குருவே சரணம்,
சகஜ வாழ்விலே ஒரு முன்னுதாரணமாக எப்போதுமே நமக்கு ஒருவர் தேவைப்படுகிறார். முறையாக ஒருவர் உண்மையான நோக்கத்துடன் உயர நினைக்கும் போது,அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கக்கூடிய, அதுவும் வாழ்ந்து காட்டிய குரு ஒருவரின் தொடர்பு கிட்டி விடுகிறது.
முறையான சாதகம் என்பது ஏற்பட்டால் அன்றி குருவின் இருப்பை உணர்வதும், அதனோடு கலப்பதும், அதனை உணர்வதும் இயலாத ஒன்றாகி விடுகிறது.
குருவை நாம் எப்படி புரிந்து கொண்டு இருக்கிறோமோ அவ்வளவே தான் நமது தியானத்தின் உயர்வின் அளவு. அந்த அளவே தான் நமது தியானத்திலே உணரப்போகிற உண்மையின் அளவு.
மௌனத்தோடு ஒன்றிய புத்தரின் இருப்பு இந்த பூமியிலே இருந்த போது, அவரைச்சுற்றி சீடர்கள் எண்ணிறந்த பேர்கள் இருந்தார்களாம். அவர் மௌனமாக இருப்பது மட்டுமின்றி, சுற்றி இருந்த சீடர்கள் பலரும் கூட மௌனத்திலே ஆழ்ந்த நிலையிலே இருந்தார்களாம்.
எந்த ஒரு மனிதனும் சீடன் ஆகும் வரை சராசரியாகவே இருக்கிறான். எப்போது குருவை சரணடைந்து விடுகின்றானோ அப்போதே அந்த சராசரியான மனோ நிலையிலே இருந்து விடுபட்டு, அணுகிய குருவின் தன்மைக்கு ஏற்றார் போல மாற்றி அமைக்கப்படுகிறான்.
வலிமை மிக்க ஒரு சீடன் என்பவன் குருவின் இருப்பை உணர்ந்த கணத்திலே இருந்து மாற்றவே முடியாத சூழ்னிலையிலே இருப்பான். சரணடைந்த பிறகு, சீடனுக்கு குருவே தான் அனைத்தும் என்றாகிறது. எங்கெங்கு சுற்றினாலும் கூட, புலி வாயில் அகப்பட்ட இரை விலங்கு போல குருவின் இயக்கத்தினை விட்டு, அந்த அற்புத ஆற்றல் களத்தை விட்டு விலகாத, விலக்க முடியாத ஒன்றாகவே சீடன் இருந்து விடுகிறான்.
சரணடைகிற வரை, சீடனுக்கு உடல் உண்டு. தன்னுடைய உள்ளார்ந்த கருத்தைப்போலவே தான் குருவின் இருப்பின் மேல் கொள்கிற பற்றும் கூட வைத்திருப்பான் சீடன். எப்போது தன்னுடைய இருப்பு என்பது உடல் தாண்டிய ஒன்று என்று புரிந்து கொள்கிறானோ, தவத்திலே எல்லை இல்லாத ஆற்றல் கணத்தினை உணரும் போது, தான் உடலைத் தாண்டி சென்று விடுவது மட்டுமின்றி, தனது உயர்வினைத் தாண்டி குருவின் இயக்கம் இருப்பதும், குருவும் தாமும் ஒன்றே என்று உணரும் போது, உடல் என்ற பற்றினை கடந்து நிற்கிறான்.
புத்தர் மகா சமாதி அடைந்த போது, சீடர்களில் பலர் தங்களது ஞான நிலையிலே இருந்த தங்களுடைய சராசரி மனோ நிலையினை வெளிக்காட்டிக்கொண்டே இருந்தார்களாம். ஆனால் அவரது சீடர்களிலே சிலர் மட்டுமே தான் எந்தவித அசைவும் காட்டிக்கொள்ளாதவர்களாக, மௌனத்தினை விட்டு விலகாதவர்களாக இருந்தார்களாம்.அவர்களைப் பொறுத்தவரை, உடல் என்ற பற்றை முற்றிலும் துறந்தவர்களாக இருந்தது மட்டுமல்லாது, குருவின் இருப்பை விட்டு வெளியே வராதவர்களாக குருவை விட்டு பிரிக்கவே முடியாதவர்களாக இருந்தார்களாம்.
இன்று புத்தரின் பெயரால் மதம் என்று இருந்தாலும் கூட, புத்தரின் ஞான நிலையினை பரப்பியதிலே இந்த ஆழ்ந்த சீடர்கள் தான் வரலாற்றிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் தான் புத்தரை பற்றி நமக்கு கொஞ்ச நஞ்சம் பேச விசயம் கிடைத்து இருக்கிறது.
எந்த ஒரு மகானைப்பற்றி படிக்க நேர்ந்தாலும், அவரோடு இருந்தவர்கள், பார்த்தவர்கள், உதவி கிடைக்கப்பெற்றவர்கள், அருளை அடைந்தவர்கள் என்று பல வகையிலே சீடர்கள் இருப்பதும், இவர்களில் பலர், குருவின் இறப்போ அல்லது சமாதி நிலைக்கு பிறகோ தங்களுடைய துக்கத்தை, உடல் என்ற பற்றை விட்டு விடாதவர்களாக இருப்பதும், தங்களுக்கு இன்பம் என்பது குருவின் பௌதீக இருப்பின் மீது கொண்டுள்ள பற்று என்பதும் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சீடனின் உண்மையான நிலையினை காலமே வெளிப்படுத்திவிடுகிறது.
குரு சமாதி அடைந்து விட்டால், சீடனுக்கு துக்கம். கவலை எல்லாம் வந்து விடுகிறது.. இதை எந்த ஒரு மகானின் வாழ்க்கை வரலாறு படித்தாலும், குருவை சந்தித்தவர்கள் எல்லாம் குருவின் சமாதிக்குப்பிறகு தங்களின் நிலையை சொல்லாமல் இருக்க முடிவதில்லை. வாய் திறந்து தங்கள் குருவின் மீது சொல்லும் துக்கமாக இருந்தாலும் அங்கே குருவை ஞான நிலையிலே இருந்து தவற விட்டு விட்டு, உடல் என்ற கட்டுக்குள்ளே மீண்டும் சீடன் புகுந்து விடுகிறான். இந்த மாற்றத்தினை சீடன் கண்டுபிடிக்காவிட்டாலும் அல்லது மறைத்தாலும் கூட, காலத்தே அந்த உண்மை வெளியில் வந்து விடுகிறது.
எப்போது மௌனத்தினை விட்டு அசைந்த நிலை ஏற்படுகிறதோ, எப்போது மௌனத்தின் மீது உள்ள பற்று விலகுகிறதோ அப்போதெல்லாம், உடல் என்ற பற்று என்பது எந்த ஒரு மனிதனுக்கும் இயற்கையாகவே ஒன்றாக இருக்கிறது.
உடல் என்ற ஒன்றைக்கடந்த குருவானவர், தனது உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை விரும்ப மாட்டார்கள்... புத்தர், ரமணர்,ராம கிருஷ்ணர், வள்ளலார்,வேதாத்திரி மகரிஷி என்று எந்த மகானும் தங்களுடைய உருவ வழிபாடு செய்வதை ஊக்குவித்தது இல்லை.
சமீபத்திலே, பரமக்குடிக்கு எங்களின் குழந்தைக்கு குல வழக்கப்படி, காது குத்துவதற்க்கு சென்று இருந்தோம்...
அங்கே ஒரு ஆபரணக்கடையிலே, நமது குருவின் போட்டோவிற்க்கு குங்கும சந்தனப் பொட்டு வைத்து இருந்தார்கள்... இன்னமும் பூஜை செய்யாததால் சாம்பிராணியும், பூவும் இல்லாது இருந்தது... அந்த போட்டோவைப்பார்த்து, என்னப்பா இது என்று கேட்டுப்பார்த்தேன்... அன்று, அந்த போட்டோவிலே உள்ள குருவின் புன்சிரிப்பு, அவர் என்னைப்பார்த்து கேலியுடன் நகைப்பது போல இருந்தது.
குருவானவர் சீடனின் மதி மயக்கத்தினை விரும்பாதவர் என்பதால், குருவை அணுகாத வரை,குருவின் பேச்சுக்கள் கூட எவரையும் மாற்றாது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். உண்மை நிலைக்கு, இயல்பாக உள்ள இறை அருள் நோக்கிச்செல்லட்டும் என்று வாழ்த்தி விட்டு நகர்ந்தோம்.
No comments:
Post a Comment