Thursday, December 9, 2010

குருவின் வரிகள்...

குருவே சரணம்.


நிகழ்வுகள் எல்லாம் பிரபஞ்சவிதியிலே அடங்குகிறது.

பிரபஞ்ச இயக்கத்திலே எல்லா நிகழ்வும் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

நீ உன் இடத்திலே இருந்து செய்கிற செயல்கள் விதி என்றால்

விதிகளாய் நமது செயல்களை செயல்படுத்துவது யார்?


ரமணர் சிறு வயதில் மௌனத்திலே லயித்து திருவண்ணாமலையிலே இருக்க, பெற்ற தாய் தன் பிள்ளையை தன்னுடன் அழைத்துச்செல்ல திருவண்ணாமலை வருகிறார்...

அவரிடம் ரமணர் ஒரு வார்த்தை பேசவில்லை... ஆனால் அங்கிருந்த பாறையில் எழுதினார்... " அவரவர் பிராரப்தப்படி அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாய் இருக்கை நன்று"


நமது குரு நாதர் சொன்ன வார்த்தைகள் தான் அவரின் இருப்பு அல்ல.. அவரை அந்த வார்த்தைக்குள் கட்டுப்படுத்த முயல்வது முட்டாள் தனமே.

குருவின் இருப்பு, அவர் சொன்ன வார்த்தைகளைத் தாண்டி இருக்கிறது என்பதும் அவர் எங்கெல்லாம் இருக்கிறார்? நிறைவாக எங்கெல்லாம் அவரின் இருப்பு, ஆழ்ந்த தியானத்திலே பிடிபட்டது என்பதை கண்டுகொள்ள வேண்டும். "பாமர மக்களின் தத்துவஞானி" என்று நமது குருவை அடையாளம் கொள்ளும் போது, இந்த பாமரன் " நான் " தான் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்?

பாமரன் தனியாகவும், குருவை அவர்களுக்காகவும் என்று ஒதுக்கிவைத்தல் என்பது ஒரு வகையான மன விளையாட்டு தான். இந்த விளையாட்டுக்களைத் தாண்டி, அந்த மன இயக்கத்தையெல்லாம் தாண்டி குருவின் துணை எங்கு கிடைத்தது என்பதை மனதால் எளிமையாக சொல்லவேண்டும்.

அந்த பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. எளிமையாக சொன்ன கருத்துக்களை வைத்து எது வரை தவத்திலே முன்னேறி இருக்கிறோம்? அவர் வார்த்தைகளோடு அவரின் இயக்கம் எந்த அளவுக்கு நம்மை அழைத்துச்சென்றது என்பதை சொல்ல முன் வர வேண்டும். அந்த நாள், குருவின் பெருமையை நாம் பரப்புகிற நாளாக இருக்கும். அதுவரை, அவரவர் அறிவின் உயர்விற்கேற்ப குருவின் இருப்பை கணக்கெடுத்துக்கொள்வார்கள்...

வெளிப்புற வார்த்தைகளுக்கு என்று மணிமகுடம், வைரகிரீடம்,தங்க ஒட்டியானம்,சிகரம் என்றெல்லாம் நம்மை நாமே சொல்லிக்கொள்ளலாம்... ஆனால் அந்த பேச்சுக்கள் எல்லாம் குருவின் காதிலே நுழைந்து விடாது.... புகழ்ச்சிகள் காதுக்குள் நுழைத்துக்கொள்ளாத குரு, கட்டுப்படாத குரு, சீடனின் ஆழ்ந்த அணுகுதலுக்கு திருப்பியக்கமாய் எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறார்.

ஒருவர் துணிந்து சொல்வது, அவர் தன் உடலை மையமாகக்கொண்டே தான்... ஆழ்ந்த தியானத்திலே இந்த ஆபரணங்கள் எல்லாம் நிலைப்பதில்லை.... அப்பா என்றால் உடனே பொறி புலன்கள் எல்லாம் கூட குருவினால் கட்டுப்படுத்தப்படுவதை, தியானத்திலே அவரின் உதவி கிடைப்பதை உணரவேண்டும்... அது தான் சீடனுக்கு அழகு. அந்த ஆழ்ந்த தியானத்தின் அணுகுதலிலே குருவின் துணை நம்மோடு தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதை சொல்லவேண்டும்.

தொடர்ந்து வந்த குருவின் உதவி, நமக்கு எதுவரை தியானத்திலே உயர்த்தி இருக்கிறது என்பதை கால நீள அளவுகளைத் தாண்டி தவத்திலே உணரவேண்டும்...

ஒரு முறை அல்ல, தியானத்திலே அமரும்போதெல்லாம் குருவின் துணை கூட வருவதை அலட்சியப்படுத்தாது உணர்ந்துகொண்டே உயர்ந்து இன்புற வேண்டும். அந்த இன்பம் தான் நமக்குத் தேவை...

வேதத்தினை வைத்துக்கொண்டு அதை சுற்றி வந்து பூசை செய்து, படையல் இட்டால், வேதத்தின் சாரம் நமக்குள் வந்துவிடுமா? யாரை திருப்திப்படுத்த இந்த புகழ்ச்சி மாலைகள்? எது நிறைவு பெறும் இந்த புகழ்ச்சிகளால்?

நித்தியமாம் பெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர்? யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை

சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப்பற்றை
செதுக்கிக்கொண்டே இருக்கும் விழிப்பு வேண்டும்

என்ற குருவின் வரிகள் ஞாபகத்திற்க்கு வருகிறது.

எது " நான்" என்று இருக்கிறேனோ, அதுவே தான் மெய்ப்பொருள் என்பதை தவத்தினாலன்றி யார் பெறுவார்? யார் தருவர்?

இந்த எளிமையான வரிகளின் அர்த்தத்தினை தவத்திலே உணர்ந்து சொல்ல முன் வருபவர்கள் எத்தனை பேர்?


வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment