வாழ்க வளமுடன்.
குருவே சரணம்.
இறை நிலையை உணரச்சென்ற பலரின் அனுபவங்கள் எல்லாம் என்ன தான் விளக்க முடிந்தாலும், அவை எல்லாம் தனிப்பட்ட மனிதனின் அனுபவத்தினை முழுவதுமாக எடுத்துச்சொன்னதாக ஆகாது. எழுத்துக்கள் என்பது எடுத்துக்கொடுப்பதாகவும், அனுபவத்தின் சுவடுகளாகவும் இருக்கிறது என்பது உண்மை. இதுவே யதார்த்தம்.
மகான்களின் வார்த்தைகள் எல்லாம் மௌனத்திலே இருந்து அசைந்ததால் உருவானதாகவே இருக்கிறது.
இதயத்தின் வலப்பகுதியே சிவ நிலை என்கிற ரமணரின் வாக்கு உண்மையே. குண்டலினி யோகத்தினை குருவின் வழியிலே கற்று, குருவோடு இணைந்த மனோ நிலையுடன் நாம் செய்கிற தவம் எல்லாம், அஷ்டாங்க யோகத்தினை நமக்கு உணர்த்திவிட்டே தான் சமாதி நிலை அனுபவத்திற்க்கு கொண்டு செல்கிறது.
ராஜ யோகத்திலே அஷ்டாங்க யோகம் விளக்கப்பட்டு இருக்கிறது.
யாம, நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரண, தியான, சமாதி என்கிற எட்டும் சேர்ந்தது தான் அஷ்டாங யோகம் எனப்படுகிறது.
தியானத்தின் உயர்விலே இறை நிலையினை உணர்வதற்க்கு இந்த அஷ்டாங்க யோகம் வழி என்று சொல்வது உண்டு.
அடிப்படை கோட்பாடுகள், ஒழுக்கமான உணவு, பழக்க வழக்கங்கள், குருவின் மந்திரத்தினை உச்சரித்தல் ( கவிகளை மந்திரமாகக்கொள்ளலாம்), அதே மனோ நிலையை தொடர்ந்து நிலைப்படுத்திக்கொள்ளுதல், சுகாசனமோ அல்லது பத்மாசனத்திலோ அமர்ந்து முதுகுத்தண்டை மூச்சை முறைப்படுத்தி நேராக்குதல், உடலிலே உள்ள ஓட்டங்களை எல்லாம் எண்ணத்தினை குறைப்பதின் மூலம் குறைத்துக்கொள்ளுதல், மூச்சை இழுத்து உள்ளே நிறுத்துதல், மூச்சை உள்ளே இழுத்தி அடக்குதல் (கும்பகம்) என்று படிப்படியாக குருவினால் நமக்குள்ளே தரப்பட்டு, மன ஓட்டத்தினை கடக்கும் தியானம் ஏற்படுகிறது.
தியானம் என்பது மனது கடக்கும் போது தான் ஆரம்பிக்கிறது.
அந்த தியானம் தொடர்ந்தால், ஸ்தூலத்திலே இருந்து சூக்கும, காரண சரீர நிலைகளின் அனுபவம் ஏற்படுகிறது.
எப்போது சூக்கும நிலையினை கடக்கிறோமோ அப்போது, ஸ்தூல உடலிலே கவனிக்கும் போது காரண சரீர பேரானந்த அனுபவம் ஏற்படுகிறது. அந்த நிலையிலே தான் நமது பௌதீக இதயத்தின் இயக்கத்தினை நிறுத்திப்பார்க்கும் வல்லமை கிட்டுகிறது.
இதயத்தின் இயக்கத்தினை நிறுத்தியதும், சூக்கும உயிரை இறை நிலையின் எல்லையற்ற ஆற்றல் ஈர்த்துக்கொள்ளும்.
கொஞ்சம் பின்னோக்கிப் கவனித்தால், இதயத்தை நிறுத்திய கணத்தில் கூட, பௌதீக இதயம் நின்றாலும் கூட நமது இருப்பு இறை நிலை என்பதை அறிவு பதிவு செய்கிறது.
தியானத்திலே, இதயத்தை நிறுத்தும் போது, இதயமானதை சுற்றி இறை நிலை இருப்பதும், இறை நிலையிலே இதயத்தின் துடிப்பு நிகழ்ந்து நின்று போவதும் தெரிகிறது... பௌதீக இதயம் நின்ற உடம், நிற்கவே நிற்காத இதயமான இறை நிலையின் பேரெழுச்சி நம்மை ஆட்கொள்கிறது...
எப்போது அசைவு ஏற்படுகிறதோ அப்போது பௌதீக இதயத்தின் துடிப்பு ஆரம்பிக்கப்படுகிறது...
இந்த உடல் நான் அல்ல... பௌதீக உடலின் இதயம் நிரந்தரமல்ல... எப்போது தியானத்திலே இதயமானது சுற்றி உள்ள இறையோடு கலந்து விடுகிறதோ அப்போதே இதயம் என்றால் அது இறை நிலையே என்று ஆகிகிறது...
ரமணர் தனது அனுபவத்திலே சொல்லும்போது,
பௌதீக இயக்கத்தைத் தாண்டி தமது பேரறிவோடு கலந்து விட்டேன்.. அப்போது தான் நிறைவு கொண்டேன்.. எப்போது அனுபவம் அடைந்தேனோ அப்போது, பௌதீக இதயத்தின் வலப்பக்கத்திலே இருந்து இதயத்தின் இயக்கத்திற்க்கு மின்சாரம் பாய்ந்து இயக்கத்தை தூண்டுவதை உணன்ர்தேன்".
இந்த அனுபவத்தால் தான் இதயம் என்றால் வலப்பக்கம் என்று ரமணர் அடிக்கடி சொல்வார்..
இதுவே அசைவு ஏற்பட்டதன் தொடக்க நிலை.. நம்மால் கிரகித்து பதிவு செய்து கொள்ளக்கூட நுண்ணிய அளவிலே அணுகக்கூடிய வல்லமை வேண்டும்.
குருவின் மேல் உள்ள தொடர்பு என்பதும்,அவரை நினைப்பதும், கவிகளைப்பாடுவதும் தான் எமது முழு எழுத்துக்கும் மூலமும் காரணமும். நமக்குள்ளே முறையாக எந்த அறிவைத்தரவேண்டுமோ அது தரப்பட்டு விடும். அஷ்டாங யோகமும், பயனாம் சமாதி நிலை அடையும் வரை குருவே வருவார்... நம்மை ஒவ்வோர் படியாக ஏற்றி விடுவார்.
சமாதி நிலையினை ஒருவர் உணர்கிறார் என்றால் ராஜ யோக நிலையாம் அனைத்தும் நமக்குள்ளேயே நிகழ்த்தப்பட்டு விடுவதை கண்டு குருவை நினைந்து வாழ்த்தி வணங்கி ஆனந்தம் அடையலாம்.
எம்மை பொறுத்த் வரை ரமணரின் அத்வைத அறிவுரைகளும், தவ உயர்வுகளும் நமது குருவினால் யாம் கண்ட அனுபவத்தோடு ஒத்து வருவதும் பேதங்கள் கடந்து ஒன்றாகவே இருப்பதும் சத்தியம்.
குருவே சரணம்...
No comments:
Post a Comment