்த நடுக்கங்கள் எல்லாம் போய் விடும்! வெறுமனே சரணடைய வேண்டும்!

புலி வாயிலே அகப்பட்ட இரை விலங்கு எப்படி புலியின் வாயில் இருந்து தப்பிக்க முடியாதோ அது போலத்தான் சரணடைந்த சீடனின் நிலமையும்" என்று ரமணர் சொன்ன வார்த்தையை நெற்றிப்பொட்டிலே ஆணி அடித்தது போல பதிந்து கொள்ள வேண்டும்!

குருவே தான் நமக்கு அனைத்தையும் நிகழ்த்துகிறார்! நாம் வெறும் கருவியே! செய்கிற செயல்கள் நாம் முனைப்போடு நாம் செய்வது போல புலன் அறிவால் தோன்றினாலும், எல்லாவற்றையும் குருவே தான் செய்யவைப்பார்... சீடனுக்கு எது தேவையோ அதை குரு எப்படியும் நிகழ்த்துவார்.

இப்போது, நாம் ஒரு சித்தர் கோவிலுக்குப்போகிறோம்... தியானம் செய்கிறோம்... அப்படியே நமது குருவின் சமாதிக்கு அருகிலே அமர்ந்து தவம் செய்கிறோம்... அப்படியே நமது மன்றத்திலே, நமது வீட்டிலே என்று எங்கும் தியானம் செய்தாலும், நமக்குள் எதை எப்போது தரவேண்டுமோ அதை குருவே தான் தருவார்... காரணம் நாம் சரணைந்து இருக்கிற காரணத்தினால்!

எங்கு வேண்டுமானாலும் போய் தியானம் செய் ஆனால் பிறவிப்பயனான இறை என்ற வலிமையை சரணடைந்த கணத்திலே இருந்து குரு நமக்குள் தருவதற்க்கு எல்லாம் வகுத்து விடுகிறார்!

எங்கும் தியானம் செய்யுங்கள்! ஆனால் குருவிடம் சரணடைந்தோமா?! அதுவே தான் முக்கியம்...

எந்த சூழ்னிலையோ, குரு நம்மை கைவிட்டு விடுவாரா என்ன? அப்படி ஒரு பயம் இருக்கிறதென்றால் இன்னமும் குருவின் மேல் நம்பிக்கையும், குருவிடம் சரணடைதலும் நிகழவே இல்லை என்று பொருள்! நல்ல தவத்தின் பலன் தான் நடுக்கம் இல்லாத, பயம் கடந்த நிலையைத்தரும்!

சரணடைந்த சீடனுக்கு தவறு ஏதாவது நிகழ குரு விட்டுவிடுவாரா? அல்லது தவறாக ஒன்றை செய்ய குரு சொல்வாரா? செயல்கள் அனைத்தும் குருவே தான் முடிவெடுப்பார்!இயற்கையிலே இயல்பாக நாம் செய்கிற ஒவ்வொன்று முனைப்பு இன்றி நம்மை சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்க்கிற வரை குரு நம் கையை விட்டு விடுவதே இல்லை!

தெய்வ நிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்
தெய்வ நிலை யதனை வெளி ப்ரம்மம் என்று
தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்

தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்துகொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப்பற்றி
திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர் சொல்வேன்.

என்று நமது குரு சொன்னதை மனதில் கொள்ளுங்கள்!


குருவிடம் சரணடையுங்கள்! நீங்கள் எங்கு சென்றாலும் குரு கூடவே இருக்கிற உண்மை உங்களுக்குள் தெளியும்!

வாழ்க வளமுடன்.


அன்புள்ள திரு சேர்மா


நமது குரு நமக்குக்கற்றுக்கொடுத்துள்ள குண்டலினி தியானம் என்பது பல காலமாக உள்ளது தான். அந்த தியான முறையை இன்றைய பல மகான்களும் கூட தங்களுடைய புரிந்துகொள்ளல் மற்றும் அனுபவத்திற்கேற்றார் போல இன்றைய உலகத்திற்க்கு கற்றுத்தந்து கொண்டே தான் இருக்கிறார்கள்!

நமது குருவானவ்ர் நமக்கு குண்டலினி தியானத்தினையும், உடற்பயிற்சி மற்றும் காயகல்பம் என்ற அனைத்தும் எண்ணற்ற சித்தர்களின் அறிவுரைகளுக்கேற்பவே தான் சொல்லித்தந்திருக்கிறார்கள். வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள்!

நமக்கு இந்த தியான முறை என்ற பழம் கையில் கிடைத்து விட்டதால், பழத்தை எடுத்துக்காட்டிய சித்தனை நிந்திக்கும் தவற்றினை செய்ய வேண்டியதில்லை!

எதற்கும் கேள்வி கேட்பது அறிவின் முதற்படி
எல்லாவற்றிற்கும் ஒத்துப்போவது அறிவின் உச்சப்படி!

என்ற வார்த்தையை ஞாபகத்திலே கொள்வது நல்லது!

நமக்கு நம் குரு கிடைத்து விட்டார்! ஆனால் மற்ற அனைத்து மகான்களும் தவறு அல்லது தேவை இல்லை என்றால் நாம் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறோம்? வெறும் ஆட்டுமந்தையா நம் சக மனிதர்கள்? 20 சித்தர்கள் போதும் என்று உங்களுக்கு சொன்னது அன்பொளி எனில் மற்ற சித்தர்களை பார்க்கவேண்டாம் என்று சொன்னதும் அன்பொளியா? குருவா அப்படி சொன்னார்? என்று அப்படி சொன்னார்?

அந்த 20 சித்தர்களுக்குள் இல்லாத வள்ளலார், நமது குருவின் உடலில் சில காலம் இருந்ததாக நமது குரு சொன்னாரே அதிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே தெரிகிறது!

வள்ளலார் நமது குருவிற்க்குள் இருந்ததை நம்புகிறீர்கள் எனில் ஏன் நீங்கள் வள்ளலாரை உங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை?

வேண்டுமானால் 20 போதும், 30 போதும் என்ற உங்கள் பரிந்துரைகளுக்கு எல்லாம் கட்டுப்பட்டா சித்தர்கள் இருக்கிறார்கள்?

உண்மையான ஆன்மீக முன்னேற்றம் என்றால், அனைத்து மகான்களின் தியான அனுபவத்திலும் உள்ள ஒற்றுமையை நாமும் தியானித்து இறையை உணர்ந்தால் தான் கிடைக்கும்! எல்லாவற்றிற்கும் ஒத்துப்போவது அறிவின் உச்சப்படி என்ற தன்மை உண்டாகும்!


ஒருவர் தியானத்திலே இறையோடு உயர்ந்தார் எனில், எப்படி இறையை உணர்ந்த சித்தர்களை எல்லாம் ஒதுக்கமுடியும்?

நாம் வாழும் போதே, நன்றாக தியானம் செய்து சமாதி அனுபவம் பெற எப்படி ஆழ்ந்து செல்ல வேண்டி இருக்கிறது?


சத்சங்கத்வே நிஷ்சங்கத்வம்
நிஷ்சங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்சலதத்வம்
நித்சலத்வே ஜீவன் முக்தி!

ஆதி சங்கரரின் இந்த வரிகளிலே கூட உயர்ந்தோரின் தொடர்புகளால் தான் நமக்கு முக்தி தரும் என்கிறார்!

எங்கெங்கோ கூட்டம் போட்டு சர்க்கஸ் போல உடலை வளைத்து சுற்றி முண்டாசு கட்டிக்கொண்ட கிராமத்து மனிதனைப்போல அன்னாந்து பார்க்கும் இன்றைய நமது மகக்ளை வைத்துக்கொண்டு நாம் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் செயல்களை எல்லாம் அருள் தந்தையின் வழியிலே என்று போட்டுக்கொண்டு சொல்வது எல்லாம் சரியாக வெகு நாள் நீடிக்காது! பார்த்து நடந்து கொள்ளுங்கள்!

மாகுரு தன ஜன எவ்வன கர்வம்
ஹரதின மேனா காலஹ சர்வம்!

நண்பர்கள், பணம், புகழ் என்ற அனைத்தும் நிலையானது அல்ல! காலம் என்ற இயற்கை நினைத்தால் ஒரு கணத்திலே அனைத்தையும் மாற்றி வைத்து விடும் என்று ஆதி சங்கரர் சொல்கிறார்!

நமது குருவின் பெரும்பாலான பேச்சுக்களின் தொடக்கத்தில், பெரியோர்கள் ஞானிகள் மற்றும் குருவின் பாதத்திலே மனதை வைத்து வணங்கியே தான் பேசுவார்!

அப்பேர்ப்பட்ட அருள்தந்தையின் வழியில் செல்வதாக சொல்லிக்கொண்டு சித்தர்களை புறக்கணிப்பதெல்லாம் என்னமோ குருவின் வழியாக தெரியவில்லை! நம்மை நாம் தாழ்த்துவதை தவிற வேறொன்றும் இல்லை!

21ம் நூற்றாண்டின் தத்துவ ஞானி/ சித்தர் என்று போற்றப்படுகிற நமது குருவின் சமாதி இந்த பட்டியலில் இல்லையே? அதற்க்கு என்ன செய்வது? தேவை இல்லையா உங்களுக்கு? அங்கு போய் தியானம் செய்யும் போது நமக்கு எதுவும் நிகழாதா? குருவின் முன் தியானம் செய்யும் எங்களை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

திரு சேர்மா அவர்களே.


நாம் மன்றத்தில் கூட்டுத்தவம் நடத்தும் போது எல்லாம் குரு வணக்கம் பாடுகிறோம்.

அதிலே

அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்தது தான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்க்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக்கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவால் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோ நினைவுகூர்வோம்.

என்ற நம் குருவின் கவியை மறக்காமல் பாடுகிறோம்.


வள்ளல் பெருமானின் உயர்வை நமது குரு சொன்ன விதம் தான் நாம் கவனிக்கவேண்டியது. ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் என்று சொல்லும் போது, நமக்கு முன் தோன்றிய எண்ணற்ற மகான்களின் எழுத்துக்களும், ரிஷிகள் எழுதிய வேதங்களும் நம் கண் முன்னே இருக்கிறது..

இதிலே எத்தனை பேர் ஆழ்ந்து அறிவிலே நிலைத்தார்கள்? வள்ளலார் அவ்வறிவிலே ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் என்கிற போது அது எப்பேர்பட்ட சாதனை! எப்பேர்ப்பட்ட ஆன்மீக உயர்வு! வள்ளலார் எப்படி வாழ்ந்து ஆனந்தத்திலே இருந்திருப்பார்?! அந்த உயர்வு ஒவ்வோர் மனிதர்களுக்கும், அதிலே நம்மைப் போன்ற தியானப்பயிற்சி எடுத்தவர்களும் கிடைக்கும் படி இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் உயரவேண்டும்! நான் ஆசிரியன் என்று நான் குரு என்னை வணங்க வேண்டும்...

ஒவ்வோர் தவத்திலேயும் குருவிற்க்கு வணக்கம் என்கிற இடத்திலே நமது குரு தன்னைத்தான் அங்கே நினைக்கவேண்டும் என்று தன் வாயால் எப்போதாவது சொல்லிக்கேட்டிருக்கிறோமா? அவரே இவ்வளவு ஆழம் பணிந்து, அறிவிலே நிலைத்தோர் அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம் என்ற அடக்கத்துடன் சொல்லும் போது நாமெல்லாம் எப்படி இருக்கவேண்டும்?

குருவின் தாத்பரியத்திற்க்கு சான்றாய் இருக்கவேண்டியது நாம்! இந்த ஆசிரியர், துணைப்பேராசியர் என்ற பட்டமெல்லாம் நமக்கு யார் தந்தது? குருவின் பிச்சை தானே! குருவின் காலடியிலே எப்போதும் மனதை வைத்து உயரவேண்டிய நெறியிடன் வாழ வேண்டிய நாம், சொல்லித்தந்த சித்தர்களின் பாடலை வைத்து அவர்களுக்கே இழுக்கு ஏற்படுத்துவது எப்படி நல்ல வினைகளை நமக்குத்தரும்?

ஒவ்வோர் செயலுக்கும் விளைவு உண்டு... இயல்பூக்கம் உண்டு. நாம் மனதால், அறிவால் கடந்திருக்கிற ஒவ்வோர் அசைவையும் துல்லியமாக குரு அறிவார்! அறிவியல் பேசுகிற மக்கள் இருக்கலாம். கண்ணை மூடி அமர்ந்தால், முதலிலே சரணாகதி வேண்டும் இல்லாவிடில் அங்கே தூக்கமும்,பொழுது போக்குதலுமே தான் இருக்கும்!

இதைக்கற்றேன், ஈர்ப்பு விசையை பற்றி பேசுவேன் என்றதெல்லாம் ஒரு ரோபோ கூட செய்யும்...


இங்கே, நமது அன்பர் திரு அருண் அவர்கள் முந்தைய கட்டுரையிலே.

தூக்கமில்லை விழிப்பில்லை துரிய தவத்திலே ஆழ்ந்திருந்தேன்
தோன்றினார் ஒருசித்தர் தெரியுமா நான்யார் என்றார்
நாக்கு எழவில்லை இவர் போகரோ என நினைந்தேன்
நறுக்கென்று பேசினார்...

என்ற கவிய்லும்,

என்று எனை இராமலிங்க வள்ளல்பெருமானார்
எதிர் நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ
அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன் என் வினைத்தூய்மையாச்சு

இன்று எந்தன் மன நிலையோ வள்ளற் பெருமானார்
எந்த செயல் செய்யென்று உணர்த்துவாரோ அதுவே
நன்று எனக்கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்


என்ற கவி எழுதிய நமது குருவிற்க்கு அன்று முதல் எழுதிய கவிகள் எல்லாம் தான் தத்துவமழையாய் நமக்கு புத்தகமாய் நம்முன் நிற்கிறது!

நமக்கு குரு கிடைக்க உதவிய அன்னை லோகாம்பாள் அவர்களுக்கும் அருளே குணமாகக்கொண்ட மகானுடைய ஆவி தொடர்பு கொண்டுள்ளது! சில சமயம் அன்னைக்கு மயக்கம் வந்து சாய்ந்து விடுவாராம்! அதன்பிறகு அந்த ஆவி பேசத்தொடங்கும்! அதன் மூலம் எங்கள் குடும்பத்திற்க்கு எவ்வளவோ பாதுகாப்பும் நன்மைகளும் ஏற்பட்டன" என்று குரு வாழ்க்கை விளக்கம் புத்த்கத்திலே சொன்னார்!

பிறகு அந்த ஆவியுடன் குருவே உரையாடி ஆராய்ச்சி செய்து பிறப்பிற்க்கு முன்னும் பின்னும் உயிரின் நிலை என்ற ஆழ்ந்த புத்தகத்தினை நமக்குத்தந்தார்கள்!

போகரை, வள்ளலார் போன்ற மகான்கள் என்று தெளிவாகச் சொன்ன குரு, இந்த மகான் பெயரை குறிப்பிடவே இல்லை! அப்படியும் கூட இறையானது நமக்குத் தேவையானவற்றை இயல்பூக்க அடிப்படையிலே உரியவர்களின் மூலம் நமது குருவிற்க்கு அருளியது!

எண்ணிலடங்கா மகான்களின் கருணையால் எவ்வளவோ உதவிகள் மனித சமுதாயத்திற்க்கு உயர்வு உண்டாகி இருக்கிறது...

அவ்வை மூதாட்டி தமது வினாயகர் அகவலிலே குண்டலினி எழுப்பும் கலையை அறிந்ததாக தெளிவாக சொல்கிறார்! ஆதி சங்கரர் துரிய தவம், துரியாதீத தவம் என்று அனைத்தையும் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார்...

குருவானவர் 30.12.1968ம் தேதியிலே " மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து " புத்தகத்திலே பக்கம் 133ல் எழுதினார்!

சித்த நிலை உணர்ந்தோர்கள் உதிர்த்த சொற்கள்
சிறப்பறியாரால் விளக்கம் செய்யப்படும் கால்
எத்தனையோ குழப்பங்கள் உண்டு பண்ணும்
இறையுணர்வீர் உம்மறிவே விளக்கம்கூறும்!

என்றார்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment