Friday, December 10, 2010

குருவின் இயக்க நிலை!!

வாழ்க வளமுடன்.


குருவே சரணம்.


நாம் என்ன நிலையிலே இருக்கிறோம் என்பதை நமது செயல்கள் காட்டுகின்றன. நமது எண்ண அலைகளின் தன்மை என்பது தான் நாம் பொதுவாக நம்மை கவனித்துக்கொள்ளும் நிலை...

ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமக்கு இருக்கும் அனுபவமானது ஒரு புறமாகவும், நமது பழக்கங்கள் எல்லாம் மறுபுறமாக இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதை பார்க்கும் போது நமது ஆன்மீக உயர்வு நமக்குப்புரியாது போகிறது.

அறிவிலே இருந்து சிறிது அசைந்தாலும் கூட நாம் தவறு செய்யும் வாய்ப்பு இருக்கவே தான் செய்கிறது. விழிப்பு நிலையிலே நாம் நம்மை தொடர்ந்து வைத்துக்கொண்டே தான் இருக்கவேண்டும். இல்லாவிடில் ஒரு கணத்திலே நாம் தவறு செய்துவிடுவோம்...

அந்த தவறு நமது பிறப்பால், சூழ்னிலையால், வளர்ப்பால், பிறரின் தூண்டுதலால் என்று பல காரணங்களில் நாம் தவறினை செய்து விடுகின்றோம். தவறு செய்யும் அந்தக்கணம் நாம் அறிவிலே இருந்து விழிப்பு நிலையை மாற்றி விடுகிறோம். தவறிழைத்த பிறகு நாம் மீண்டும் புரிந்து கொள்ளுவது என்னவெனில், நாம் விழிப்பிலே இருந்து தவறினோம். மேலும், செய்த தவறின் விளைவினை பார்த்த பிறகு சில நேரத்திலே நம்மை மாற்றிக் கொள்கிறோம்.


ஒரு சம்பவம் இந்த கணத்திலே நினைவிற்க்கு வருகிறது.


ஆதிசங்கரர் அத்வைதத்தை பரப்ப காசி நகரத்திலே பயணம் கொண்டிருந்தார்.

நான் ஆகாயம் இல்லை... நிலம் இல்லை, நீர் இல்லை பஞ்ச பூதங்களில் ஒன்றுமே இல்லை. இந்திரியங்கள் ஒன்றும் இல்லை. நோய் இல்லை, பயம் இல்லை, மரணம் இல்லை. முடிவற்றதும் விளக்கமற்றதுமாக இருக்கிற சிவம் மாத்திரமே நான் " என்று சிறு வயதிலே சங்கரர் தன் குருவின் முன் அத்வைதத்தை சொல்ல ஆரம்பித்தவர்.

சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருக்கையிலே , எதிரில் கள்ளுப்பானையை சுமந்து, அழுக்கு உடையோடு தள்ளாடியபடி, நாய்கள் சுற்றி குரைத்துக்கொண்டே வந்த அந்த நபர் தன்னை நோக்கி வந்த போது, சுற்றி இருந்த சீடர்கள் சங்கரரிடம், அந்த நபர் நம்மை நோக்கியே தான் வருகிறார் என்பதால், நாம் வேறு திசையிலே சென்று விடலாம் என்கின்றனர்..

அந்த நபர் தொடர்ந்து தன் எதிரில் வந்து நின்ற நிலையிலே சங்கரர், விலகிப்போ என்கிறார்.

அந்த செயல் செய்த கணத்திலே தான் சங்கரர் தன்னை விழிப்பிலே இருந்து பிறழ்ந்த கணமாகிப்போனது... எதிரில் வந்தவர் சங்கரரிடம்,

நீங்கள் எதை விட்டு விலகச்சொல்கிறீர்கள்? ஆன்மாவையா? தேகத்தையா? ஆன்மா என்றால், செயலற்றதும், முடிவற்றதுமானதுமான அது எப்படி விலகிச்செல்லமுடியும்?

தேகத்தைத்தான் விலகச்சொன்னீர்கள் என்றால், எல்லா தேகங்களும் ஒரே பொருளைக்கோண்டு படைக்கப்பட்டவை அல்லவா? மேலும், தேகம் ஜடம் அல்லவா? அதனால் எப்படி ஒன்றிலே இருந்து விலகிசெல்ல முடியும்?

நீங்கள் எனக்கு இட்ட ஆணை என்ன? அறிவில் இருந்தும் விலகிப்போக வேண்டுமா? என்று கேட்டபோது சங்கரர் பதில் சொல்ல முடியாது தடுமாறுகிறார்.

எந்த கணத்திலே விழிப்பு நிலையாம் மெய்ப்பொருளில் இருந்து அசைந்து உடல் சார்ந்த பழக்கமான அந்த ஆச்சார உணர்வில் இருந்து ஒரு வார்த்தை சொன்னாரோ, விழிப்பு நிலையாம் அந்த அத்வைத சித்தாந்தத்திலே இருந்து விலகி தனது பிறப்பால் உடல் சார்ந்து ஒரு வார்த்தை உதிர்த்தாரோ அப்போதே,அந்தக்கணமே தவறு நிகழ்ந்தது..

அந்த அழுக்கு நபரிடம் விழிப்பு நிலை இருந்தது. அவரின் கால்களில் விழுந்து சரணடைந்து, நீங்களே என் குரு என்று வணங்குகிறார் சங்கரர்.

அப்போது சங்கரர் முழுமையாக ஞானமடைகிறார்.


ஒரு சிறு அசைவு கூட நாம் விழிப்பிலே இருந்து விலகி செயல்கள் புரிய வாய்ப்புகள் அதிகம்.

ஆசை தூங்கும் இதயத்தின் அசைவு கூட மொழியாகும்.. என்று கவிஞர் வைரமுத்து சொல்வார்...இச்சையில்லாத போது ஒரு அசைவு ஏற்பட்டால் கூட, நாம் நமது முழுமையிலே இருந்து விட்டு விலகுகிறோம்.. விழிப்பிலே இருந்து விலகுகிறோம்.. அந்த அசைவு என்பது ஏற்பட்டது, எதையோ மொழியால் விளக்குவதற்க்குத்தான்!

மௌனத்தினை விளக்கிச்சொல்ல முடியாத போது, மொழி இல்லாத போது, இதயத்தை அதன் மையமாம் இறையிலே துடிக்கவிடல் சரியாகாது!

நமது குரு சொல்வார்..

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை!

இந்த இயக்கமின்றி என்ற சொல்லானது, நமது உடல், மனம், இதயம் என்று எதுவும் இறையிலே இயக்கமின்றி இருப்பின், அதுவே ஈசன் நிலையாகும் என்கிறார்.

அந்த அறிவிலே தோய்ந்திருப்பின், அசையாது இருப்பின், " நான்" என்ற முனைப்பு எழ வாய்ப்பில்லாது போகிறது. குருவோடு நீடித்து நிலைத்து இயங்க முடிகிறது!

அந்த நிலையிலே குருவின் இயக்க நிலை!குருவை எப்போதும், எந்தக்காலத்திலும் அங்கே இருப்பாய் உணரலாம்... குருவைதேடுவோர் அங்கே இருக்கிறார் என்பதை உணரலாம்.



வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment