Thursday, December 9, 2010

Guru-- A Glimpse

வாழ்க வளமுடன்.


அவ்வளவு சீக்கிரம் என்னைக்காத்தும் அரவணைத்தும் உயர்த்தி வைத்தும் செதுக்குகிற என் அன்னையாம் குருவின் அருளை சொல்லி முடித்து விட முடியுமா?


சொல்ல சலிக்காத, ஆழ்ந்த நிலையிலே தொடர்ந்து எம்மோடு ஒரு கணமும் அயராது இயங்குகிற குருவே, என் தாயே, இந்த பிறப்பிலே எம்மை தம்மோடு ஈர்த்து தன் நிலையினை உணர்த்துகிற தந்தையே, உங்களின் பெருமையை சொல்லிக்கேட்பதும் கூட பெரிய சுகமே!

வெறும் ஜடமாக இருக்கிற இந்த தேகத்திலே உயிரின் இருப்பிடத்தை உணர்த்திய கருணையே, இந்த ஜடத்திலே இருந்து உயிரை பிரித்து எடுக்கும் வல்லமையை தந்தருளி, ஜடத்திலே உயிர் என்ன? மரணம் என்பது என்ன என்பதை உணர்த்திய உம்மை என்னவாறு சொல்லி பெருமைப்படுவேன்?

கேட்காத பல கேள்விகள் என்னுள்ளே இருந்ததா என்று அறியாத நிலையிலே, இந்த உயிரின் ஆழ்ந்த வேட்கையினை, அதன் திசையிலே உயர்த்தி, பல மறை பொருள் அனுபவத்தினை எம்முள் நிகழ்த்திய சிவமே...

மனம் என்ற புலனை அடக்க பாடாய்படும் களத்திலே, ஐந்து புலன்கள் என்ற குதிரை வண்டியிலே இந்த சுந்தரனுக்கு சாரதியாய் என்னுள்ளே புலன்கள் கட்டுபடுத்தும் நெறியை தந்து, அறிவுக்குள்ளே எம்மை ஏற்று, அந்த பேரறிவின் சுவையைத் தந்த மாணிக்கமே, உம் இருப்பை எப்படி வெளியிலே வாயால் வார்த்தையாய் சொல்வேன்?

உம்மை மட்டுமே நினைத்துக்கொண்டு உங்கள் பாடலை புலம்பும் ஒரு தனிமை மனிதனுள், உன்னுடைய அன்பின் அளவிற்க்கு என்னுடைய நெருக்கும் இது தான் என்று காட்ட எமது உடலை பயன்படுத்தி ஈர்த்துக்கொண்டு தியானம் நிகழ்த்திய அருளே, உம்முடைய இருப்பை உணர்ந்த பிறகு, உமது இருப்பிடம் எதுவென்று சொல்லிக்காட்டிய ஆற்றலே... கருணைக்கடலே... தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை தரத்திலே உயர்த்தி... என்ற வார்த்தையை செயல்படுத்திய சிவமே, உம்முடைய ஆழ்ந்த ஆற்றல் நிலையை என்னவென்று புகழ்வேன்? மௌனத்தை புகழ வார்த்தை வரவில்லையே அப்பா... மௌனத்திலே கரைவதை விட என்னால் எதுவும் உங்களுக்கு செய்யமுடியவில்லையே என்ன செய்வேன்?

இந்த உடலை கடந்து நின்று ஸ்தூலம், சூக்கும நிலைகளை உணர்த்தி, காரண சாரத்தை நோக்கி எம்மை இழுத்துச்செல்லும் பெருமாளே...இந்தக்கணமும் கூட உங்களோடு சரணடைகிறேன்... வேறேதும் வேண்டாம்... வேண்டாமையே வேண்டும் எப்பிள்ளையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

குருவே சரணம்.

No comments:

Post a Comment