Friday, December 10, 2010

ஐந்து புலன்கள் அடங்க வழி!!!

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.


மனது கொண்டு நாம் செய்வது கூடாது என்று சொல்லும் போது, எப்படி என்று கேட்கிறார் ஒரு நண்பர்! மனது இல்லாமல் நாம் தியானத்திலே ஒவ்வோர் கட்டத்திலே மாற்றுவது எங்ஙனம் என்று ஒருவர் கேட்கிறார்!

நமக்கு குருவின் மூலம் கற்றுத்தரப்பட்ட தியானத்திலே, ஒருவர் நமக்கு அன்னியமாக வெளியில் இருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர் தனது எண்ணத்தினை ஒவ்வோர் கட்டமாக பிரித்து பிரித்து இறை நிலை வரை கொண்டு செல்கிறார்.

ஆனால் நாம் இந்த தியானம் ஆரம்பத்திலே கொடுக்கப்பட்ட ஒரு புத்தகம் தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். சொல்லித்தரப்பட்ட தியானத்தினை நாம் தனியாகச் செய்யும் போது, நாம் வழக்கம் போல சொல்லிக்கொண்டே செய்கிறோம்! ஆக்கினை, துரியம்,துவாதசாங்கம்,... இப்படி விரிந்து விரிந்து நாம் இறை நிலை தவம் செய்கிறோம்...

பெரும்பாலான தியான அனுபவத்தை சொல்லும் போது, எங்கோ எழுதியதை, நீங்கள் படித்ததை திருப்பி திருப்பிச் சொல்வது போல இருந்தால், அது தான் தங்களுக்கு வரும் விசயம் என்று எடுத்துக்கொள்வது நல்லது. ஏற்காத ஒன்றை, இறைவன் அடிக்கடி கேட்க வைக்கிறான்.. என்று எடுத்துக்கொள்ளலாம்!

இந்த தியானம் என்பது நம்மை கடற்கரையிலே தான் வைத்திருக்கிறது... இன்னமும் அலையைத் தாண்டவில்லை, சீற்றத்தை உணரவில்லை... சீற்றம் வரும் போது நாம் எப்படி அதை எப்படி கையாள்கிறோம் என்று நமக்குத் தெரியவில்லை! கடினமான சூழ்னிலை வரும் போது அதை தீர்க்க நாம் செய்ய வேண்டும் என்ற அனுபவமில்லை! இப்படி கடற்கரையிலே நாம் எதுவும் தெரியாது நிற்கிறோம்.. அது தான் இந்த தியானம் செய்யும் நாம்!

முறையான தேடல் என்பது, குருவை நோக்கி தானாக எடுத்துச்செல்லும் அறிவு!

குரு சொல்லித்தந்த இறை தியானத்திலே, அவரை நினைப்பதற்க்கு எங்கும் சொல்லித்தரப்படவில்லை! அதனால் நாம் அவரை நினைப்பதில்லை! ஆனால் இறை தியானம் செய்யும் போது, மனதிலே எண்ணம் வந்து கொண்டு இருக்கிறது, மனது தானே, சந்திரன் சூரியன் சக்தி களம் என்றெல்லாம் சொல்கிறது?

சக்திகளம் என்பது அசைவை குறிப்பது! சிவகளத்திலே மனது நின்று கொண்டு சூனியம், ஒன்று மில்லை. ஒன்றுமே இல்லை! என்றெல்லாம் எப்படி சொல்ல முடியும்? மனதால் அறிய முடியாத இறைவெளியிலே மனதை கொண்டு நாம் எப்படி தியானம் செய்ய முடியும்? இது தான் நாம் நமது தியானத்தினை மனது கொண்டு செய்வது கூடாது என்று நான் எழுதியது!

ஆரம்பத்திலே நமக்கு சொல்லப்பட்டது தான்! ஆனால் இறை வெளி என்றவுடன், பஞ்ச பூதங்களின் தன்மாற்றமான ஐந்து புலன்களும் அடங்கி இருக்க வேண்டுமே! அது நமது இறை நிலை த்யானத்திலே நடந்ததா?

அப்படி நடக்கவேண்டும் எனில் என்ன செய்யவேண்டும் என்று தான் நாம் யோசிக்கவேண்டும்!

போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன் என்று மாணிக்கவாசகர் திருவாசகத்திலே சொல்கிறார்!

ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, முடிவற்றதும் விளக்கமற்றதும், எல்லையற்றதுமாக இருக்கிறது என்று வேதமும், கீதையும், எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கிறது!

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை

என்றார் நமது குருனாதர்!


எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்!

என்ற இந்தக்கவியை சொல்கிற போது,

எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்!

என்கிறார்..

மனம் என்ற ஒன்றில் குரு இல்லாத போது, இயந்திரத்தினை போன்ற தியானம் தான் இருக்கும்!

குரு நுழைந்தால் அன்றி, ஐந்து புலன்கள் அடங்க வழி இல்லை!

குருவின் அளவு தான் இறையை உணர முடிவதன் அளவு!

மனதிலே குருவை கொண்டு வந்து கொண்டே இருத்தல் அவசியம்! ஐந்து புலன்கள் அடங்கும் போது தான் தியானம் தொடங்கும்!

அதுவரை சுவிட்ச் போட்டால் பாடும் ரேடியோவைப்போலத்தான் நமது தியானம் இருக்கும்!

நீங்கள் கேட்ட பாடலாக நமது தியானம் மறு ஒளிபரப்பாகும்!

ஐந்து புலன்கள் அடங்கிய மறு கணம், மனம் தனது மூலமான உயிரிலே ஒடுங்கும்! உயிரானது அதன் மூலமான அறிவை நோக்கி விரியும்!

ஸ்தூல உடலினை விட்டு சூக்கும உடலை பற்றிக்கொள்ளும் நமது உயிர்... அந்த பிரிவு தான் நமது மரணமானது சுகமான ஒன்று நமக்கு சொல்லும்.

இந்த உடலை விட்டு உயிர் பிரிவது துக்கமாக கொள்கிறோம் அல்லவா... ஆனால் உடலானது அசைவற்று இருக்க, எந்த தேவையுமின்றி, இச்சையின்றி குரு சொல்லாஇ இருக்க, நாம் கைகள் கோர்த்தபடி, நமது சாட்சியாய் இறையை வைத்து, அந்த அறிவாகிய இறையே சாட்சியாய் நின்று, இந்த ஸ்தூலத்திலே இருந்து சூக்கும உடலை மாறுவதினை எடுத்துக்காட்டும்!

அது தான் மனித உடல் மரணமடையும் போது நிகழ்வது! ஆனால் தியானத்திலே மரணத்தை தாண்டி சென்றாலும், விழிப்பான ஒன்றாய் நம் அறிவுடன் இணைந்து இருக்கிறோம் நாம்!

ஐந்து புலன்களை கடக்கும் வரை, குரு என்ற அணுகுதல் முக்கியம். அடங்கிய பிறகு, குருவின் தன்மையாய் நம்மை மாற்றும். அதாவது, சூக்கும உடலிலே இருந்து முறையாக எழுச்சியுடன் அந்த ஈர்ப்பு விசையால், இரும்பை நோக்கி இழுக்கும் காந்தமாய் ஓடும் அந்த உயிர்!

அப்போது நம் மனது இல்லாத போனாலும் கூட, அறிவாகிய இறையே நம் உடலில் இருந்து தன் பாதையினை எடுத்துக்கொண்டு செல்லும்... தன் மூலத்தை நோக்கி செல்வதால் அது நமது அனுபவத்திற்க்கு, நம் உயிரை இழுத்துக்கொண்டு போவது போலத் தோன்றும்! சரணடைந்தால், முக்தி! மனம் இல்லாத தியானம் நமக்குத் தேவை, மனதால் செய்யப்படும் தியானம் சரியல்ல என்று எழுதும் போது, உங்கள் மனம் புண்பட்டு இருக்கும்! ஆனால் உயர்த்துவதற்க்காகவே அனைத்தும் என்று உணரா பிறப்புகளை வாழ்த்துவதை தவிர, குருவோடு இணைந்து அந்த அலைகளை சந்திப்பதை தவிர எமக்கு வேறு வழி இல்லை!

என்னென்னவோ தேவையில்லாத செயல்கள் செய்யும் நாம் அதற்க்கெல்லாம் பயப்படவா செய்கிறோம்? இறை தியானத்திலே சிவகளத்திலே கூட குருவை நினைத்துக்கொண்டே செய்யலாம்! நன்மையே விளங்கும்!


குருவை நோக்கியே இருக்கிற எந்த பிள்ளையும், குருவானவர் ஒரு கணமும் விட்டுப் பிரிவதில்லை! எந்த அலையும் கரையினைத் தாண்டி வந்ததில்லை! அலையைத்தாங்கும் ஆழ்கடலைப்போல குரு நம்முடன் இருந்து, யாம் இருக்க பயம் ஏன்? என்று குரு கேட்கிறார்!

அப்பா.. தந்தையே!

வாழ்க வளமுடன் அம்மா!

No comments:

Post a Comment