Friday, December 10, 2010

Surrender...

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.

என்றென்றும் பேரமைதியிலே திளைத்திருக்கும் குருவின் பொற்பாதங்களில் மனதை இணைத்து, பிள்ளைகளாய் பிறந்து அந்த அமைதியை எப்போதும் தவறாது பிடித்துக் கொண்டிருக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்த வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்.

நாம் எப்போதும் போல ஆனந்தமாகவே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... நாம் இந்தக்கணத்திலே மட்டும் அமைதியை தேட வேண்டியதில்லை... புதிதாக வரும் எதுவும் மீண்டும் சுவடு இல்லாத நிரந்தரமில்லாத ஒன்றாகவே தான் இருக்கிறது...

புதிய ஒன்றாக அமைதியை ஆனந்தத்தை நாம் பிரித்து அதைத் தேடிச் செல்வது என்பது திருடனே போலீஸ் வேடமிட்டு திருடனைத்தேடுவது போல என்று ரமணர் சொல்வாராம்.. சத்தியமான வார்த்தை..

தியானத்திலே நாம் உயர்ந்து வரும் தருணங்கள் எல்லாம், அடுக்கடுக்காக முறைப்படுத்தி அந்தந்த நிலைக்கு ஒரு பெயரும் தந்து இருக்கிறார்கள்... இறை நிலை தவத்திலே நாம் பழகப்பழகத் தான் உடலும், அறிவும் அதற்கேற்றார் போல நமக்கு ஒத்துழைக்கும்..

நல்ல தவத்திற்க்கு உதாரணம், அறிவானது குருவோடு ஒன்றியே இருக்கும்... குருவின் அருளைத்தவிர வேறு எந்த விசயமும் பொருட்டாக இருக்காது.. குருவின் வரியாகவே இருப்பார்... தியானத்திலே ஆழ்ந்து செல்லச்செல்ல நம் இயல்பாகிய அமைதியை அது எடுத்துச்செல்லும்... அப்போது, நம்மிடம் இருந்து வந்த பல பழக்கங்கள் எல்லாம் மாறிப்போயிருக்கும்.. வேறு ஒரு புதிய அணுகுமுறை வந்து, அந்த செயல் கூட நமது இல்லை என்ற தன்மை அறிவிற்க்கு உணர்த்திக்கொண்டே குருவிடம் நின்று இருக்கும் மனது... முனைப்பு என்பது முளைக்காத நிலையாய்... சாட்சியாய் மட்டுமே அறிவு தெளிந்து இருக்கும்.


இறை நிலையிலே தன்னை இணைத்துப்பழகப் பழக நமக்கும் இறைக்கும் இடைவெளி என்பது ஒரு மூச்சை இழுக்கும் கணத்திற்க்கும், அந்த இழுத்த மூச்சை விடும் கணத்திற்க்கும் உள்ள இடைவெளியில் கூட இறையின் இருப்பை உணர்த்தும்...

அந்த நிமிடம் தான், நாம் அந்த சாட்சி அறிவுடன் ஒன்றி விடும் சரணாகதி வாய்ப்பு கிடைக்கும்... நம் குருவை சாதாரணமாக எடை போடாதீர்கள்... அவரின் பேச்சை வைத்து, உருவத்தை வைத்து முடிவுக்கு வரவேண்டாம்... சரணாகதி வாய்ப்பு வரும் அந்த மெல்லிய மூச்சு ஓடும் கணத்தை நமக்கு அறிவால் உணர்த்துவார் குரு... அந்தக்கணம் வரை பிடிப்பை விடாது., அந்த மெல்லிய நூலிலை போன்ற பாரமே இல்லாத, உடல் பற்றியும், உடலே இல்லாததால் உலகத்தைப்பற்றிய எண்ணமே இல்லாத அந்தக்கணத்தை அனுபவியுங்கள்... இது குரு தரும் கொடை.... மூச்சை நிறுத்தினால்... இதயத்தின் இயக்கத்தை, சக்தி களத்தைத் தாண்டி நம் இருப்பும் இறையின் இருப்போடு ஒன்றாக இருப்பதை அந்த ஆற்றல் ஈர்ப்பாகவே காண்பிக்கும்...

உன்னிலே நான் அடங்க என்னுளே நீ விளங்க
உனது தன்மை ஒளிர எனதுள்ளத் தூய்மை பெற்றேன்..
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை!

என்று குருவின் வரி நமக்கும் பொருந்த... ஆனந்ததிலே கண்ணீர் பெருக்கெடுத்து (தன்னை உடலாலும்) கரைக்கும்... அது தான் குருவின் நிலை... நம் குருவானவர் 2006 புத்தாண்டிலே சொன்னது போல, எதுவும் தேவையே இல்லாத நிலையிலே இருப்பதை உணர்வோம் நாம்!

தவம் செய்யும் நாம் அருட்பெரும் சோதியை உணரும் தருணம் வரை நிறைவே கிடையாது...

தவத்திலே நாம் உயரும் போது, நம் அறிவிற்க்கு உலக விசயங்கள் எல்லாம் தடையே இல்லை... ஏனெனில், எந்தக்கணமும், இயற்கை முறையாக இயங்கிக்கொண்டே தான் இருக்கிறது. ஒரு கணமும் நெறி தவறாத நிலை தான் இயற்கை... இயற்கை நமக்கு எந்த சூழ்னிலையைத்தந்தாலும், நம் இயல்பான இறையிடம் இருந்து பிரிகிற நிலையே இல்லை...

ஏற்பின்றி தீயண்டா... பவ இருப்பு இன்றேல் ஒரு துன்பமும் வாரா!

என்பது குருவின் வாக்கு..

நமக்கு என்று உள்ளதைத் தான் இயற்கை திருப்பியக்கமாகத் தருகிறது... நாம் வாழ்த்தியதால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது எனில் கூட அந்த அமைப்பு, இயற்கையின் வலிமையே தான்...இயற்கை நினைந்தால் நம்முடைய உடலை எந்தக்கணத்திலும் எதுவும் செய்யமுடியும்...

ஆனால் அந்த துன்பமும் கூட நமக்கு இருப்பு தந்தது தான்... ஆனால் துன்பம் என்பதை எப்போது உணர்கிறோம் என்றால், நாம், நம் இருப்பாகிய இறையிடம் இருந்து பிரிந்து நம்மை உடலாக பாவித்து கற்பனை செய்து கொண்ட நேரத்திலே இருந்து தான் எல்லாமும்.....

இறையிடம் இணைந்து(தன்னை) உலகத்தை மறந்த நிலை தான் அத்வைத நிலை...அங்கே நம் இருப்பும், இறையின் இருப்பும் பிரிவற்று இருக்கிறது... இது குருவின் நிலை... குருவின் இருப்பு இங்கே இப்போதும்.. எப்போதும் உணர்ந்து கொண்டே இருக்கலாம்...

இறையை பிரிந்த கணத்திலே... அறிவு அசைவதற்கு ஏற்பட்ட இயக்கம், நம் உடலை முடிவிலே தொடுவதால் அது த்வைதம்... அந்த பிரிவை நாம் மறந்தால் அது மனது என்று அழைக்கப்பட்டு அங்கே சலனமும், சஞ்சலமும் காணப்படுகின்றது...

நல்ல தவத்திலே இல்லாதவைகள் எனில் இவைகள் தான்..., நல்லதுவும் அல்லதும், பயமும் மரணமும், துன்பமும் இன்பமும், சுகமும் துக்கமும், பகலும் இரவும்,பிறப்பும் இறப்பும், உயர்வும் தாழ்வும், நாணமும் வீரமும் இப்படி எத்தனையோ உணர்வுகள் எல்லாம் இறையை பிரிந்ததால் தான் வருகிறது...

நம் முன் தோன்றும் போரும், பகையும், பயமும் கவலையும் உண்மையில் நம்மை என்ன செய்து விடும்? இந்த உடலைத் தாண்டி நிற்க்கப்பழகி விட்டால் அந்த பயம் இருக்குமா?

குருவின் பிள்ளைகள் நாம்... குருவின் இருப்பான தூய நிலையில் நாம் எப்போதும் சேர்ந்தே தான் இருக்கிறோம்.. பிரிவே இல்லை... நம்மை சுற்றி எது நிகழ்ந்தாலும், நமக்குள்ளே உள்ள இருப்பைத்தாண்டி எதுவும் இல்லை.. நல்ல தவத்திலே, இறையை அன்றி எதுவும் காணாத போது, அறிவிற்க்கு தெளியும் நம் இருப்பு என்பது இறை தான், உடல் அல்ல என்று...

இதை உணர தவம் மட்டும் போதும்... மனம் என்பது இந்த சமுதாயத்து இயக்கப்பெட்டி... அதற்க்கு இருப்புப்பெட்டி தான் இறைனிலை... மனத்தைக்கொண்டு தான் இறையை உணர முடியும்... மனத்திலே குருவிற்க்கு இடம் கொடுத்து, மனதை உயர்த்தி, இறையும் நாமும் பிரியாத அந்த ஆனந்த நிலையே இருந்து சமுதாயத்திற்க்கு நம் மௌனத்தினால் ஆனந்தத்தை பகிர்ந்தளிப்போம்...

வாழ்க வளமுடன்..

No comments:

Post a Comment