Friday, December 10, 2010

குருவின் ஈர்ப்பு--விழிப்பு நிலை!!!

வாழ்க வளமுடன்

எல்லாம் வல்ல குருவருளின் துணையால் வாழ்க வளமுடன்.


நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இக்கணத்திலே நின்று கொண்டு நாம் நமது அறிவின் உச்ச நிலையில் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்... அதற்கு குருவின் துணையானது எப்போதும் நீடித்து நிலைத்து அருள் புரிந்து கொண்டே இருக்கிறது.


ஒரு சம்பவம் முன்னர் நிகழ்ந்ததை திரும்பி பார்ப்போம்...


ஒரு வளமான நாட்டின் அரசருக்குப் பிறந்த ஒரு ஆண் வாரிசு, நிச்சயமாக துறவு நிலைக்குச்செல்லும் என்று கணிக்கப்பட்டதால், அந்த அரசர் கவலை கொண்டு, அந்த வாரிசுக்கு கவலை என்பதை அறியவே கூடாது என்பதற்க்காக அந்த அரண்மனையிலேயே எல்லா வசதியை செய்து தந்து பொழுது போக்கிலேயே வாழ்வை கடத்தி விடுவது என்று முடிவெடுத்தார்.

அந்த இளவரசருக்கு மூன்று சீதோஷ்ணத்திற்க்கு மூன்று அரண்மனைகள்.... அங்கே இளவரசரை சந்தோசப்படுத்த, சுற்றிலும் அழகிகள். மதுவும், நடனமும் என்று எக்கணமும் பொழுது எப்போதும் புலன் இன்பத்திலேயே வைக்கப்பட்டிருந்தார் அந்த இளவல்.

எக்கணமும் மதுவிலும், மாதுகளின் துணையும் இளவலை சிந்திக்கக்கூட நேரம் தராதவாறு பல கேளிக்கைகள்.

ஒரு நாள், அந்த இளவலுக்கு தான் எப்படி இருக்கிறோம் என்ற ஒரு சிந்தனை உதிர்த்தது.... நன்றாக மதுவருந்தி சுற்றிலும் பெண்களுடன் தூங்கி இருந்த அந்த இளவரசரின் இதயம் மெதுவாக விழிக்கிறது.... தூக்கத்தில் இருந்த கண்கள் அந்த மயக்க போதையிலே இருந்து மெதுவாக விழித்துப்பார்க்கிறது....


ஆழ்ந்த தூக்கத்திலே அந்த அழகிகள், போதையிலே தன்னை மறந்து குறட்டை விட்ட நிலையும், வாயிலே உமிழ் நீர் வடிய சாய்ந்திருக்கிற அழகிகள் மிகவும் அசிங்கமாகப்பட்டது இளவரசருக்கு. அழகிகளோடு தானும் மயக்க நிலையிலே உள்ளதை காணப்பொறுக்காதவராய் அந்த அரண்மனையை விட்டு ஓடுவதற்க்குக்கிளம்பினார்....


அப்படியே தன் மனைவியின் அந்தப்புறத்திலே சென்று தன் மனைவியை ஒரு முறை கண்ணால் பார்த்துவிட்டு அந்த அரண்மனையை விட்டு ஓடிப்போனார்....

அந்த விழித்த இதயமானது, அயரா விழிப்பு நிலையை அடைந்து,தன்னை உணர்ந்து, மானிடராய் பிறந்த ஒருவர் ஞானத்தின் உச்ச நிலைக்குச் சென்றார் என்று உலகத்தையே ஒப்புக்கொள்ள வைத்தார் அந்த இளவரசர்...


அவர் தான் கௌதம புத்தர் என்கிற சித்தார்த்தர்.


விழிப்பு நிலை என்பது நாம் கண் விழித்து இருப்பது அல்ல. நம் இதயமானது இருப்பின் இதயத்தோடு இணைந்த பிறகு தான் நமக்குக் கிடைக்கப்பெறுகிறது.


வழக்கம் போல நாம் செய்யும் எந்த செயல்களும் நமக்கு ஒரு போதும் சரியான ஒன்றை அடைய துணை புரிய வில்லை என்று புரிந்து கொள்ளாத அளவிற்கு நாம் மதி மயக்கத்திலே நம்மை ஆழ்த்திக்கொண்டிருந்தால் எப்படி நமக்கு அந்த விழிப்பு நிலை கிட்டும்?

தியானம் பல காலம் செய்தும் நம்மை உயர்த்தவில்லை என்று புரிந்து கொள்ளாதவருக்கும், தான் மட்டுமே நிறைய கற்றுக்கொண்டவர் என்று கற்பனை கொண்டு இருப்பவருக்கும், அந்த விழிப்பு நிலை ஒன்றுமே செய்து விடாது...

அடியும், முடியும் அறியாது என்ற வார்த்தை சிவ நிலையிலே நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்... எதுவும் அடைவதற்க்கு என்று இல்லை. புதியதாக எதுவும் முளைத்து வருவதில்லை... எது புதிதாக முளைத்து வருமோ, அது நிலைக்காது போகும்.

ஆனால் இருப்பது இருப்பு என்ற ஒன்றே!

இருப்பது--- இருப்பு + அது.

இருப்பு--- அது தான் மூலதனம். அதுவே தான் மூல நிலை.


விழித்து இருப்பது-- விழித்துக்கொண்டு இருக்கிற இருப்பு அது ஒன்றே.


புதிதாக ஒன்றும் இல்லை. விழித்துக்கொண்டால், கனவைப்போன்று அலட்சியமும், முனைப்பும் அகன்றி விடும்.


ஞானம் என்பது, விழித்துக்கொள்ளவேண்டும் என்பவருக்கு மிகவும் இயல்பாகவே இருக்கும்.


புதிதாக வானத்திலே இருந்து எதுவும் இறங்கி வராது.... ஆனால் எப்படி இருக்கிறது இருப்பின் தொடர்பு என்பதை உணர்த்தும் அந்த தியான உச்ச நிலை.

குருவின் தொடர்பு என்பது தான் தற்சோதனை... குருவின் மீதான சிந்தனை தான் இருப்பு- அதை(இருப்பதை) உணர வைக்கும்...


இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை.இதையுணர
இருள் நிலைக்கு மனமடங்கி ஈசனோடு ஒன்றாகி
இணைந்த பின்னே உணர்வது தான் மெய்ப்பொருள் உணர்வாம்.


இருப்பு நிலையை நாம் தியானத்திலே உணர்வதற்க்கு உள்ள தகுதி தான் குருவின் மேல் உள்ள ஆழமான தொடர்பு.

இறை தியானத்திலே நாம் தொடங்குகிறோம்....


ஒவ்வோர் நிலையையும் நாம் செய்யும் போது குருவின் மீதான சிந்தனையை விடவே கூடாது.... குருவைக்கொண்டு வந்து உயர்த்தவேண்டும் அந்த உயிரை.

முதலில் இந்த முறை-- நாளடைவில் பழக்கமானால் தானாகவே நம்மை குருவோடு இணைத்துக்கொண்டு தவத்தை நிகழ்த்த வைத்து விடும்.

இறை தவத்திலே நாம் அமர்ந்து இருக்கிறோம்... குருவின் மீதான ஆழ்ந்த அன்பால், தாயாக தந்தையாக குருவாக அமைந்த இருப்பு நிலையாம் அந்த குருவின் பொற்பாதங்களை மனதிலே கொண்டு அமர்ந்து இருக்க வேண்டும்...

இறை தவத்திலே நாம் சக்திகளத்தைத் தாண்டிச் செல்கிற போது, நாம் திரும்ப குருவின் மீதான தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்... இந்த பழக்கமானது நாமாக தியானம் செய்கிறோம் என்ற முனைப்பை அறுக்கும்.

நாம் நமது குரு சொன்ன கவியாக மாற்றம் பெறுகிறோம்.


இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை...


என்ற குருவின் வரியாய் நாம் மாற்றம் பெறுகிறோம்.

எந்த எண்ணத்தையும் நாம் முறையாக குருவின் துணையால் முளைக்க முளைக்க குருவின் காலடியில் மனதை செலுத்தி நம்மை தியானத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

எழும் எண்ணத்தின் அளவு குறைய குறைய, மௌன நிலையானது உள்ளே புகும். எண்ணம் குறைந்தால், இச்சையும், தேவையும் குறைந்து போகும்... அந்த குறைவதன் அளவு என்பது குருவின் மீதான ஆழமான தொடர்பில் தான் கிட்டும்...

எண்ணம் குறைய குறைய, மௌனமாக, இச்சை, தேவை இன்றி போகும் நாம், இயக்கமின்றி என்ற நிலைக்கு வருவோம்...இந்த நிலையானது நமது உடலின் கை கால்கள் மற்றும் அசையும் ஒவ்வொன்றும் என எல்லாமும் படிப்படியாக அடங்கும்...

மூச்சு உள் இழுப்பது மட்டுமே இருக்க, மூச்சு விடுவதன் கட்டுப்பாடு நமக்குக்கிட்டும்... அந்த கட்டுப்பாடு என்பது இதயத்தின் கட்டுப்பாட்டை நமக்குத் தரும்...

மூச்சு கட்டுக்குள் வந்தால், இயக்கமின்றி என்ற வரியாய் நாம் மாற்றம் பெறுவோம்... இந்த இயக்கமின்றி என்ற கட்டுப்பாட்டை நாம் பெறுகிற போது, குருவே தன் ஈர்ப்பைக் காட்டுவார்... அந்த ஈர்ப்பிலே ஆனந்தமாக பொறி புலன்கள் முழுமையாக கட்டுப்பட்டு இருக்கும்... குருவின் ஈர்ப்பு நிலையானது அதன் பிறகு நம்முடைய முயற்ச்சியின் அளவிற்கு ஏற்றார் போல, தன்னுடைய அளவற்ற அன்பை/ இறைத் தன்மையை வெளிப்படுத்தும்...

குருவின் ஈர்ப்பானது நமக்கு அயராத விழிப்பு நிலையைத் தந்து விடும். அந்த விழிப்பு நிலை என்பது தியானம் செய்யும் சீடனின் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தி, இருப்பின் இதயத்தை உணர்த்தும்.

குருவின் தொடர்பு என்பது அப்போது தான் முழுமையாக இது வரை நாமே அறியாத, பிரபஞ்சத்தின் ரகசியத்தினை நமக்கு விளக்கும். நாம்கொண்ட அன்பிற்காக, நமக்கு அந்த கருணையை காண்பிக்கும் குருவின் இருப்பு.

நாம் கொண்ட அந்த அன்பின் தொடர்பு என்பது, நாம் கற்பனையே செய்யாத உயர்வை நமக்கு வாரி வழங்கும். அட, நாம் கொண்ட அன்பிற்க்காக மட்டும், யாருமே தரமுடியாத ஒன்றை தந்தார் குரு என்று ஆச்சரியப்படும் அளவிற்க்கு இருக்கும்.

அஹம் பிரம்மாஸ்மி... நானே பிரம்மமாக இருக்கிறேன்... என்பது போன்ற தத்துவத்தின் சாராம்சத்தை நமக்கு விளக்கிக்காட்டும். அறிவாக தரும்.

எது ஸ்தூலம்... எது சூட்சுமம்.... என்று பல வித எண்ணிப்பார்க்கமுடியாத விளக்கங்கள் அனுபவமாக அறிவிலே விளங்கிப்போகும்.

இதயத்தை நிறுத்தும் கட்டுப்பாடு நமக்கு கிட்டும்... அந்த வல்லமை குருவே எளிதாக எடுத்துக்கொடுப்பார்... ஒவ்வோர் வழிமுறையும், கட்டளைகளாக நாம் செய்து முடிக்க முடிக்க அடுத்த ஒன்று பிறந்து அடுத்த செயல் பிறந்து மீண்டும் மீண்டும், இருப்பை விட்டு அகலாமலும், அதே நேரம் நாம் விழிப்புடனும் இருப்போம்... அந்த விழிப்பு நிலையானது நமது விழிப்பு அல்ல... அந்த இருப்பின் விழிப்பு.


நாம் நிறுத்திக்கொண்டால், இருப்பு விழித்துக்கொள்ளும். இந்த விழிப்பு நிலையானதன் இதயமாக நாம் மாறிப்போயிருப்போம்.

எப்பொருளை, எச்செயலை, எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றம் காணும்.
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்.
எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்...

என்ற குருவின் வரிக்கு ஏற்ப,

இருப்பின் தன்மையாய்/ குருவின் தன்மையாய் நாம் மாறிப்போவோம்....


குருவின் இருப்பு அது தான். அதுவே தான் நமது இருப்பும் கூட... இருப்பும், குருவும், நானும் ஒன்றே என்ற நிலை தான் அது... நாம் விழித்து விட்ட நிலையிலே இந்த உணர்வு புலப்படுவதால், விழித்துகொள்ளாதவர்களால் மட்டும் தான், அதாவது தூக்கத்தை விட்டும், கனவை விட்டும், கற்பனையை விட்டும், எழுவதற்க்கே முயற்ச்சிக்காத, சோம்பல் உள்ளவர்களால் மட்டும் தான் குரு நம்மை விட்டு போய் விட்டார் என்று சொல்ல முடியும் என்ற உண்மை நிதர்சனமாகிப்போகின்றது...


நாம் அந்த அயரா விழிப்பு நிலையிலே இருக்கும் போது குருவும், இருப்பும், நானும் ஒன்றே என்று புரியும் போது, குருவின் இதயத்தின் துடிப்பாக நாம் மாறிப்போவோம்.

விழித்துக்கொண்டு இருப்பது--- இருப்பு (அது) மட்டும் தான். மற்ற தூங்குவது பற்றியும், கனவை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

விழித்துக்கொண்டு இருப்பதாக நாம் மாறாத வரை, தூக்கத்தில் இருப்பவர்கள், குருவின் இருப்பை பற்றி, அதாவது குரு எங்கோ இருக்கிறார் என்றும், நம்மை விட்டு போய் விட்ட நாள், நேரம், என்று தங்களின் கற்பனையை, தூக்கத்தின் பிதற்றல்களை நிறுத்தி மௌனம் காப்பது அவர்களுக்கு கொஞ்சம் நன்மையைத் தரும்.

குருவின் இதயம் தூங்குவதிலை. தூங்கப்போவதுமில்லை.

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்
என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே
கன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்
உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்குத் தொண்டு செய்வேன்.

என்றார் குரு.

அவரின் ஆற்றல் அள்ளித்தர தயார் நிலையிலே குரு எப்போதும் இருக்கிறார். குருவின் பாதங்களில் முனைப்பை செலுத்தி விழித்துக்கொள்வோம் இப்பிறவியில்.


வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment