Thursday, December 9, 2010

கருவுக்குள்ளே பிறக்காதிரு...

குருவே சரணம்


எல்லாம் வல்ல இறை அருளால் வாழ்க வளமுடன்.


நமக்குள் உள்ள எண்ணத்தை ஒருவர் முயன்று சீர் செய்துவிட்டால் அங்கே அமைதி என்பது நிலைக்க ஆரம்பிக்கிறது.

இந்த உலகம் என்ற ஒன்று புறப்பொருளாக அதாவது புலன்களைக் கொண்டு மட்டும் உணரப்படும் நிலைக்குள் மட்டுமே எப்போதும் இருக்கிறது.

மனம் என்ற ஒன்றைக்கடத்தல் என்பது எண்ண அலைகளைத் தாண்டுதல் என்ற நிலை. எந்த ஒரு எண்ணமும் மனம் எடுக்கிற வடிவம் என்ற நிலையே எப்போதும். இந்த உலகம் காண்பதற்கும் புலன்களின் இயக்கத்திற்கு புலப்படுவதும் உண்மையாகத்தோன்றினாலும், மனம் என்ற ஒன்று கடக்கப்படும்போது, அது ஆழ்ந்த தியானமோ அல்லது தூக்கமோ, அங்கே புலன்கள்த்தாண்டி சென்று விடுகிறோம்.

ஆழ்ந்த தூக்கத்தின் போது உலகம் இல்லாமல் இருந்ததா? இல்லையே. அப்படி என்றால், நமது எண்ணத்தைக்கடந்து விட்டால் புறப்பொருளான எதுவும் இல்லாது போகிறது அல்லவா? அது போல, தோன்றுகின்ற பல படிவங்களும், தோற்றங்களின் மூலமும் கூட காண்பவனின் எண்ணத்தையே அது காட்டுகிறது. ஆகவே, ஒருவருக்கு பலவிசயங்களைப்பேசும் போது, மனமே அவ்வளவு வடிவம் எடுக்கிறது. ஆனால் விழிப்பு நிலை இல்லாத போது, அது முனைப்பாக மாறி அதுவே மனிதன் தவறான திசையிலே செல்லவைத்து விடுகிறது.

ஆழ்ந்த தியானத்தின் போது, அது வரை பதிவாகிய பலவிசயங்களும் கூட நிலைத்து நில்லாமல் சென்று விடுவதால், நிலையான ஒன்றாகிய இறை நிலையை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது தானாகவே. மௌன நிலையிலே களத்திலே நின்று நிதானிக்கும் போது, எந்த எண்ணமும் இல்லை.. அங்கே இருப்பு ஒன்றே தமது சுயமாக விரிந்து விடுகிறது. அது வரை போட்டிருந்த வீண் பற்றுகள் அங்கே களையப்பட்டு, எந்த ஒரு வார்த்தையினால் கட்டுப்பெறாத, மன இயக்கங்களைக்கடந்த ஒன்றே தமது இயல்பாய் தியானிப்பவன் செல்கிறான். இதனை உணரவே மனிதனின் ஒவ்வோர் முயற்சியும் நட்க்கிறது.

ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ காரியங்கள் செய்யும் போது, இதனால் அமைதி வரும் என்றே தான் முனைகிறான். ஆனால் விழிப்பு நிலை என்பது அந்த மௌன நிலையோடு இல்லாத்ததால், முனைப்புடன் செயல்புரிவதை உணராது செயல் விளைவு என்ற வட்டத்திற்குள் சிக்குகிறான்.

மௌன நிலையிலே இருந்தும் கூட செயல்கள் புரியலாம். அங்கே நிலைத்து விட்டால், நாம் நமது அடையாளமாக இப்பொது இருக்கிறோமே, அதை இழந்து விடுவோம் என்று பயமும், சிற்றின்ப நிலையாக அந்த பற்றும் இருப்பதால், மனிதன் இறையை நோக்கிச் செல்வதை மறுக்கிறான்.. அது தான் தோன்றும் பொருள்களின் மீது பற்று கொண்டு, மென்மேலும் சிக்கல்களில் சிக்கி, தனது இயல்பு மௌனமே என்கிற அமைதி, ஆனந்த நிலையை மறக்கிறான். இதுவே தன்முனைப்பு. தன்முனைப்பு குருவின் தன்மையிலே இருந்து விலகி விட்ட நிலை.

குருவானவரின் தன்மை மௌனம் என்று சொல்லப்படும் போது, நாம் நினைப்பது, அப்படி எனில் அவர் ஏன் பேசினார் என்று.. கேட்பவர் மௌனத்திலே இல்லாதது தான் இது நிரூபிக்கிறது... குரு பேசுகிற போது, மௌனத்திலே இருந்து குரு விழிப்பு நிலையை விட்டதாக ஒரு உதாரணம் தர முடியுமா? என்றால் முடியாது. அப்படி என்கிற போது புறத்திலே தோன்றும் ஒரு விசயத்தை விட, குருவின் தன்மை எப்போதும் உயர்ந்ததே என்று தீர்மானமாகும். வார்த்தைகளை பிடித்துக்கொண்டு குருவை தவற விடும் நிலை எப்போதும் நல்ல பலன்களைத்தராது.

நாம் இப்போது பிறர் என்றும், பிற மார்க்கம் என்றும், பிற குரு என்றும் பிரிக்கிற அனைத்தும் கூட நமது முனைப்பு எடுத்த பிற வடிவங்கள் தான். நாம் மௌனத்திலே நிலைத்தால் இதெல்லாம் இருக்கிறதா... நீடிக்கிறதா என்று தெரிந்து விடும். வெளியில் ஒரு பொருள் இருப்பதாகவும், அதற்கு வடிவம் கொடுப்பதும் எண்ணமே தான். தோற்றங்களுக்கெல்லாம் ஆதியாம் மௌனம். எண்ணத்திற்க்கு முன்னும் பின்னும் மௌனமே தான். இந்த விழிப்பு நிலையைத் தொட்டுக்கொண்டே இருந்தால், வாழ்விலே எங்கும் சிக்கல் இல்லை.

குரு பேசுகிறாரா? பேசட்டும்... குருவின் தன்மையாம் மௌனத்திலே இருந்து, அப்பா உங்களை விட்டு நான் பிரியமாட்டேன் என்று சீடன் இருக்கிற போது, அந்த நிலையிலே செயல்கள் செய்யும் போது, முனைப்பு என்பது முளைக்காது மௌனமே இந்த செயலின் மூலம் என்று ஒடுங்கும்.

தன்னுடைய இருப்பைத்தேடி சீடன் உயரும்போது, தியானத்திலே இருப்பை நோக்கி தானாகவே செல்கிறார்... அங்கே தனது இருப்பு என்பது இறை நிலையே என்கிற வாய்ப்பு மட்டும் கிடைக்கும் போது தான் சரணாகதி தேவைப்படுகிறது... சரணாகதிக்கு என்று தனியாக முயற்சி வேண்டியதில்லை... சீடன் முடிவெடுத்திருந்தால், அவனது உறுதியின் அளவுக்கு ஏற்றார் போல, மௌனத்திலே மூலத்தோடு தூக்கி நிறுத்தும் பொறுப்பு குருவுடையது... அங்கே நமது அப்பன் நின்று கொண்டே பார்த்துக்கொண்டிருக்கிறார்... பல நுண்ணிய நிலைகளின் சாரம் சீடனின் கருமையத்திலே பதிக்கப்படுகிறது. கேட்காவிட்டாலும் கூட.

அந்த நிலையிலே இருந்து, இறை நிலையிலே நுழைவதற்கு முன், இந்த மனம், உயிர் தன்மாற்றங்கள், தியானிக்கிற உடலிலே ஏற்படும் மாற்றங்கள், இதயத்தின் இயக்கம் என்ற பல வித நுண்ணிய நிலைகளின் விளக்கம் கருமையத்திலே பதிவாகி விடும். மரணம் என்றால் என்ன... நாமாகவே இதயத்தை நிறுத்த முடியுமா? நிறுத்தினால் மரணமா... நிறுத்திப்பார்க்கும் வல்லமை என அனைத்தும் குருவே ஒவ்வொன்றாக ஏற்படுத்துவார் அங்கே.. குருவானவரின் இயக்கமே அங்கே சீடனை விட முந்தியே இருக்கும்... இறைக்குள் ஒடுங்கினால், அப்போது குருவே அறிவு என்று ஒன்றாகும்.. குருவே இறை நிலை என்று ஒன்றாகும்... பிரபஞ்ச உணர்விலே எழுந்த பலவித ஓசைகள் அங்கே பதிவாகும்.. ஆழ்ந்து செல்லும் அளவுக்கு பிரபஞ்சத்தோடு கலந்து ஒன்றாகும்...

இந்த விரிவான ஆனந்தத்தைத் தாங்கிக்கொள்ளக்கூட குருவின் அருள் வேண்டும்... அங்கே இருந்து ஓடி வந்து விடுவோம்... அசைந்து விடுவோம்.. இது எமது அனுபவத்திலே ஏற்பட்டது..
மௌனத்திலே நீடித்து நிற்கும் அளவுக்கு அனைத்து விசயங்களும் இங்கே முறையாக, சீடனுக்குள் அறிவாக அமைந்து விடும். அதுவே குருவின் தன்மை.

குரு என்றால் சாதாரணம் அல்ல... அவர் உடலைக்கொண்டு இங்கே பேசுவார் ஆனால் அங்கே சீடனுக்காக தனது இயக்கத்தை எடுத்துக்காட்டிக்கொண்டே இருப்பார்... குருவைக்கட்டுப்படுத்த எவராலும் இயலாது.

ஒன்று நிச்சயம். குருவானவர் எப்போதும் தன் பிள்ளைகளுக்காக காத்துக்கொண்டு தான் இருக்கிறார். தன்னை அன்றி ஒரு பொருளும் இல்லை என்று சீடன் ஒடுங்கி நின்று உணர்ந்தால் ஒழிய புறப்பொருள்களால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததே. அங்கே குரு சொல்வார், மௌனத்தினை விட்டு அசைந்தால் பிறந்து விடுவாய். பிறந்துவிட்டால், செயல்களும் விளைவுகளும் அனுபவித்தே தீர்வாய். அதனால், கருவுக்குள்ளே பிறக்காதிரு. உம்மை அடை போல காப்பது எமது வேலை என்று நிம்மதியாக, ஆனந்தத்திலே நிலைத்து நில்..

குருவே... வாழ்க. குரு சரணம்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment