வாழ்க வளமுடன்
குருவே சரணம்
குருவின் எந்த ஒரு அசைவிற்காகவும் எதிர்பார்க்காது பொறுமையோடு காத்திருக்கும் மனோ வலிமையினை குருனாதர் தந்திருக்கிறார்...
குருவின் கவிதைகளையெல்லாம் மனம் விரும்பி தொடர்ந்து மனதிற்க்குள்ளும், தனியாக இருக்கும் போதெல்லாம் வாய் திறந்து சொல்லிக்கொண்டே இருந்த காலங்கள் எல்லாம், தியானத்தில் அமர்ந்த சில கணங்களிலேயே எண்ணமில்லா ஆழ்ந்த தியான நிலையிலே எம்மால் தொடர்ந்து நீடித்து நிலைத்திருக்கிற தன்மை கிடைத்த போது தான், குருவின் அருள் இயங்கிக்கொண்டே இருக்கிற உணர்வு எமக்குள்ளே ஆழ்ந்து பதிந்தது...
அப்போதெல்லாம் தியானத்திலே அமர்ந்த சில நிமிடத்திற்க்குள்ளாகவே, சிவ களத்திலே ஆழ்ந்து நீடித்தது போல ஒரு நிலையை எமது உடலும், மனமும் பெற்று இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்...இந்த மாதிரி எம்மை தயாரிக்க யாம் என்ன செய்துவிட்டோம் என்று பார்த்த போது குருவின் வார்த்தைகளை, கவிகளை நினைத்தது, மகிழ்ந்தது, ஆனந்தத்தினால் அழுதது தவிர எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்த மன நிலை தான் எமக்குள்ளே எண்ணங்கள் புகாத ஒரு இயல்பை தியானம் செய்யாத கணங்களில் ஒரு அரணாகவே இருந்திருப்பதை தியானத்திலே அமர்ந்த போது தான் என்னால் உணர முடிந்தது... அது வரை ஒரு கருவியைப் போல தொடர்ந்து குருவின் கவிகளை பாடிக்கொண்டே இருந்தேன்... குருவின் பாடலினால் என்ன விளைகிறது என்று நோக்கும் எண்ணம் கூட வந்ததில்லை... எதிர்பார்க்கவில்லை அறவே...
வேலைக்குப்போவது, வீட்டிற்க்கு வருவது, சமைப்பது, உண்பது, விரும்பிய தேனீரை குடித்து விட்டு தியானம் செய்வது என்று நேரம் கிடைத்த போதெல்லாம் குருவே தான் எமக்கு என்று எதையும் எதிர்பார்க்காத ஒரு நிலையினூடே தியானம் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன்....
மொரீசியஸிலே தங்கி இருந்த அந்த வீட்டிலே, எந்த நண்பர் வந்தாலும் கூட, அமராத ஒரு மர நாற்காலி இருந்தது.. யாரும் அமரமாட்டார்கள்...உட்கார்ந்தால் கீச் என்று சத்தம் எழுப்பும்... இதை எனது தியானத்திற்க்காக எடுத்துக்கொண்டேன்... அதிலே அமர ஒரு நான்கு முழ வேட்டியை மடித்து வைத்து தியானம் செய்வேன்... எப்போதெல்லாம் உடல் சிறுது அசைந்தாலும் அந்த நாற்காலி அலாரம் அடித்தது போல சத்தம் போட்டுவிடும்... ஆனால் எம் அன்னையாம் குருவையே நினைத்து நனைந்து வாழ்ந்த அந்த காலத்திலே செய்த தியானத்திலே,ஒரு முறை கூட அந்த நாற்காலியிலே அமர்ந்து செய்த தியானத்திலே ,ஒரு அசைவும் ஏற்பட்டு எமது தியானத்தினை தடுத்ததில்லை.. குருவே என் உடலை அசையாத நிலைக்குப் பழக்க செய்த ஏற்பாடாக எண்ணுகிறேன்...
நான் தனியாக தங்கி இருந்தேன்... அந்த மாடி வீட்டிலே இரண்டாம் தளத்தில் எமது இருப்பு... எமக்கு தெரிந்த அன்பர்கள் அங்கு சுற்றியும் இருந்தாலும், எம்மை யாரும் தொல்லை தந்ததில்லை... வேலை, வீடு, தியானம்,கவிதை என்ற எல்லாம் குருவின் மீதான எண்ணத்தின் நடுவிலே தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருந்தேன்..
குருவின் மீது கொண்டுள்ள எண்ணமானது தியானத்திலே எம்மை தொடர்ந்து வைத்திருப்பதை என் உடலிலே ஏற்பட்ட அந்த மாற்றங்களால் புரிந்துகொண்டேன்.. அப்போது தான், குருவின் இயல்பூக்க நியதி கவிதை எமக்கு ஒத்துப்போவதை உணர்ந்தேன்...
எப்பொருளை எச்செயலை எக்குணத்தை எவ்வுயிரை
ஒருவர் அடிக்கடி நினைந்தால் அப்பொருளின் தன்மையாய்
நினைப்போர் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்
இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்...
குருவின் பாடல் எம்மை தியானத்திலே ஆழ்ந்து செல்ல உதவியது... இது எதிர்பார்க்காத ஆழ்ந்த மாற்றங்கள்...
ரமணர், ராகவேந்திரர், குருவின் வாழ்க்கை வரலாறு, புத்தரின் வாழ்வும் வாக்கும் என்று எமக்குள் இருந்த இறை பற்றிய தேடல் எல்லாம் புத்தக வடிவிலே படிக்கிற வாய்ப்பும் ஏற்பட்டது...
மகான்களின் வார்த்தைகள் எல்லாம் எமக்குள்ளே உள்ள தன்மையை மெகுகேற்றியது... மகான்களின் அனுபவங்கள், அவர்தம் வாழ்விலே நிகழ்ந்த நிகழ்ச்சியினை படித்தபோதெல்லாம் அடக்க முடியாமல் அழுது விடுவேன்... ஏனோ கல் நெஞ்சை எமக்குள் தரவில்லை...
குருவின் வாழ்க்கை வரலாறு படித்த போது, மழலையை தன் மேல் படுக்க வைத்த தாய்,மழலை எழுந்த போது மழலையின் தலையானது தாயின் வாயில் பட்டு பல் உடைந்து விடுகிறது... குழந்தையோ அந்த வலியிலே அழுதது... தாய்க்கோ, அய்யோ குழந்தை அழுகிறதே என்ற தவிப்பே தான் இருந்தது தவிர தன் பல் உடைந்து வாயில் ரத்தம் வடிவது கூட தெரியாத அளவிலே இருந்ததை, நமது குருவின் வார்த்தையிலே, அவரின் வாயால் கேட்டு, அவர் அந்த ஆனந்தினால் அழுததும், அவரோடு நாங்களும் அழுது இருக்கிறோம்...(சென்னையில்) இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் இப்போது நினைத்தாலும் கூட எம்மை கரைத்து விடுகிறது...
பெரியபுராணத்திலே, கண்ணப்பரின் கதையை ரமணர் சொன்னாராம்... சுவாரசியமாக சொன்ன கதையிலே, லிங்கத்தின் கண்களில் ரத்தம் வடிவதைப் பார்த்து பொறுக்காத கண்ணப்பர்,தன் கண்ணைப்பிடுங்கி அந்த லிங்கத்தின் கண்களில் பொருத்துகிறார்... உடன் அடுத்த கண்களிலே இருந்து ரத்தம்.... கண்ணப்பருக்கோ, தாள முடியாது, தன் கால்களினால் அந்த ரத்தம் வடியும் கண்ணை அழுத்திக்கொண்டு, தன் இரண்டாவது கண்ணையும் பிடிங்க முயன்ற போது, அசரிரீ ஒலித்தது... " கண்ணப்பா... நிறுத்து"....
" கண்ணப்பா... நிறுத்து" என்ற வார்த்த சொன்ன நேரத்திலே, ரமணரின் குரல் தழுதழுத்து... கண்களிலே நீர் கொட்டியதாம்... மேற்கொண்டு படிக்க முடியாமல் அப்படியே பெரிய புராண புத்தகத்தை மூடி வைத்தாராம்...
இந்த வரியை படிக்கும் போது படிப்பவருக்கும் கூட அந்த உணர்வு பிரதிபலிக்கும்... எம்மால் சிறிதும் பொறுக்கமுடியாது அழுது விடுவேன்...
இந்த மாதிரியான நெகிழ்வான நிகழ்வுகள் எல்லாம் நாம் தெரிந்துகொண்டு மகான்கள் வாழ்ந்து நிகழ்த்திச்சென்ற நேரடியான அறிவுரைகள் எல்லாம் வாழ்க்கையிலே நமக்கு பெரிதும் உதவும் என்பது தான் எமது அனுபவம்...
குருவின் கவிகளோ அல்லது அவருடான மன அலைத் தொடர்போ சீடனின் தியான உயர்வுக்கு ஒரு படி என்பது உண்மை.
எதையும் எதிர்பார்க்காத சீடனுக்குள் எந்த நேரத்திலே, காலத்திலே எதனை நிகழ்த்துவது என்று குருவானவர் தொடர்ந்து தன் உடல் இருப்பைக்கடந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்.. இயற்கையிலே இணைந்து பெரிய ஆற்றல் களத்திலே அவர் எங்கும் எப்போதும் சென்று சேர்ந்து விடுகிறார்... குரு தன் உடலால் ஓர் இடத்திலே இருந்து கொண்டிருந்தாலும், அணுகும் சீடனுக்காக கண்டங்களைக் கடந்தும் ஒரு கணத்திலே தன் அருளைத் தந்து விடுவார்...
குருவானவர் சீடனாக எவரையும் பார்த்ததில்லை... ஆனால் தன்னை அணுகும் எந்த ஒரு சீடனையும் கண்டுகொள்ளாது விட்டதுமில்லை... காலம் கனிந்து வர, சீடனுக்குள்ளே அனுபவமாக குருவே தன் இருப்பைக் காட்டுகிறார்.
குருவை மனதில் நுழைத்தால், குருவென்ற இருப்பிற்க்குள் சீடன் புகுந்து விடுகிறான்..
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment