வாழ்க வளமுடன்.
குருவே சரணம்.
மனம் என்ற புலன் கொண்டு நோக்கும் போது (இறை)அறிவின் மீதான விழிப்பு தவறுவது என்பது இயல்பானது... கவனமானது ஏதாவது ஒன்றின் மேலே தான் இருக்கமுடியும்.
எவர் ஒருவர் சரணாகதி அடைகிறாரோ அந்தக் கணத்திலே அவர் புலன்களைக் கடந்து விரிந்தும், ஒடுங்கியும் இறையோடு இணைந்து விடுகிறார். அப்போதிலிருந்து அவர் ஐம்புலன்கள் கொண்டு செயல்பட்டாலும் கூட, புலன்கள் கடந்த அந்த தூய அறிவிலே நிலைத்த கணத்தையே உண்மை என்று செயல்புரிவார்.
புலன்கள் கொண்ட செயல்கள் எல்லாம் அவர் முன் நிலைப்பதில்லை...
இதைத் தான் நமது குரு நாதர்,
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும் உள் நுழையா
இப்பேறு தவத்தாலன்றி யார் பெறுவர் யார் தருவர்?
என்று ஒரு கவியிலே சொல்லி இருப்பார்.
எவர் ஒருவர் தவத்திலே சரணடைகிறாரோ அப்போதே அவருக்கு ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சிகள் எப்படி உள் நுழைகிறது என்கிற விழிப்பு நிலை ஏற்பட்டுவிடுகிறது...
புலன்களால் நாம் அனுபவிப்பது எல்லாம் நமது முனைப்பு இயங்குவதன் அடையாளமே... தன் சுய நிலையே தான் அனுபவமாக அறிவில் பதிவாகிறது... இப்படி, அசைவது, அனுபவிப்பது, அசைவற்ற தன்மை என்பது போன்ற பல நிலைகள் எல்லாம் கூட சுய நிலையானது நோக்கி இருக்கிற தன்மைகளை எடுத்துக்காட்டுவதே... எப்போது அசைவற்ற தன்மையிலே ஒருவர் ஆழ்ந்து செல்கிறாரோ அப்போது அவரின் சுய நிலை என்பது இறை நிலையாக ஆழ்ந்து விரிந்து ஒடுங்கிப்போகிறது... அப்போது சுய நிலையே இறை என்ற பேரின்ப நிலை எய்துகிறது அறிவு.. இதைத் தான் அஹம் பிரம்மாஸ்மி.. நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று சொல்லப்படுவதாகிறது...
நானே அவன், அவனே நான் என்கிற தன்மையிலே சரணடைந்தவர் திளைக்கிறார்... அந்த அசைவற்ற ஆனந்த நிலையிலே, இருப்பது என்பது அதாவது இருப்பு + அது என்று, இறை மட்டுமே இருப்பாக இருக்கிறது என்ற நிலை சத்தியமாகவும், அதுவே நான் என்று அடங்குதலில் இருந்து, தன்னை அன்று வேறு எதுவும் நீடித்து நிலைக்காமல் சென்று விடுகிறது என்று உணர்ந்து விடுகிறார்.
குரு என்ற அருள் நிலை என்பது இரண்டு அற்ற ஒன்றாகிய ஒன்றின் மேல் அசைவற்று நிலைத்து நீடித்தல் என்பது தான். அந்த நிலையிலே நின்ற சீடர் எவரும் குருவானவர் அங்கிருந்து அசைந்தார் என்று உறுதியாக எடுத்துக்காட்ட எவரும் இல்லை.
அசைவற்ற நிலை என்பது, ஐம்புலன்களின் இயக்கத்தைத் தாண்டி இருப்பு + அது என்பதாய் விளங்குவது...
இப்போது நமது குருவின் நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்கிறோம்... இது குருவின் அருளால் நன்றாக நடந்தது என்று சொல்லப்படுவதை கேட்க முடிகிறது...
அவர்களெல்லாம் குருவிற்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்... கேள்வி என்ன வென்றால், எப்போது குருவானவர் அசைவற்ற தன்மையிலே இருந்து அசைந்தார்? தன் சுய நிலை என்பது இறை இருப்பே என்கிற போது, தன் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முனைப்பு எப்படி குருவிற்க்கு ஏற்படும்?
உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்
உலகினிலே எழுபதெட்டாண்டு வாழ்ந்து திருவருளே
அவ்வப்போது உணர்த்த உணர்ந்திட்டேன்.
செய்த வினைப்பதிவுகளைத் தூய்மை செய்து கொண்டேன்.
கருத்தொடராய் பின்பிறவி இல்லை இனி இல்லை.
கர்ம வினை மிச்சமில்லை இச்சை இல்லை எதிலும்
அருல் நிறைந்த பெருஞ்சோதி எனை அரவணைத்துக்கொள்ளும்
அந்தப்பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்...
இறையோடு ஒன்றிய சமாதி நிலையிலே குருவானவர் அறிவித்த இக்கவியிலே, கர்மவினை மிச்சமில்லை, இச்சையில்லை எதிலும் என்கிற நிலையிலே இருந்து குருவானவர் விலகியதாக அறுதியிட்டு கூறுவோர் யார்?
இறையோடு கலந்து நிற்கின்ற குருவிற்க்கு இறை அமைப்பு ஏற்படுத்திய நிகழ்வே தான் இப்போது நிகழ்வதெல்லாம். நமது குருவானவர் இறை நிலையோடு இணைந்து நின்று இயங்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது... எப்போது தவம் செய்தாலும் கூட, தன் சுய நிலையினைத் தாண்டி குரு தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதும், குருவை அணுகும் போதே அறிவு பேரறிவாக மாறும் நிலையினை கவனிக்க வேண்டும்...
வினைப்பதிவுகளைத் தூய்மை செய்து கொண்டால் தான், இறையிலே ஒருவரால் நிலைக்க முடியும். அப்படி லயித்த குருவானவர் தான், தான் இனி மேல் தன் உடலை மையமாக்கி செய்ய வேண்டிய கர்ம வினை மிச்சமில்லை என்று தெளிவாக்கி விட்டார்... மேலும் இச்சை இல்லை எதிலும் என்றும் கூறி விட்டார்....
இதற்கு மேலும் குருவானவர் தன் உடலுக்கு முக்கியத்துவம் தரும் எதிலும் செயல் புரிவாரா?
ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும் உள் நுழையா... என்று பார்க்கும் போது, எந்த உணர்ச்சிகளும் கூட உள் நுழையாத நிலையிலே குருவின் இயக்கம் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இறை நிலையிலே அசைவு ஏற்பட்ட உடன், இரண்டற்ற நிலையிலே இருந்து இரண்டாகி விடுகிறது அறிவு. புலன்களும் செயல்பட ஆரம்பிக்கிறது... முனைப்பு தொடங்கி விடுகிறது. எப்போது அசைவு ஏற்பட்டதோ அப்போதே விழிப்பு நிலையிலே இருந்து அறிவு பிரிந்து விடுகிறது. விழிப்பு தனித்தும், முனைப்பு தனித்தும் இருந்து விடுகிறது.
அயரா விழிப்பு நிலையிலே லயித்தால் தான் குருவானவரின் இயக்கம் அறிவிலே பதியும். குருவை புலன்கள் கொண்டு பிடிக்க முடியாது.விழிப்பிலே நிலைத்தல் என்பது குருவின் இயல்பு... மறப்பது புலன்வயப்பட்ட நமது இயல்பு.
என்ன செய்வது... ஞானிகளும் முட்டாள்களும் தங்கள் நிலையிலே இருந்து ஒரு நாளும் மாற்றிக்கொள்வதில்லை..
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment