குருவே சரணம்.
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல். என்ற வரியானது மிகவும் ஆழ்ந்த ஒன்றாகவே நீடிக்கிறது. இந்த உடலுக்குத் தேவையான பல விச்யங்கள் இருக்கிறது. அதிலே நமக்கு சமுதாயத்திலே உள்ள சக நண்பர்களின் நட்பும், அன்பும் தேவையாகவே இருக்கிறது. ஆனால் நாம் உடல் என்ற வட்டத்திலே சிக்கிக்கொண்டிருக்கிற போது, நமக்கு அதற்கேற்றார் போல ஒத்த அறிவுடையோரே தான் நண்பர்களாக
இருக்கிறார்கள். இதே நாம், நமது மனதை அறிவை நோக்கி உயர்த்தி வந்தால், நமது செயல்களில் மாற்றமும், அந்த உயர்ந்த அறிவின் தன்மைக்கேற்ப உள்ளோரே தான் நண்பராக இருக்க முடியும்... மனது உடல் என்ற வட்டத்திலே உள்ளோர்கள் எல்லாம் அப்போது பொருந்தாது போய்விடுகின்றனர். நாம் அவர்களை விலக்காவிட்டால், அறிவாகிய இறையே விலக்கிவிடுகின்றது! நாம் யாரிடம் நட்பு கொள்கின்றோமோ
அவர்கட்கேற்ப நமது நடவடிக்கைகள் மாறுகிறது.
இதைத் தான்,
சத்சங்கத்வே நிஷ்சங்கத்வம்
நிஷ்சங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்சலதத்வம்
நித்சலத்வே ஜீவன் முக்தி!
என்று பஜகோவிந்தத்திலே ஆதி சங்கரர் பாடினார். நமது நட்பு எப்படியோ அப்படியே தான் நமது வெளிப்பாடு அமைந்திருக்கும். நல்லவரின் தொடர்பானது பற்றுக்களை விட வைக்கும். பற்றுக்களை விட்டவர்களால் தான் மாயைகளின் பிடியில் இருந்து விடுபட முடியும்...மாயையில் இருந்து விடுபட்டவர்களால் தான் மனது உயர்ந்து லயிக்கமுடியும்... அப்படி உயர்ந்வர்களால் தான் முக்தியானது நமக்கு
கிட்டும்!
என்று ஆதி சங்கரர் விவரிக்கிறார்.
இதைத்தான் நமது குரு,
தேடுகின்ற பொருள் என்ன ஏன் நமக்கு
தெரிந்தவர் யார் கிடைக்குமிடம் எது ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சில பேரே கொள்வார்.
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார், உளம் நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்துப்போவதைப்போல முரண்பாடன்றோ!
நமக்குத்தேவையான அமைதி, அருள், ஞானம் என்ற அனைத்தும் இயல்பாகவே நாம் முன் பின்னாக அதை நோக்கியே செல்கின்றோம். ஆனால் இந்த உடலைக்கொண்டு வாழும் போதே அடைந்து விடவேண்டும் என்கிற போது, அமைதி,அருள்,ஞானம் என்று அனைத்தும் தருபவர் யார் என்று அதற்கேற்றார் போல வாழ்வை அமைத்துக்கொள்வோரே முக்தியைப்பெற முடியும். அப்பேர்ப்பட்ட ஒரு நட்பு யாரிடம் கிடைக்கும்?
குருவைத்தவிர நமக்கு வேறு எந்த நட்பு நமக்கு நிலைத்து நின்று அறிவை உயர்த்த முடியும்?
ஒருவர் பிறக்கிறார், இறக்கிறார். தாயின் வயிற்றிலே இருக்கிறார். இந்த சில நிகழ்வுகள் திரும்ப திரும்ப நிகழ்ந்தாலும், உடலைக்கொண்டு இருக்கும் நமக்கு இந்த காலத்திலே எப்படி கடினம் இருக்கிறதோ அப்படித்தான்,உடலாக உள்ள அனைத்தும் இறையை நோக்கி கடினப்பட்டுக்கொண்டு இருக்கின்றன..
புனரபி ஜனனம், புனரபி மரணம்
புனரபி ஜனனே ஜடரே சயனம்.. என்று பஜ கோவிந்தத்திலே பாடுகிறார் ஆதி சங்கரர்.
ஆத்மா எப்போதுமே ஒன்று தான். ஒன்றுக்கு மேல் தெரிந்தால் அங்கே சிவ நிலையை விட்டு நாம் விலகி நிற்கிறோம் என்று பொருள்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment