Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 1

குருவே சரணம்.

குரு அருளின் திரு அருளால் எமக்குள் எழுந்த சிறு கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் எம்முடைய எழுத்துக்கள், கருத்துக்கள் ஒவ்வொன்றும் குரு என்ற சுத்த வெளியில் கருணை நிலையிலே இருந்து எழுதுகிறேன் எமது அறிவுக்கு எட்டினவரை, பிரணவம் என்பது மனதைக்கடந்த சுத்தவெளியிலே உணரப்படும் ஓசை.. ஓ ஹம்... அதாவது எழும் "சப்தமும் நானே" என்பது... அதுவே ஓம் என்று குறிக்கப்படுகிறது.

அந்த பிரம்ம லயிப்பிலே இருந்து விழிப்பு நிலையிலே, எழுகின்ற ஓசையானது ஒருவிதத்திலே ஓம் என்ற ஓசையினை ஒத்து இருப்பதை பல மகான்கள் அனுபவித்து சொல்லி இருக்கிறார்கள். இதையே தான் நமது குருவும் கடைபிடித்தார்கள். இது இந்தியர்களாக இருக்கும் பட்சத்திலே, நமக்கு அது ஒரு சமயத்தினர் பயன்படுத்துவது வாடிக்கை என்றாலும், மற்ற சமயத்தினர் என்று கருதப்படுபவர்கள் அதை பயன்படுத்தக்கூடாது என்ற எந்தவித விதியும் இல்லை தடையும் இல்லை.

மத சார்பின்மை என்ற காரணத்தினால் இந்த புது விதி என்று சொன்னால், இவ்வளவு வருடம் எத்தனையோ நாட்கள், வருடங்கள் சமாதி நிலையிலே இருந்து வந்து நமது குரு மாற்றாத ஒரு விசயம் இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மேலும் குருவானவர் மதச்சார்பின்மையை கடைபிடித்தாரா என்ற கேள்வியும் எழுந்து விடுகின்றது...



தாய்ப்பறவை முட்டையிட்டு அவயம் காக்க
தனித்தனியே உருவடைந்து முழுமையாகும்.
சேய்ப்பறவை பூரணமாம் வரைக்கும், அந்தச்
சிறுமுட்டை ஓட்டைவிட்டு நிங்கிடாது

நோய்பொறுக்கா நிலையில் அதை உடைத்துக்கொண்டு,
நொடியினிலே வெளியேறும் விந்தை காணீர்!
தூயநிலையார் அறிவறிந்து முழுமை பெற்றால்
துரிதமுடன் மதம் கடபபார். உண்மை காணீர்!


என்பார் நமது குரு...

எப்போது ஒருவர் மனதைக்கடந்து அறிவை அறிந்து முழுமை பெறுகிறாரோ அவர் தானாகவே மதம் கடப்பார் என்றும் நமது குரு சொல்வார்...



அப்படிப்பார்க்கையிலே, இதுவரை குருவானவர் முழுமை அடையாதது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதன் மூலம் குருவானவர் மதச்சார்பின்மையை கடைபிடிக்கவில்லை என்று சொல்வது எப்படி?

யாரை திருப்திப்படுத்த இந்த மாற்றம்? அவர்களிடம், ஓம் என்ற வார்த்தையினை பயன்படுத்தும் காரணம் விளக்கப்பட்டதா? குருவானவர் நீர் என்றால் அது நீர் தான், நெருப்பு என்றால் அது நெருப்பு தான் அந்த நெருப்பிலே குதி என்று சொன்னால் குதிக்க தான் வேண்டும் அப்பொழுதுதான் குருவின் கட்டளையை ஏற்றுகொண்ட ஒரு சீடனாக நாம் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. குருவானவர் முழுமை நிலையில் எழுதிய, நமக்கு கொடுத்த முறைகளை எந்த காரணத்தினாலும் நாம் விட்டுகொடுக்க வேண்டியதில்லை என்பது எமது தாழ்வான கருத்து.

இவ்வளவு நாளாய், ஓம் சாந்தி என்று சொல்லும் போது என்ன ஆனதோ அதுவே தான் புதிதாக சொல்லப்படும் வரிகளாலும் நடக்கும்.


துரியாதீதத்திலே தவம் நிலைத்தால், அமைதி நிலைத்து விடும். ஓம் சாந்தி என்று சொல்லவே வேண்டியதில்லை... இந்த பழக்கங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்களுக்காக சொல்லப்பட்டது.

தவம் நிகழ்ந்தால் அமைதி தானாகவே நிலைத்து விடும். குருவின் காலடியை பிடித்துக்கொண்டால் எல்லாமும் சரியாகி விடும். சென்னையில் இருக்கும் ஒருவர் சுய நினைவுடன் வாழும் பட்சத்தில் அவர் நான் சென்னையில் இருக்கிறேன் என்று திரும்பி திரும்பி சொல்லி கொண்டு இருக்க தேவையில்லை. அதுபோல அமைதியினை உணர்ந்த ஒருவருக்கு நான் அமைதியிலே இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு இருக்க தேவையில்லை.

கற்பனைகளுக்காகத் தான் இந்த மாற்றங்கள் எல்லாம். அமைதி என்பது மனது இயங்கிக்கொண்டே அமைதி அமைதி என்று சொல்லிக்கொண்டே இருப்பின் வந்து விடாது... மனதைக்கடந்து விட்டால் வராமலும் இருக்காது.

எமது எண்ணங்கள் யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை என்பதை குருவின் மேல் ஆணையிட்டு சொல்லிகொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment