வாழ்க வளமுடன்.
உயிர் என்ற ஒன்று உடலோடு இருந்தியங்கும் போது, உயிரினை நாம் தனியே உணர முடிவதில்லை. ஏனெனில், உயிர் என்ற ஒன்று, அறிவின் தன்மாற்றத்தினால் தான் ஏற்பட்டிருக்கிறது. அறிவு அசையாது இருந்தால் அங்கே இருப்பு தனித்து இருக்கிறது. எப்போது அறிவு அசைகிறதோ அங்கே உயிராகவும் பிறகு மனமாகவும் மாறி விடுகிறது.
ஆனால் அறிவாக இருக்கும் போது நமக்கு மனம் என்ற ஒன்று இருப்பதில்லை. அசையாததால் உயிராக உணர நாம் அங்கே இருக்கவில்லை.
தவத்திலே நாம் அமர்ந்திருக்கும் போது, மனத்தினால் தான் இறை நிலை வரை சொல்லிக்கொண்டே உயர்கிறோம்.
மனதுக்கு அங்கே வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்...
ஆனால், அந்த மனதை இறை வெளியிலே ஆழ்ந்து உயர்த்தி அங்கே ஒன்றுதலினை உணர ஆரம்பிக்கும் போது, இறையின் தன்மையாக நம் மனது தன்மாற்றமாகிய எழுச்சியைப் பற்றிக்கொள்ளும். பொதுவாக நாம் அது நிகழ அனுமதிப்பதில்லை.
உடலானது அசையாது இருக்கிறது. உயிர் உடலில் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் மனதால் மட்டுமே இறை நிலையிலே இருக்கிறோம். (ஆழ்ந்து மனதை செலுத்தாததால்).
மனதால் ஆழ்ந்து குருவிடம் இறை நிலையிலே சரணடையும் போது, எண்ணமானது குறைந்து வரும். முற்றிலும் எண்ணம் குறையும் போது மனமானது அடுத்த தன்மாற்றமான உயிர் என்ற தன்மையினை நமது உடலிலே இருந்து பிரித்து எடுத்துக்காட்டும். அப்போது மனமானது செயல் இழந்து விட்டிருக்கும். ( இது தான் மரணத்தின் போது நிகழ்வது!... இதுவே மரணம்!)
உடலிலே இருந்து உயிர் பிரிந்து விட்டது... ஆனால், மனத்தின் அலையை குறைத்து நாம் இறையின் அலைக்குள் சரணடைந்து விட்டதால், உயிரானது தானாகவே தனது அடுத்த தன்மாற்றத்தினை நோக்கி உயரும்... அதாவது, உடலிலே இருந்து எழுச்சி பெற்று இறை என்ற பதத்திலே அதன் தன்மையினை எல்லாம் எடுத்துக்காட்டும்.
ஸ்தூல சரீரம் தனித்து இருக்கும். சூக்கும சரீரம் உடலிலே இருந்து இறை வரை தனது பாதையினை விரித்து எடுத்துக்காட்டும். அப்போது அதன் முழுமையினை நோக்கி தானாகவே ஈர்த்துக்கொள்ளும். அங்கே அறிவு தனித்து இருப்பாகும். அந்த முழுமையிலே உடலை கடப்போம், தன்மாற்றத்தினை உணர்வோம். அறிவாவோம். அதன் பிறகு குரு என்ற கருணை நம்மை எதற்க்காக இதை எல்லாம் தந்ததோ அதை நமக்கு
நிரந்தரமாக்கி, அனுபவத்தினை அறிவிற்க்குள் வைத்து விடும்.
சரி, உணர்ந்தாகிவிட்டது... திருப்தி கண்டவுடனோ அல்லது நோக்கம் முடிந்த உடனோ, அறிவிலே இருந்து அசைவினை எடுத்துக்காட்டும். அசைந்த உடன், மறுகணத்திலே தன்மாற்றம் அடைந்து மனமாக மாறி நிறைவு பொங்கி வழியும்.
இதற்க்கு மேல் சொல்லுவதற்க்கு ஒன்று இருக்கும்... அது குருவைப்பார்த்து,
உன்னிலே நான் அடங்க என்னுளே நீ விளங்க
உனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றென்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...
என்று குருவின் வரியாய் அந்த அப்பனிடமே சொல்லி ஆனந்தத்தினால் அழுவோம்... அப்பனே இத்தகைய பேற்றினை தந்து விட்டீரே, நான் உங்களிடம் சரணடைந்ததிற்க்கு நீங்கள் எனக்கு இந்த அளவிற்க்கு ஆனந்தம் தந்து விட்டீரே என்று சொல்வோம்.
எது குரு பெயர்ச்சி? குருவை நோக்கிய பெயர்ச்சி நாம் மேற்கொள்ளவேண்டியது.. அப்போது தான் குரு பெயர்ச்சி!
இது வரை உங்களுக்காக என்னால் அவ்வப்போது எழுத முடிந்தது எல்லாம் குருவை நோக்கிய பெயர்ச்சியினால்... நிறைவு கிட்டும் போது தான் அது இவ்வளவு நாள் கிடைக்காமல் இருந்து இருக்கிறது என்று புரியும். வழி கிடைத்து விட்டால் நிறைவிலே இருந்து பிரியவே மாட்டோம்.
இது வரை எழுதியது குரு பெயர்ச்சி பலன்கள்!
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment