Thursday, December 9, 2010

Reply to SMART Director..

வாழ்க வளமுடன்.

குருவே சரணம்.


எந்த ஒரு செயலுக்கும் விளைவு என்ற நியதியின் அடிப்படையிலே நமக்கு இறை நீதி குருபிரானால் வழங்கப்பட்டிருக்கிறது.

குருவானவர் சொல்லி இருக்கிற வழிமுறைகள் அத்தனையும் அறிவார்ந்த எவருக்கும், பகுத்தாய்வு செய்தாலும் கூட அறிவிற்க்கு நிறைவாக இறையே தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வர்.

ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர் தன்னைச்சார்ந்தவர்களான தாய் தந்தை, மகன், மகள் என்று பலவித சுற்றங்களுக்குள் உள்ள உறவு என்பது நீடித்து நிற்பதில்லை. காரணம் எதிர்பார்ப்பும் அதனால் கண்ட ஏமாற்றங்களுமே. ஆனால் சீடனாக ஒருவர் நமது குருவின் முன் அகத்திலே சரணடைந்து விட்டால், குருவானவர் சீடனுக்கு கருணை நிலையை உணர்த்தும் வரை விட்டுவிலகுவதில்லை. அந்தவிதத்திலே, கருணை நிலையை ஒருவர் உணரவேண்டும் என்றால் குரு என்ற அருளுடன் இணைந்தே தான் இருக்கவேண்டும்.

நமது குருவானவர் எத்தனையோ முறை சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிவந்தார். காரணம், ஒவ்வோர் முறையும் அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் முறையாக தேவைப்பட்டோருக்கு சென்று சேர்ந்தது. குரு என்ன காரியம் செய்தாலும் அதிலே இருந்து எழும்புகின்ற அலைகள் நம்மை காந்த களத்திற்கு கொண்டு சென்று விடும்.

இறை வெளியில் விண் சுழல நெருக்கின்ற உரசல்
நிலை வெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்

என்ற குருவின் வரிகள் ஒரு உதாரணம்.


இந்த விரிவான கேள்விகளிலே உள்ள சாராம்சமாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால், குருவானவர் அமைத்து இருக்கிற எந்த ஒன்றும் பகுத்தறிவிற்கு புறம்பானது இல்லை என்பதும், அதை மாற்றும் போது குருவின் வார்த்தைகளுக்கு/வரிகளுக்கு நிகரான, எவர் கேள்வி எழுப்பினும் பதில் சொல்லப்படுகின்ற வகையிலே இல்லை என்பதை சுட்டிக்காட்டுவது மட்டும் தான்.

இதை குறையாக எடுத்துக்கொள்ளாமல், இறை என்ற கருணை நிலையானது நமது குருவின் பெருமையை நிலை நாட்ட எடுத்துக்கொடுக்கும் சில முன்னெச்செரிக்கையாகக் கருதலாம். குருவின் தாத்பரியத்திற்க்கு இன்னல் ஏற்படக்கூடாது என்ற அன்பினால் தான் இந்த கேள்விகள் எழுகிறதா என்றும் பார்க்கலாம்.

கேள்வி கேட்டவரின் சில வரிகள் முனைப்பு தெரிகின்றது.

பொதுவாக, ஆசிரியர்கள் சரி இல்லை... தரம் இல்லை. என்னிடம் இது போன்ற பல கேள்விகள் உள்ளன. இது தான் என் தொலை பேசி எண். தொடர்பு கொள்ளலாம் என்ற வரிகள் எல்லாம் குருவிடம் நிலைக்காத வரிகள். குருவிற்க்காக அக்கரை எடுத்துக்கொள்ளும் அவர் எழுகின்ற முனைப்பை முறையாக குருவிடம் ஒடுக்கி எழுதி இருப்பின் வித்தியாசப்பட்டிருக்கும்.

கேட்டவர் முனைப்புடன் இருக்கிறார் என்றாலும், பதில் சொல்லும் பொறுப்புடையவர்கள் குருவின் களத்தை விட்டு இறங்கி வரவே கூடாது என்ற கோட்டை வைத்துக்கொண்டு செயல்படுதல் மிக முக்கியம். அதற்காக நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் அறிவின் உயரம் என்ன என்பது போன்ற வரிகள் எல்லாம் நிச்சயம் குருவின் தன்மையான வரிகள் அல்ல. கருணை நிலையிலே இருந்து அசைந்தாலும் பிடிப்பானது குருவிடம் இல்லாததால் தான், பதிலும் முனைப்பாகவே தென்பட்டிருக்கிறது.

கேட்டவர் யாராகவேண்டுமானாலும் இருக்கட்டும். பதில் சொல்பவர் குருவின் இருப்பிடத்தை விட்டு நீங்காது இருக்க வேண்டும். வெளி உலகுக்கு நாம் பதில் சொல்லும் முன் ஒரு குழு போன்று ஒன்று இந்த மாதிரியான கேள்விகளுக்கு எது சரியாக இருக்கும் என்று ஒருவரை ஒருவர் கலந்து கொண்ட பிறகே தான் பதில் வெளியிலே வரவேண்டும்...முனைப்புடன் பதில் இருப்பின் அந்த களங்கம் சொன்னவரை விட, நமது சங்கத்திற்கே போகும் என்பதால் விழிப்புணர்வு முக்கியம்.

இறை வெளியிலே தத்துவத்தை பற்றி சொன்ன போது " மகரிஷி தன் வாழ்நாளில் தன்னுடைய தத்துவங்களில் தேவையானபோது தொடர்ந்து மாற்றங்கள் செய்து வந்தார் என்பதை அறிவோம். முதலில் இறைவெளி இருப்புநிலை) என்றார்கள். பின்பு அதில் நுண்ணிய அசைவுள்ளது என்று மாற்றினார்கள். இறைவெளி வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு என்றார்கள். பின்பு காலத்தையும் இணைத்தார்கள். அதனால்தான் அவரது தத்துவம் என்றும் வாழ்ந்து வருகிறது. "

குருவின் வரிகள் வெளியிலே சொன்னபோது கேட்டவரின் அறிவிற்கேற்ப, குழந்தைகளுக்கு சொல்வது போல படிப்படியாக சொல்லி இருக்கலாம். ஆனால் இதிலும் கவனிக்கவேண்டியது என்னவென்றால், முதலில் சொன்ன இருப்பு நிலை என்பதை நீக்கவில்லை. மாறாக அடுத்து ஒன்றை சேர்த்தார். பிறகு வேறொன்று.. இப்படி எத்தனை சொன்னாலும் கூட, சொன்ன வரிகள் ஒவ்வொன்றும் சத்தியத்திற்க்கு மாறானதாக துளியும் சொல்லவில்லையே? அதை ஏன் இப்போது நாமும் கடைபிடிக்கக்கூடாது?

நாம் இப்போது ஒன்றை அப்படியே மாற்றுகிறோம்... இரண்டொழுக்கப்பண்பாடு, இப்போது ஓம் சாந்தி சாந்தி....என்பதெல்லாம்... ஆனால் விளக்கம் கேட்டால் எந்த மாதிரி பதில் வருகிறது என்று திரும்பி பார்க்க வேண்டும்.. எவர் எப்போது எங்கே நம்மை தடுத்துக்கேட்டாலும், முன்பு கடைபிடித்த எந்த ஒன்றும் அறிவிற்க்கு புறம்பானது இல்லை என்று குருவை பிடித்துக்கொண்டு அல்லவா சொல்லவேண்டும்?

குருவே சொல்லிவிட்டார் எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லி, நாமே குருவின் வரிகளை எடுத்து, அதற்க்கு பொருத்தமில்லா ஒன்றை தந்தால் அது எப்படி பொருந்தும்? எதையும் மாற்றலாம் ஆனால் அது குருவின் வாசகத்திற்க்கு நிகரான ஒன்றா என்று பார்க்கவேண்டும். அவ்வளவே தான். பதில் சொல்பவர் தமது முனைப்பைக் காட்ட களம் இல்லை இது.

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்து அடங்கு... என்ற வரி அனைவருக்கும் பொருந்தும் எக்காலத்திலும்.


இவ்வளவும் உங்களை நோக்கி வருவதற்க்குக் காரணம் குருவே என்று எடுத்துக்கொண்டு... அப்பா என்று அவரின் புகைப்படத்தை உற்றுப்பாருங்கள், அந்த மெல்லிய புன்னகையிலே ஆயிரமாயிரம் அறிவார்ந்த மாற்றுக்கருத்துக்கள் எவரும் நம்மை குறை சொல்ல முடியா, எவரையும் அணுகும் தன்மை கிட்டும்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment