வாழ்க வளமுடன்.
குருவே சரணம்.
ஆழ்ந்த இறை பற்றிய சிந்தனை என்பது நமது மூச்சுக்காற்றினை சீராக்குகிறது...
குருவின் மீதான தொடர்ந்த சிந்தனை என்பது மனதின் ஓட்டத்தினை மாற்றி ஆன்ம லயத்திற்க்கும் முடிவில் தியான உயர்வுக்கும் வழி நடத்துகிறது.
குருவின் எந்த ஒரு கவியும், இறை அனுபவத்தை சொன்ன வரிகளை படிக்கும் ஒவ்வோர் கணமும் ஒன்றி நின்றால் ஆனந்தத்தினால் உணர்வுப்பூர்வமாக கண்களில் நீர் அரும்பும்...
சில நேரங்களில் குருவின் வரிகளை ஓரிரு வரிகளைத் தாண்டி படிக்கமுடியாமல் பாதியிலேயே படிக்கமுடியாமல் கண்களிலே நீர் கொட்டும்... இறை மேல் குரு நாதர் கொண்ட அன்பின் அதிர்வே படிப்பவருக்குள்ளும் பிரதி பலிக்கும்... இயல்பூக்க நியதியாகும்.
எண்ணத்திலே குரு நிறைந்தால், எந்த குருவின் வரியும் படிக்கும் போதும் கூட அந்தந்த வரிகளின் மூலத்தினைப்பற்றிய தன்மை படிப்பவர் உள்ளத்திலே மலரும்.
மௌனமாக மக்களுடன் அமர்ந்திருந்தார் ரமணர்...
அறை முழுவதும் குண்டூசி விழுந்தாலும் ஒலி கேட்கும் அளவுக்கு நிசப்தம்...
தேவாரம் ஓதப்பட்டது... ரமணர் அமைதியாக அனைவரையும் கவனித்துக்கொண்டிருந்தார்...
முதல் வரியைத் தாண்டி இரண்டாம் வரி பாடும் போது.... மெல்லிய சூரிய வெளிச்சம் ரமணரின் முகத்திலே விழுந்தது... அப்போது தான் தெரிந்தது... அவர் கண்களிலே நீர் பெருக்கெடுத்து விழுந்து கொண்டிருப்பது.... அத்துடன் தேவாரம் ஓதுவது நின்று போனது... மௌனத்தினை தொடர்ந்தார் ரமணர்...
பகவான் ராமகிருஷ்ணர் தியானத்திலே லயித்து சமாதியில் இருப்பதை வரைந்து, அதை குருவிற்க்கு அன்பளிப்பாக அளித்தார் ஒரு சீடர்.... கையால் வாங்கிய ராம கிருஷ்ணர், அந்த படத்திலே உள்ள அவரின் காலை தொட்டு வணங்கினார்...
சமாதி நிலையை வணங்கியதாய் விளக்கினார் குரு..
எப்போது எந்த இறைவனின் பாடலைப் பாடினாலும், நன்றாக ஆழ்ந்து அழுதுவிடுவாராம் ராமகிருஷ்ணர்.
ஒரு சிலருக்கு இது உணர்ச்சிப்பூர்வ நிலை என்று தோன்றினாலும், எந்த நிலையால் உணர்ச்சிப்பூர்வமான நிலை ஏற்படுகிறது என்பதை கவனிக்கும் போது நமக்கு அதன் உண்மை விளங்கும்.
இறை தன்மையினை, அந்த ஈர்ப்பிலே லயிப்பை, மனம் என்ற ஒன்றைத் தாண்டி மரணத்தினை கடந்து நின்று உயிரின் தன்மாத்திரை தனை உணர்ந்து அறிவிலே நிலைத்து இருப்போரை, இறை பற்றிய எந்த ஒரு பேச்சும், இறையை குத்திக்காட்டும் எந்த வரியும் கூட ஆழ்ந்த நிலையை எளிதிலே எடுத்துச்சென்று விடும். இது கண்களைத் திறந்து இருக்கும் சமாதி நிலை.
விளக்கப்பட்ட வேதங்களின் விளக்கங்கள் எல்லாம் ஆழ்ந்த தவத்திலே ஒடுங்கி நின்று அசையும் கணத்தின், அந்த ஒரு நொடியிலே நமக்கு ஒட்டிக்கொள்ளும்.
கால்களை சுகாசனத்திலே மடக்கி வைத்து சில நிமிடம் அமர்ந்தாலே மூச்சு சீராவதை கண்டு ஆழ்ந்து அழுது விம்மி இருக்கிறேன் குருவிடம்... அப்பா என்று!
கைகள் கோர்த்து இருக்கும்.... விலக்கப்பிடிக்காது... மூச்சு சீராகி கண்ணை மூடிக்கொள் என்று உள்ளே இருந்து மீற முடியாத கட்டளை உதிக்க, நொடிப்பொழுதிலே அசைவற்ற எண்ணமற்ற களம் மனதுக்குள் நிறையும்...
அந்த எண்ணமற்ற,அசைவற்ற நிலையிலே இருந்து அப்பா, அம்மா.. குருவே... தந்தையே என்று வழக்கமாக பயன்படுத்தும் எந்த ஒரு வார்த்தையும் தவத்திலே இழுத்துக்கொண்டு போகும்... அந்த இறைஞ்சும் ஒரு வார்த்தையானது எங்கே நம்மை கொண்டு போகிறது என்பதை தவத்திலே பார்க்க முடிகிறது....
ஆழ்ந்த எண்ணமற்ற நிலையில், அசைவற்று விழிப்புடன் மிளிர, அம்மா என்ற அந்த வார்த்தை மலரும்...கண்களிலே நீர் ததும்பும்... அடக்கமுடியாதால், அசைவு ஏற்பட்டு தவத்திலே இருந்து அசைவு ஏற்பட்டுவிடும்...
மனதின் ஓட்டத்திற்க்கும் மூச்சுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது... எப்போது குருவின் மீதான ஆழ்ந்த எண்ணம் நமக்குள் நிறைகிறதோ அப்போது எண்ணத்தின் ஓட்டமானது குலைந்து போகும்.. எண்ணம் குறைந்த உடன், மூச்சு சீராகும். அப்போது கண்ணைத் திறந்து நாம் எந்த காரியம் செய்து கொண்டாலும், கண்ணை மூடவே செய்யும்... இது தவத்தின் இயல்பு. தவிர்க்கும் பட்சத்திலே பெரும்பாலும் கடினமாகத்தோன்றும். இந்த வாய்ப்பு திரும்பி கிடைப்பது கடினம் என்பது அனுபவம்.
தவத்திலே மனதைக்கடந்து இறைவெளியிலே அசைவற்று நிலைக்கும் போது உதிரும் வார்த்தையானது, குருவே, அன்பே என்று இருக்கும் போது, அதுவும் கூட தன் ஆன்ம நிலையின் மறு வடிவமே.. அதுவும் தானே என்று ஆனந்தம் பொங்கும்...
குருவானவர் தன்னைத் தவிர வேறு எதுவும் காண்பதில்லை என்கிற அத்வைத வாசகம் தவம் செய்து லயிக்கும் சீடனுக்கும் கூட பொருந்தி விடும்.. இதனாலே தான், குருவானவர் யாரையும் தன் காலில் விழக்கூடாது என்றார்... சீடன் என்று எவரும் இல்லை... தான் எதுவோ அதுவே தான் எதன் மூலமும் என்று மௌனத்திலே இருந்து விலகாமல் குரு திளைக்கிறார்.
குருப்ரஹ்மா குருவிஷ்ணு குருதேவோ மகேஸ்வரஹ:
குரு சாட்ஸாத் பரப்ரம்மா:
என்ற வரிகளில் சொல்வது போல, குருவே தான் அனைத்தும் என்று எடுத்துக்காட்டி, தன்னுடைய இருப்பு இறை வெளி என்று உணர்த்தி, அணுகும் எவரையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டு விடுகிறார் குரு... அதுவே முக்தி!
குருவே... அன்பே.
No comments:
Post a Comment