வாழ்க வளமுடன்
குருவே சரணம்.
பிறந்து விட்ட மனிதனுக்கு இறப்பு என்பது அவசியம் இயற்கையிலே நிகழ்வது நியதி.
ஆனால் ஆத்ம ஞானமாகிய இறை உணர்விலே கலந்தவர்களாகிய மகான்கள் எல்லாம் எப்போது உடலை கடந்து இறையிலே கலந்தார்களோ அப்போதே உடல் என்ற வாகனத்தை இயற்கையாகத் தாண்டிச்சென்றார்கள்..
நாம் சராசரியானவர்கள் என்று நம்மை அடையாளப்படுத்தும் போது, நமக்கு இறப்பு என்பது ஒரு கடுமையான விசயம் என்று ஆகிறது. உடல் என்ற பற்றை ஏற்றுக்கொள்ளாதது ஒரு புறமும், உடலைத் தாண்டி நிற்கிற மகான்கள் கூட உடல் மீது பற்று கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்..
இந்த உடலில் இருந்து உயிரை எழுப்பிய போது எப்படி குருவின் அருள் நம்மை காக்கிறதோ அது போலவே உடலிலெ இருந்து நிரந்தரமாக பிரியும் மரணம் கூட இன்பமாக இருக்கவேண்டும் அல்லது அதை ஏற்கும் துணிவும் நமக்குள்ளே நிரந்தரமாக வேண்டும்.
பிறப்பு என்பது உடல் பிறந்தது என்று மட்டுமில்லாமல், எண்ணத்தின் பிறப்பு என்றும் எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணத்தின் இறப்பு என்பது எப்படி மௌனமாக இறை நிலையிலே கரைகிறதோ, அப்படியே தான் இந்த உடலை நிரந்தரமாக பிரியும் போது கூட இறை நிறையிலே நமது எழுச்சி சென்று அடங்க வேண்டும்..
நமது குரு மன வளக்கலை புத்தகத்திலே பிறப்பிற்க்கும் முன்னும், இறப்பிற்க்கு பின்னும் உயிரின் நிலை என்ற தலைப்பிலே சொல்லும் போது...
இறை நிலையிலே நிலைத்து கரைந்து நின்று பழக்கப்பட்ட உயிரானது, உடலை நிரந்தரமாக மரணம் நேரும் கூட, பழக்க அறிவாக, தானாகவே இறை நிலை நோக்கி சென்று இறை நிலையிலே கரைந்து விடும்.
இந்த மரணம் என்ற நிலையை ஏற்பதற்க்கு மரணம் எப்படி என்பதை தியானத்திலே உயிரை உடலை விட்டு பிரிக்கும் வல்லமை வேண்டும். அது குரு என்ற அருள் ஒன்றினால் தான் தர முடியும்... எத்தனை மணி நேரம் 20 நிமிட தவமாக செய்தாலும், குருவை அண்டாத வரை நாம் சராசரியாகவே இருப்போம்...
குருவானவர் சமாதி அடைந்தது நமக்கு எப்படியோ, ஆனால் அவருக்கு அதை எதிர்பார்த்து காத்திருந்தார் என்பது உண்மை. அது இறையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாகத் தான். ஈர்த்துக்கொள்ளும் அந்த கருணையின் நிலையை உணர்ந்து அதிலேயே கரைந்து நின்ற்தால் தான்.
உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும் என்கிற குருவின் கவிதையை படிக்கும் போதெல்லாம் கண்களில் நீர் பெருகும். குருவானவர் சமாதி அடைந்தது, உடல் என்ற ஒன்றை விட்டு விட்டதால் அல்ல அந்த கண்ணீர்.... குருவானவர் நம்மைப்போலவே பிறந்து, ஆனால் எப்பேர்ப்பட்ட மனோ நிலையை குணத்தைப்பெற்றிருக்கிறார் என்பதை பார்த்துத்தான்... அது போல நாமும் இருக்கவேண்டும் என்கிற ஆதங்கத்தினால் தான்..
தியானத்திலே அவ்வப்போது பேரானந்தத்தினை உணர்ந்தபோது நமக்கு எப்படி இருந்ததோ அது நிரந்தரமாக இருக்கப்போகிறது என்கிற யதார்த்தம் தான் மரணத்திலும் இருக்கிறது.
அதனால் தான், அருள் நிறைந்த பெருஞ்சோதி என்னை அரவணைத்துக்கொள்ளும் அந்தப்பெரு நன்னாளை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்.. என்று கவி பாட முடிந்தது.
ரமணர் தமது கடைசி நாட்களில், உடல் மிக பலவீனம் அடைந்து இருந்தார். அவரது உடலிலே இருந்த புற்று நோயின் வலியானது ஏற்படுத்தும் வலியானது தாங்கவே முடியாததாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்... ஆனால் அவரின் முகத்திலே அந்த வலியின் சுவடுகள் இல்லை...
படுத்த படுக்கையிலே இருந்த தன்னை எழுந்து தவ நிலையிலே அமர வைக்கச்சொன்ன ரமணர், தனது கண்களை மெதுவாக திறந்து தன் முன் அமர்ந்திருந்த பக்தர்களை பார்த்து மெதுவாக புன் முறுவல் பூத்தாராம். மெதுவாக கண்களை மூடிய உடன், பக்தர்கள் அருணாசல சிவ அருணாசல சிவ என்கிற வரியை பாட ஆரம்பித்தார்களாம்.
மீண்டும் கண் திறந்த ரமணர், அந்த மந்திரம் எழுந்த திசை நோக்கி தெளிவாகப் பார்த்தாராம்... கண்களிலே இருந்து நீர் கொட்டியதும், மெதுவாக மீண்டும் கண்ணை மூடி, 2 ௩ முறை சுவாசத்தினை இழுத்தவர், மீண்டும் மூச்சை விடவே இல்லை...
அவர் சமாதியிலே ஆழ்ந்து போனார்....
எவ்வளவு தவம் செய்திருப்பார்... தமது உடலால் முடியாது படுத்த நிலையிலேயே இருந்த ரமணர், சமாதி அடையும் போது மீண்டும் தவ நிலையிலே அமர்ந்தார் பாருங்கள்... அது தான் பழக்க அறிவு...
இந்த பழக்க அறிவிற்க்காகத் தான் கண்ணீர் வர வேண்டும்.
அந்த பழக்க அறிவு நமக்குள் ஏற்படும் வரை குருவைத் தொடர்ந்து அணுகவேண்டும்..
நமது குரு அடிக்கடி சொல்வார்...
என்னை ஏன் இரண்டு பேர் தோள்களில் பிடித்திருக்கிறார்கள் தெரியுமா? என்னை விட்டு விட்டால் போய் விடுவேன் என்பதால் தான்.
எனது உடல் நிலையினால் தான் இந்தக்கட்டுப்பாடு... உடலை விட்டு இறை நிலையோடு கலந்து நிற்கிற நிலையிலே எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாது எங்கும் எம்மால் செல்ல முடியும் என்றார்... இதை வாழும் போதே கண்டம் விட்டு கண்டம் தனது நிலையை காட்டியவராயிற்றே..
நம்மில் எத்தனை பேரால் இப்படி இருக்கமுடியும் என்று தான் கண்களில் நீர் பெருகுகிறது...
நமது குரு சமாதி அடைவதற்க்கு முன் சிகிச்சைக்காக மருத்துவ அவசர சிகிச்சைக்கு போகும் முன், நமது பொறுப்பாளர்களிடம் குருவானவர், " சரி. நான் போகிறேன்". என்றாராம்.
" என்ன சாமி இப்படி சொல்றீங்களே.. போய் வருகிறேன் என்று சொல்லுங்கள்.." என்றார்களாம்.
குருவானவர் சிரித்துக்கொண்டே "சரி.. உங்கள் விருப்பம் போல போய் வருகிறேன்" என்று சொன்னாராம்...
நமது உடலில் உயிரை வைத்து தியானம் செய்தால் கூட, இறை என்ற அந்த ஈர்ப்பு நிலையின் தரிசனம் கிட்டும் போது, இறையின் ஈர்ப்பின் முன் நமது முனைப்பு தானகவே சென்று ஒடுங்குகிற உண்மை ஒரு புறம் இருக்கிறது...
எல்லை இல்லா ஆனந்த நிலையிலே இறை அமைப்பானது,பெருஞ்சோதியாக ஈர்த்துக்கொள்ளும் ஆனந்த நிலைக்காக 20வருடத்திற்க்கும் மெலாக எதிர்பாத்தவர் நமது குரு.
குருவை விரும்புதல், அணுகுதல் என்கிற அனைத்தும் நம்மை குருவின் தன்மையாகவே மாற்றும் என்ற இயல்பூக்க நியதியை மனதில் கொண்டு, குருவை அணுகுவோம்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment