வாழ்க வளமுடன்...
குருவாழ்க.
அன்புள்ள திரு மதன் அவர்களே...
ஆன்மா என்பது என்னவென்று புரிந்துகொள்ளவேண்டும் எனில், குருவின் அருள் முதலில் வேண்டும். குரு என்ற வெளிச்சம் இல்லாவிடில் எதனையும் உணரமுடியாது.
ஆன்மா என்பது ஒன்றே தான் இருக்கிறது... மேலும் தியானத்திலே இறை நிலையிலே லயித்தால், எண்ணம் குறைந்து, மனம் உயிராக தன்மாற்றம் பெறும். அந்த உயிரானது மென்மேலும் உயர்ந்து இறை நிலையிலே லயிக்கும் போது உயிரே அறிவாக உணரப்படும். எப்போது மனம் உயிராக தன்மாற்றம் பெற்றதோ, அப்போதே மனம் என்ற ஒன்று தன் இயக்கத்தினை நிறுத்தி விட்டிருக்கும்.
மனத்திலே இருந்த கேள்விகள் எல்லாம் இங்கே வேலை செய்யாது எனினும், அடி ஆழ் மனதிலே இருந்த பலவித நிலைகளுக்கு விளக்கம் தானாகவே தெளிந்து போகும். கவலை வேண்டாம்.
இறை நிலையிலே அறிவாக லயித்தவுடன் தியானித்தாரே அவரின் இருப்பானது இறை நிலையே என்று ஒன்றாகிப்போகும் போது தான் ஆன்மஞானம் கிட்டும். அதுவே ஆன்ம நிலை.அங்கே நிலைத்தால் முக்தி.வீடு பேறு.
இப்போது திரும்பி வருவோம்..
ஆன்ம நிலையிலே இருந்து உயிராகி, உயிரே மனமாக ஆனவுடன் மீண்டும் எண்ண அலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்... மனம் உயிரானவுடன் எண்ணமற்று போன பிறகு மீண்டும் இங்கே தான் எண்ணம் வேலை செய்கிறது என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.
எண்ணங்கள் இது வரை எங்கே போயிருந்தது? உங்களுக்கு இப்போது இருக்கிறதே அது போல கேள்விகள் என்ன ஆனது? இறை நிலை தவத்திலே, கேள்வி கேட்க மனம் இருந்ததா? இல்லை அல்லவா? அப்படி எனில் எப்படி ஆன்ம நிலையிலே பிறப்பாகிய எண்ணமும் இல்லை அதன் இறப்பும் இல்லை.
உங்கள் உடல் எங்கேயோ உட்கர்ந்து கொண்டு இருக்கிறது... ஆனால் மனம் உயிராகி அதுவே ஆன்ம நிலையிலே லயித்துவிட்டது. ஆனால் எண்ணம் இருந்தால் தான் பிறப்பைப்பற்றி கேட்கமுடியும்? எண்ணமில்லையேல் எது பிறக்கமுடியும்?? புரிகிறதா? நமது எண்ணமே தான் பிறப்பும், பிறப்பும். ஆன்மாவின் நிலையிலே பிறப்பு இறப்பு என்று கட்டுப்படுத்த எதுவும் இல்லை.ஆகையால் ஆன்மா அழிவில்லாதது.
ஆன்ம நிலையிலே அசைந்தவுடன் தானே எண்ணம் பிறந்தது? ஆக மறுபடியும் பிறந்து விட்டது அதுவே. ஆன்மாவில் எண்ணம் இயங்க வாய்ப்பில்லை. தனது இருப்பைப்பார்க்க தியானித்தவர் ஆன்ம நிலையில் லயிக்கும் அளவுக்கு முன் வினை பின்வினைகள் எல்லாம் கழிந்து போகும். தேவை குருவிடம் தொடர்பும், பணிவும்.
குருவிடம் இருந்தால், எந்த கர்மத்துக்கும் பயப்படவேண்டியதில்லை... உடல், மனம் வரை தான் இந்த கருமங்கள் எல்லாம்... அருட்பெரும் சோதியாம் அந்த ஆன்ம நிலையிலே இருந்தால், கருமத்தை நினைக்கும் மனம் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டிருக்கும்.
ஆன்ம நிலையிலே தன்னை அன்றி வேறு எதுவும் இல்லை.. அங்கே அனுபவிப்பது,அனுபவிக்கும் பொருள் என்று இரணு நிலைகளைக்கடந்தே தான் சரணாகதி ஏற்படுவதால், அனுபவிக்க எவரும் இல்லை. இருப்பது சுத்தவெளியாகிய பேரறிவே.
எது நீடித்து நிற்கும் என்றால் குரு என்ற இறை நிலையே... குரு, ஆன்மா, இறை நிலை மூன்றும் ஒன்றே.
2. நமது சூக்கும உடலைப்பற்றி ஒன்றும் கவலைக்கொள்ளவேண்டும். அதனைப்பார்த்து அனுபவித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? இந்த மாதிரி பல நுண்ணிய விசயங்கள் வழியிலே வந்து போகும்... இதிலெல்லாம் மனதை செலுத்தாத அளவுக்கே தியான உயர்வு கிட்டும்.
அனுபவிப்பவனும், அனுபவமும் அகந்தையான தன்முனைப்பையே தரும். குருவிடம் ஒடுங்காத வரை இதெல்லாம் பார்த்துவிட்டு ஒன்றும் பெறப்போவதில்லை.
உடலினில் உள்ள ஒளி ஒலியைக்காண
உனக்கின்பமிகுமெனிமும் இதற்கு மேலாய்த்
தொடர்புகொண்டு பலபொருளில் கண்டு விட்டோம்
சுகமென்ற தத்தனையும் சலிப்பும் கண்டோம்...
கட உள் நீ. இவை அனைத்தும் அறிந்து தாண்டி
கருத்தொடுங்கிக்காண்பவனே தனிக்குமட்டும்
திடமடைந்து அறிவு லயமாகி நிற்கத்
தெளிவடைவாய் கற்பனைபோம் தேவை முற்றும்...
ஒரு விதத்திலே நாம் பிறப்பும் மறுபிறப்பும் என்பது நமது மனத்தினால் கண்டுபிடிக்கமுடியாத நிலையிலே அதை மறைக்கப்பட்ட உண்மை என்ற பகுதியிலே விட்டு விட்டு, மனதால் திரும்ப திரும்ப நினைத்துப்பார்த்து ஆச்சரியத்துக்குள் உள்ளாகிறோம்.
எண்ணங்கள் என்பது எங்கே இருந்து தொடங்குகிறது என்று ஆராயும் போது, எண்ணத்திற்க்கு முன்னும் பின்னும் எண்ணமற்ற நிலை இருப்பதைக்காணலாம். எண்ணமற்ற நிலை என்பது மௌனமே. எண்ணங்கள் அதிகமாக இருக்கும் போது, நுணுக்கமான மௌனமானது விழிப்புடன் கவனிக்க முடிவதில்லை.
தியானத்திலே முன்னேற்றம் ஏற்படும் போது, திடீரென்று ஒரு எண்ணம் உதித்து நம்மை தடுமாற வைக்கும் போது, எண்ணம் என்பது மௌனத்தை விட்ட இடத்திலே வருகிறது என்பது தெளிவாகும்.
எண்ணங்கள் தொடங்கும் முன்னும், எண்ணங்கள் ஒடுங்கும் போதும் மௌனமே இருக்கும்... மௌனமே இறை நிலை.
இறை நிலையோடு தமது முனைப்பு அடங்கும் போது, அறிவது,அறியப்படுவது என்ற சாட்சி அறிவைத் தாண்டிச் சென்று விடுவதால் அங்கே விவரிக்க முடியாத நிலையைத் தான் ஆன்ம நிலை. இதுவரை ஆன்ம நிலை என்ற விளக்கம் தனித்தே இருப்பதற்குக்காரணம் இதுவே.
ஆன்மா என்பது எப்போதும் எந்த கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் சாராமல் தனித்தே இருக்கிறது. இங்கே மௌனம் அயராவிழிப்பிலே தொடர்ந்து அளவற்று, எல்லையற்று இருந்து தனித்து இருக்கிறது....
தியானத்திலே நமக்குள்ளே உள்ளவற்றைக்கொண்டு உயர்ந்து சென்றால், எவரிடமும் கேட்காத பலவிசயங்கள் நம்முடைய அடி ஆழத்திலே பதிந்து இருப்பதும், அதன் விளக்கமானது அனைத்தும் தியானத்திலே உணர்த்தப்படும் நிலை வருவதையும் காணலாம்.... எந்த ஒரு கேள்வியும் நமக்குள்ளேயே விடையாய் எடுத்துத்தந்த பிறகே தான், இனி அறிவதற்கு எதுவும் இல்லை என்று ஆன உடன், குருவே நம்மை இழுத்துக்கொண்டு இறைவெளி என்ற கருவிலே அழைத்துச்செல்வார்...
ஆன்ம நிலை உணரும் போது, விழிப்பு நிலையோடு இருக்கும் வல்லமையானது பழக்கமாகி ஒட்டிவிடும் சீடனுக்குள். அதன் பிறகு, எது நிகழ்ந்தாலும் சீடனுக்குத் தாயும் தந்தையும், குருவே என்றாகி, கருவுக்குள் அடங்கிவிடும்.
குருவானவரை பற்றிக்கொள்ளும் அளவுக்குத்தான் எதுவும் உள்ளே இறங்கும்... எல்லாம் வாயால் சொன்னால் மறதியால் போய் விடும்... அறிவால் உணர்த்தும் குருவிடம் சென்றால் சரியாகும்.
முன் வினைகள் என்ற ஒன்று உண்மையிலே இருப்பது உண்மை என்றால், குருவின் முன் வரட்டும் என்று குருவோடு இருந்து தியானம் செய்தால்... எண்ணத்தின் அளவுக்கே தான் எந்த முன்வினைகளும் நமக்குள் வேலை செய்யும். எந்த அளவுக்கு குருவிடம் அடங்குகிறோமோ, அந்த அளவுக்கே வினைப்பதிவுகள் அடங்கும்... அந்த மாதிரி குருவோடு இணைந்து இருந்து நாம் வாழலாம்.
குரு என்ற உணர்வை தியானத்திலே எட்டுகிற போது, உங்களுக்கு முன் வினைகள் இருந்ததா? கர்மங்கள் என்று ஏதாவது சொல்ல இருந்ததா என்று பாருங்கள்... இவை எல்லாம் மனம் என்ற வட்டம் வரையே வேலை செய்யும்.
தியானத்திலே அமருங்கள்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment